அன்னை 16 : அமைதிப்பணிக்கு அனுமதி

அன்னையின் குழுவில் ஒரு மாணவி இணைந்த செய்தியைக் கேள்விப்பட்டு இரண்டாவதாக வந்தார் மகதலேனா எனும் மாணவி.

இவரும் அன்னையின் பணியில் தங்களை இணைத்துக் கொண்டார்.

அன்னை தன்னுடைய பணியில் இணைந்த மாணவியரை அழைத்துக் கொண்டு மரியன்னை ஆலயத்திற்குச் சென்று இயேசுவுக்கும், மரியன்னைக்கும் நன்றி செலுத்தினாள்.

அன்னை மகிழ்ந்தாள்.

மாணவிகள் பணியில் இணைகிறார்கள் என்னும் செய்தி மரியன்னை பள்ளிக்கூடத்தில் பரவியது.

மாணவிகள் மேலும் சிலர் அன்னையின் பணியில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

இரண்டு நான்காகி, நான்கு பத்தாகியது. அன்னையின் பணி விரிவடைந்தது.

எல்லா சகோதரிகளும் அன்னையின் பணியை அப்படியே பின்பற்றினார்கள். முழு விருப்பம் இல்லாதவர்கள் விலகிவிடலாம் என அன்னை ஒவ்வொருவரிடமும் தனித் தனியே பேசியிருந்தார்.

ஆனால் பணியில் துணிவுடைய இளம் பெண்கள் தங்கள் வாழ்க்கையை சமூக நலனுக்காகவும், மனித நேயப் பணிகளுக்காகவும் அர்ப்பணிக்க முன் வந்தனர்.

நோயாளிகளையும், ஏழைகளையும் தேடிச்சென்று உதவினர். உதவி செய்யும் போது முகத்தை எப்போதும் புன் முறுவலுடன் வைத்திருப்பது அவர்களுடைய வழக்கம்.

ஏழைகளுக்குப் பணிசெய்வது தமக்கு கடவுள் அளித்த வரம் என்பது போல அனனவரும் பணியில் ஈடுபட்டனர்.

அன்னை தன்னுடைய பணியின் முழு விவரங்களையும் பேராயருக்கு அனுப்பிக் கொண்டிருந்தார்.

பேராயரின் அனுமதி மிகவும் முக்கியமானது என்பதை அன்னை அறிந்திருந்தார். அன்னையின் வழிகாட்டியான தந்தை வான் எக்சமிற்கு அன்னை தனது பணிகளைக்குறித்தும் தனது குழப்பங்கள், தயக்கங்கள், இயலாமைகள் என அனைத்தைக் குறித்தும் விரிவாக தெரிவித்து வந்தார்.

அன்னையும் சகோதரிகளும் தங்களுடைய பணிகளைச் செய்து வந்தனர். உதவிகள் பல இடங்களிலிருந்தும் வந்து கொண்டிருந்தன.

உதவிகள் கிடைக்கும் போது அந்த பொருட்களை அன்னை அதிக பட்ச மரியாதையோடு எடுத்து வருவார் அன்னை. எதையும் வீணாக்குவதோ, அலட்சியமாய் பார்ப்பதோ இல்லை.

ஒருமுறை அன்னை பிச்சை எடுக்க கையை நீட்டியபோது ஒரு கனவான் அன்னையின் கைகளில் காறி உமிழ்ந்தான். அன்னை புன்னகையுடன் அந்த கையைப் பொத்தினாள்.

“எனக்கு இது போதும். சேரியில் வாழும் எனது சகோதரர்களுக்கு ஏதேனும் கொடு” என மறு கையைக் காட்டினாள்.

கனவான் கலங்கினான். அன்னையிடம் மன்னிப்புக் கேட்டு தாராளமாய் உதவிகளைச் செய்தான்.

“ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும் காட்டு” என்னும் இயேசுவின் வார்த்தையின் உள் அர்த்தம் அன்னைக்கு விளங்கியது அப்போது தான்.

அன்னை இத்தகைய அவமானங்களை அவமானங்களாய் கருதாமல் வெகுமானமாய் கருதியும், தன்னுடைய இறை அன்பை சோதிக்கும் நிகழ்வுகளாகக் கருதியும் சிரமமின்றி ஏற்றுக் கொண்டார்.

அன்னையின் இந்த பணிகளையெல்லாம் தினமும் கவனித்து வந்த பேராயர் அன்னையின் பணிகளைக் கண்டு சிலிர்ப்படைந்தார். அன்னையின் பணிகள் தான் உண்மையான இறை பணி என்பதை உணர்ந்தார்.

பேராயர் முடிவெடுத்தார்.

அன்னையின் பணிக்கு அங்கீகாரம் வழங்க வேண்டும்.

1950 ஆம் ஆண்டு அன்னையின் பணிக்கு திருச்சபையின் அங்கீகாரம் கிடைத்தது.

1950 அக்டோபர் 7ம் ஆண்டு போப் அன்னையின் பணிக்கான அங்கீகாரத்தை வழங்கினார்.

அன்னை ஆனந்தமடைந்தாள். இறைவனுக்கு நன்றி கூறினாள்.

அன்னையின் பணி இன்னும் தீவிரமடைந்தது.

ஒரு இஸ்லாமியரின் வீடு வாடகைக்கு வந்தது. அதை விற்று விட்டு பாகிஸ்தான் சென்று குடியேற அவர் பிரியப்பட்டார்.

அன்னை அவரைச் சென்று சந்தித்து தனது இல்லத்துப் பணிக்காக அந்த வீட்டை விலைக்குக் கேட்டார்.

அந்த மனிதர் அன்னையின் பணிகளைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்தான். அவன் அன்னை தன்னுடைய தேவையை விவரித்து முடிந்ததும் கண்கள் பனிக்க அன்னையைக் கும்பிட்டான்.

“அம்மா.. ஆண்டவன் தந்த இந்த வீட்டை ஆண்டவருக்கே கொடுக்கிறேன்” என்று சொல்லி அவருக்கே விற்று விட்டான்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *