அன்னை 23 : மரணம், அன்னை மொழிகள்

மரணம் ரணமானது

 

செப்டம்பர் 3, 1997

அன்னையின் உடல்நிலை மோசமானது. அன்னைக்கு கடந்த சில ஆண்டுகளாகவே உடல் நிலை சரியில்லாமல் இருந்து வந்தது. பல்வேறு மருத்துவ சிகிச்சைகளும், செபமும் அன்னையை உயிர்பிழைக்க வைத்துக் கொண்டிருந்தது.

அன்னைக்கு நடமாட முடியவில்லை. ஆனால் திருப்பலியில் பங்கு கொள்ள வேண்டும் எனும் தணியாத தாகம்.

தந்தை சிறப்புத் திருப்பலி நிறைவேற்றினார். அன்னையும், சகோதரிகளும் அன்னையில் இடத்திலேயே திருப்பலியில் பங்கு கொண்டனர்.

செப்டம்பர் 5, 1997

அன்னையின் உடல் மீண்ட்டும் வலுவிழந்தது.

அன்னைக்கு திருப்பலியில் பங்கேற்கவேண்டும் போலிருந்தது. தன்னுடைய இறுதி நிமிடங்களில் இருக்கிறோம் என்பது அன்னைக்கு தெரிந்தது.

சகோதரிகளின் துணையுடன் அன்னை ஆலயத்துக்குள் நுழைந்தார். அன்னையின் பாதங்கள் சிலிர்த்தன. அன்னை இறைவனை அடையப்போகும் காலம் நெருங்கி விட்டது என்பதை உணர்ந்தாள்.

இதோ இயேசுவே .. கடைசியாய் ஒரு முறை உமது ஆலயத்திற்கு வருகிறேன். அன்னையின் உள்ளம் உறுதியாய் இருந்தது. ஊனுடல் தன் வலுவை ஒட்டுமொத்தமாய் இழந்திருந்தது.

திருப்பலி முடிந்தபின் அன்னை வாசலிலேயே ஒரு சக்கர நாற்காலியில் அமர விரும்பினார்.

அன்னை தனது பணியில் அர்பண உணர்வுடன் செயல்படும் அனைத்து சகோதர சகோதரிகளையும் சந்திக்க விரும்பினார்.

அப்போது அங்கே இருந்த அனைவரும் அன்னையை வந்து சந்தித்தனர். அன்னையின் கைகள் அவர்களுடைய நெற்றியில் சிலுவை அடையாளத்தை வரைந்தன.

பலர் அன்னையின் பாதங்களில் உடைந்து விழுந்து கண்ணீர் விட்டனர்.

பார்வையாளர்கள் வந்தனர். அன்னையைக் கடைசியாய் பார்க்கிறோம் என்னும் உணர்வு அவர்களுக்கு வரவில்லை. அனைவரும் அன்னையிடம் ஆசீர் பெறும் பாக்கியம் பெற்றனர்.

மாலை நான்கு மணி.

அன்னை படுக்கைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

அன்னை சகோதரிகளை அழைத்தார். சகோதரிகள் விரைந்து வந்தனர். அன்னையின் அருகே மண்டியிட்டனர்.

“எனக்கு ஒரு விண்ணப்பம்” அன்னை சொன்னாள்.

சகோதரிகளின் கண்கள் குளமாகின. “சொல்லுங்கள் அன்னையே, எங்கள் உயிரையே தருவோமே.. “ சகோதரிகள் விசும்பினர்.

அன்னை புன்னகைத்தாள். மரணத்தின் விளிம்பிலும் அன்னையின் முகத்தில் சாத்வீகத்தின் உச்சகட்ட அழகுடன் புன்னகை வந்தமர்ந்தது.

“எனக்காக செபியுங்கள். என் பிழைகளுக்காக செபியுங்கள்.” அன்னை வேண்டினாள்.

சகோதரிகள் முண்டியிட்ட அழுகையுடன் மண்டியிட்டனர்.

இரவு 8 மணி.

அன்னையின் நிலமை இன்னும் மோசமானது. சகோதரிகள் செபத்தை நிறுத்தவில்லை.

ஒரு சகோதரி தந்தை ஹான்சலுக்கு தொலை பேசினாள்.

“தந்தையே… நமது அன்னைக்கு அவஸ்தை பூசுதல் செய்ய வேண்டும்…” சகோதரியால் தடுமாறாமல் சொல்ல முடியவில்லை.

அவஸ்தை பூசுதல் என்பது மரணத்துக்கு முன் செபத்துடன் நற்கருணையை வழங்குவது. நற்கருணை உட்கொள்ளும் நிலையில் இல்லாவிடில் செபித்த எண்ணையை பூசி, அந்த நபர் செய்த பாவங்களை மன்னிக்கவும், அவரை நித்திய இளைப்பாறுதலில் சேர்க்கவும் செபிப்பது.

தந்தை விரைந்து வந்தார்.

அன்னைக்கு அவஸ்தை பூசுதல் கொடுக்கப்பட்டது.

அன்னை சுவரில் அறையப்பட்டிருந்த சிலுவையைப் பார்த்தார். சிலுவையில் இயேசு அன்னையை நோக்கியபடி தொங்கிக் கொண்டிருந்தார்.

அன்னை படுக்கையில் மரண வலியில் முனகிக் கொண்டிருந்தார். அந்த வேளையிலும் அவருடைய உதடுகள் செபமாலை செபம் செய்து கொண்டிருந்தன.

என் இயேசுவே….உம்மை நேசிக்கிறேன்

அன்னை முனகினாள். இயேசுவின் சிலுவையை விட்டு கண்ணை எடுக்காமலேயே.

இயேசுவே… இயேசுவே… இயேசுவே.. அன்னை மூன்று முறை உச்சரித்தார்.

உதடுகள் அப்படியே உறைந்தன.

தனியராக சாலையில் துணிச்சலுடன் இறங்கி வாழ்நாளில் கோடான கோடி மக்களின் அன்பைப் பெற்ற அன்னை இறைவனில் இணைந்தார்.

சகோதரிகள் துயரம் தாளாமல் அழுதனர்.

அவர்களால் நம்ப முடியவில்லை.

தேவதைகள் கூட மரணமடையுமா ?


புனிதரா, வெறும் மனிதரா ?

 

அன்னையின் மரணம் அன்னையின் சபை பணியாளர்களையும், உலக அளவில் கோடிக்கணக்கான மக்களையும் உலுக்கி எடுத்தது.

எனினும், அன்னை ஆரம்பித்த பணிகள் பாதுகாப்பான கரங்களில் இருந்தன. அன்னை மறைந்தாலும் எந்த விதமான தடைகளும் இல்லாமல் அன்னையின் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.

சகோதரி நிர்மலா அன்னையின் மறுவடிவம் என்று சொல்லுமளவுக்கு சபையை நிர்வாகித்து வருகிறார்.

அன்னை இறந்தபின் அன்னைக்கு புனிதர் பட்டம் வழங்கப்பட வேண்டும் எனும் கோரிக்கைகள் எழுந்தன.

அன்னை வாழும்போதே புனிதராய் இருந்தவர். அவர் இறந்தபின் அவருக்குப் புனிதர் பட்டம் வழங்குவதில் தடை ஏதும் இருக்காது என்பதே அவருடைய பணியின் தூய்மையை அறிந்தவர்களின் எண்ணம்.

ஒருவர் மரணமடைந்து ஐந்து ஆண்டுகளுக்குப் பின்பே புனிதர் பட்டத்துக்கான செயல்கள் நடைபெறத் துவங்கும். அந்த ஐந்து ஆண்டுகளில் அந்த நபரைக் குறித்த வியப்பு, மிகைப்படுத்தல், எதிர்ப்பு, விமர்சனம் போன்ற அனைத்து நிலைகளையும் தாண்டி உண்மையான நிலை புரியவரும் என்பது ஒரு காரணம்.

இன்னொரு காரணம் தனியே பணி செய்யும் நபர்களைக் குறித்து தகவல் சேகரிக்க ஆகும் காலம்.

அன்னையைப் பொறுத்தவரை அனைத்து பணிகளுமே வெளிப்படையாகவும் அனைவருக்கும் புரியும் வகையிலும் இருந்ததால் இந்தத் தாமதம் நேரவில்லை.

1998ம் ஆண்டு துவங்கிய புனிதர் பட்டத்துக்கான தகவல் சேகரிப்புப் பணி 2001ம் ஆண்டு முடிவடைந்திருந்தது.

சாட்சியங்கள், ஆதாரங்கள், செயல்கள் போன்றவற்றை எழுபத்து ஆறு தொகுப்புகளாக எழுதி முடித்தனர்.

மொத்த பக்கங்கள் சுமார் 35,000 !!!

சாட்சியங்கள், வாக்குமூலங்கள் அனைத்தும் ஆயரின் முன்னிலையில் கேட்கப்பட்டன. ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டன.

அன்னையின் பணியில் ஈடுபட்டிருந்தவர்களும், பலனடைந்தவர்களும், பல மதத்தினரும் சாட்சியங்களை அளித்தனர்.

அன்னையின் பெயரால் ஏதேனும் அதிசயங்கள் நடந்தால் அன்னைக்கு அர்ச்சிக்கப்பட்டவர் எனும் பட்டம் வழங்கப்படும்.

இது புனிதர் பட்டத்தின் முன்னால் வழங்கப்படும் பட்டம்.

மேலும் ஒரு புதுமையாகிலும் நிறைவேறினால் அன்னைக்கு புனிதர் பட்டம் வழங்கப்படும்.

கல்கத்தாவிலுள்ள மோனிகா பெஸ்ரா எனும் பெண்மணிக்கு வயிற்றில் ஏழுமாத கர்ப்பம் என சந்தேகிக்கும் அளவுக்கு பெரிய கட்டி இருந்தது.

அறுவை சிகிச்சை இல்லாமல் இந்த கட்டி கரைய வாய்ப்பே இல்லை என கை விரித்தது மருத்துவம்.

மோனிகா, அன்னையிடம் வேண்டினாள். தன் கட்டியை குணப்படுத்த இயேசுவிடம் பரிந்துரைக்குமாறு அன்னையிடம் வேண்டினாள்.

அதிசயம் நிகழ்ந்தது.

மருத்துவர்கள் வியந்தனர். அதிர்ந்தனர். கட்டி காணாமல் மறைந்து விட்டிருந்தது.

மருத்துவர்கள் சான்றளித்தனர். இந்த பெண்ணுக்கு கட்டி இருந்தது உண்மை. இதை அறுவை சிகிச்சையன்றி எப்படியும் குணப்படுத்த முடியாது. இந்தப் பெண் அறுவை சிகிச்சை செய்து கொள்ளவில்லை. எனில் கட்டி எப்படி மறைந்தது.

இது அதிசயமே ! அவர்கள் வாக்களித்தனர்.

இந்த அற்புதம் குறித்து மோனிகாவின் நண்பர்கள், உறவினர்கள், மருத்துவர்கள் என அனைவரிடமும் மிக நீண்ட விசாரணை நடத்தப்பட்டது.

“நான் ஆலயத்தில் நுழைந்தேன். அப்போது அன்னையின் புகைப்படத்திலிருந்து ஒரு ஒளி புறப்பட்டு என்னைத் தீண்டியது. நான் அதிர்ச்சியடைந்தேன். அங்குள்ள சகோதரிகளிடம் எனக்காக மன்றாடச் சொன்னேன். அவர்களும் நானும் அன்னை மூலமாக இயேசுவிடம் வேண்டினோம். மறு நாள் காலையில் கட்டி காணாமல் போயிருந்தது” மோனிகா சாட்சியமளித்தாள்.

என்ன தான் மருந்து உட்கொண்டாலும் ஒரே நாள் இரவில் கட்டி காணாமல் போகும் சாத்தியக்கூறுகள் இல்லவே இல்லை என மருத்துவர்கள் அடித்துச் சொன்னார்கள்.

மோனிகா இந்த நிகழ்வுக்கு சில நாட்களுக்கு முன்பு எடுத்த ஸ்கேன் மோனிகாவின் கட்டியின் அளவை காட்டுகிறது.

எதிர்ப்பாளர்கள் மோனிகாவின் அதிசயம் போலி என நிரூபிக்க எடுத்துக் கொண்ட சிரமங்களும் முயற்சிகளும் தோல்வியில் முடிவடைந்தன.

வத்திக்கான் இந்த புதுமையை ஆராய்ந்தது.

இந்த புதுமையை ஏற்றுக் கொண்டது. அன்னை அர்ச்சிக்கப்பட்டவராக அறிவிக்கப்பட்டார்.

அன்னையை நேசித்தவர்களுக்கு இது பெரிய செயலாகத் தெரியவில்லை. ஏனெனில் அன்னையை அவர்கள் வாழும்போதே புனிதராகத் தான் பார்த்தார்கள்.

அன்னை வாழ்நாளில் இரண்டே இரண்டு கட்டளைகளை மட்டும் கடைபிடித்தார்.

 

 1. எல்லாவற்றுக்கும் மேலாக இயேசுவை நேசித்தாள்
 2. தன்னைத் தான் நேசிப்பது போல பிறரையும் நேசித்தாள்.

 

 


அன்னை மொழிகள்

 

அன்னை தனது பணிக்காலத்தில் பல்வேறு காலகட்டங்களில் மொழிந்த வார்த்தைகளும், அறிவுரைகளும் ஆத்மார்த்தமானவை, அவசியமானவை. இன்று பல்வேறு இடங்களில் மேற்கோள் காட்டப்படும் அன்னையின் மொழிகளில் சில.

 

 • இறைவனின் அன்பை எப்போதும் இதயத்தில் கொண்டிருங்கள். அதை எதிர்ப்படுவோரிடமெல்லாம் வழங்குங்கள். குறிப்பாக உங்கள் குடும்பத்தினருக்கு அதைத் தவறாமல் வழங்குங்கள்.

 

 • நேற்று என்பது போய்விட்டது, நாளை என்பது நம்மிடமில்லை, இருப்பது இன்று மட்டுமே. எனவே இன்றே துவங்குவோம் மனித நேயப் பணிகளை.

 

 • நாம் இந்த உலகத்தில் வந்தது நமக்காக அல்ல. இயேசுவைப் போல பிறருக்காய் வாழவே.

 

 • மன்னிக்கக் கற்றுக் கொள்ளாதவரை அன்பை அளித்தல் சாத்தியமில்லை.

 

 • அதிகம் இருந்தாலோ, அதிக செயல்களில் ஈடுபட்டிருந்தாலோ கொடுக்கும் மனம் குறைவாகவே இருக்கும். குறைவாய் இருந்தால் கொடுக்கும் மனம் அதிகரிக்கும். பகிர்தலைப் பழகுங்கள்.

 

 • கருக்கலைப்பைப் போல அமைதியைச் சிதைக்கும் ஒரு செயல் வேறு இல்லை. தாயே குழந்தையைக் கொல்லும் வன்முறை நிகழ்ந்தால் கொலை செய்தல் தவறென எப்படி போதிக்க முடியும் ?

 

 • எத்தனை பெரிய செயலைச் செய்தாய் என்பதல்ல, எத்தனை அன்பை அதில் கலந்து செய்தாய் என்பதே முக்கியம். அன்பில்லாமல் செய்யப்படும் பெரிய செயல்களை விட அன்பு கலந்து செய்யப்படும் மிகச் சிறிய செயல்களே பெரியது.

 

 • நாம் செய்யும் செயல்கள் கடலில் விழும் ஒரு சிறு துளியைப் போல என அனைவரும் நினைக்கிறோம். நாம் இந்த செயலைச் செய்யாவிடில் கடல் தன் அளவில் ஒரு துளி இழக்கிறது என்பதை நினைக்க மறக்கிறோம்.

 

 • சிறு சிறு செயல்களில் நம்பிக்கைக்குரியவர்களாய் இருங்கள். அங்கே தான் உங்கள் பலம் நிரம்பியிருக்கிறது.

 

 • அன்பு இல்லாத நிலையே மிகக் கொடுமையான வறுமை, உணவு இல்லாத நிலையை விட.

 

 • உணவுக்காக ஏங்கும் மக்களை விட அதிகமானோர் இன்றைய உலகில் அன்புக்காக ஏங்குகின்றனர்.

 

 • இயேசு ஒருவரை ஒருவர் அன்பு செய்யத் தான் சொன்னார், உலகை அன்பு செய்ய அல்ல. ஒருவரை ஒருவர் அன்பு செய்வதன் மூலம் உலகை அன்பு செய்வதே அதன் பொருள்.

 

 • ஆனந்தம் எனும் அன்பின் வலையே உள்ளங்களை ஈர்க்கும்.

 

 • பிறரைத் தீர்ப்பிட விரும்பினால் உங்களால் பிறரை அன்பு செய்ய முடியாது.

 

 • உங்களால் நூறு பேருக்கு உணவளிக்க முடியாமல் போகலாம். கவலையில்லை. ஒருவருக்கு உணவளியுங்கள்.

 

 • அன்பான வார்த்தைகள் சிறியவை, எளியவை. ஆனால் அவை தரும் எதிரொலியோ மிகப்பெரியது.

 

 • இறைவனின் அரசை முதலில் தேடவேண்டும். பணம் இறைவனால் வழங்கப்படும். அன்பு புரிதல் அமைதி கருணை இவையே நாம் தேடவேண்டியது. பணத்தை அல்ல.

 

 • தனிமையே வறுமையின் உச்சம்.

 

 • நல்ல செயல்கள் எல்லாமே அன்பின் வெளிப்பாடுகளே.

 

 • அன்பு கொடுக்கப்பட்டால் மட்டுமே பலனளிக்கும். எண்ணை ஊற்றாமல் விளக்கு தொடர்ந்து எரியவேண்டுமென எதிர்பார்க்க முடியாது.

 

 • அன்பின் அடர்த்தியை அளக்க முடியாது, அளிக்க மட்டுமே முடியும்.

 

 • அன்பு செலுத்துதல் நமது வீடுகளில் நம்மைச் சார்ந்திருப்போரிடமிருந்தே ஆரம்பிக்க வேண்டும்.

 

 • அன்பு மட்டுமே எல்லா பருவகாலத்திலும் விளையும் ஒரு கனி. அது கைக்கெட்டும் தூரத்தில் தான் அனைவரிடமும் இருக்கிறது.

 

 • அன்பின் வெற்றி அன்பு செலுத்துவதில் இருக்கிறது. அன்பு செலுத்துவதனால் கிடைக்கும் பலனில் அல்ல.

 

 • மனித நேயப் பணியைச் செய்வதல்ல அதிசயம், அதைச் செய்வதை நிறை மகிழ்ச்சியுடன் செய்தலே அதிசயம்.

 

 • அடுத்த வீட்டு நபர்களுக்கும் அன்பை அளியுங்கள். அருகே யார் இருக்கின்றார்கள் என அறிந்து கொள்ளாமலே செல்லும் வாழ்க்கை துயரமானது.

 

 • யாருக்குமே உதவாமல் இருப்பதே மனுக்குலத்தின் மிகப்பெரிய நோய்.

 

 • காயப்படுத்தும் வரை அன்பை செலுத்திக் கொண்டே இருங்கள். பின் காயம் காணாமல் போய் அன்பு மட்டுமே நிலைக்கும்.

 

 • நாம் அடுத்தவர்களை நிராகரித்து நகர்வதால் தான் நமது வாழ்க்கையின் சமாதானத்தை இழக்க வேண்டிய நிலை வருகிறது.

 

 • தலைவர்களுக்காகக் காத்திருக்காதீர்கள். நீங்களே ஒருவருக்கு ஒருவர் உதவிகளைச் செய்யுங்கள்.

 

 • இல்லாமல் போவது தான் வறுமை. உணவு மட்டுமல்ல. நேசத்தின் தொடுதல், அன்பின் வார்த்தை, அரவணைக்கும் கரம், உதவும் மனம் இதில் எது இல்லையேலும் வறுமையே.

 

 • குழந்தைகளுக்காக போதுமான நேரத்தையும் அன்பையும் வீடுகளில் செலவிடாமல் பெற்றோர் சம்பாதிக்கும் எதுவுமே பலனை இழக்கிறது.

 

 • அன்பின் முதல் நிலை புன்னகை. ஒவ்வோர் புன்னகையும் எதிரே இருக்கும் நபருக்கு நாம் வழங்கும் விலைமதிப்பற்ற பரிசு. அது தான் சமாதானத்தின் முதல் சுவடை எடுத்து வைக்கிறது. ஒரு புன்னகை சாதிக்கும் செயல்கள் அதிசயமானவை.

 

 • உரையாடல்கள் அதிகம் தேவையில்லை. செயலற்ற சொற்கள் எதையும் சாதித்து விடப் போவதில்லை. ஒரு இயலாதவரின் வீட்டுக்குச் சென்று வீட்டை சுத்தம் செய்து கொடுங்கள். அந்த செயல் பேசும் நீங்கள் பேசாத வார்த்தைகள் அனைத்தையும்.

 

 • தொலைவிலிருப்பவர்களுக்கு நேசத்தை வழங்குவது பல வேளைகளில் எளிதாய் தோன்றுகிறது மக்களுக்கு. வீட்டிலிருப்பவர்களுக்கு அன்பு வழங்குவதே கடினமாய் தெரிகிறது. அன்பு அருகில் இருப்பவர்களிடம் ஆரம்பமாகவேண்டும்.

 

 • வீணாக்கப்படும் உணவைப் பார்த்தால் உள்ளுக்குள் கோபம் எழுகிறது, பட்டினியால் நலிவுறும் மக்கள் என் விழிகளில் இருப்பதால்.

 

 • இறை அன்பை வெளிப்படுத்தாத சொற்கள் இருளை அதிகரிக்கின்றன.

 

 • கடனே என பணிகளைச் செய்யாமல் ஆத்மார்த்தமான அன்புடன் செய்யும்போது மனித நேயப் பணிகள் ஆன்மீகப் பணிகளாகிவிடுகின்றன.

 

 • செபமும், மன்னிக்கும் மனமும் இருந்தால் குடும்ப வாழ்க்கை பிளவுகள் இன்றி இணக்கமாகவும், இறுக்கமாகவும் இருக்கும்.

 

 • உங்களிடம் பணிவு இருந்தால் புகழ்ச்சியோ, இகழ்ச்சியோ உங்களைப் பாதிக்காது. ஏனெனில் உங்கள் உண்மை நிலை உங்களுக்கே தெரியும்.

 

 • வாழ்க்கை ஒரு வாய்ப்பு பயன்படுத்திக் கொள்ளுங்கள்
  வாழ்க்கை அழகானது சிலாகியுங்கள்
  வாழ்க்கை ஆனந்தமானது, சுவையுங்கள்
  வாழ்க்கை ஒரு கனவு உணருங்கள்
  வாழ்க்கை ஒரு சவால், சந்தியுங்கள்
  வாழ்க்கை ஒரு பணி, நிறைவு செய்யுங்கள்
  வாழ்க்கை ஒரு விளையாட்டு, விளையாடுங்கள்
  வாழ்க்கை ஒரு வாக்குறுதி, நிறைவேற்றுங்கள்
  வாழ்க்கை ஒரு சோகம், கடந்துவாருங்கள்
  வாழ்க்கை ஒரு பாடல், பாடுங்கள்
  வாழ்க்கை கடினமானது, ஏற்றுக் கொள்ளுங்கள்
  வாழ்க்கை ஒரு துயரம், எதிர்கொள்ளுங்கள்
  வாழ்க்கை சவாலானது, துணிவு கொள்ளுங்கள்
  வாழ்க்கை ஒரு யோகம், அடையுங்கள்
  வாழ்க்கை உன்னதமானது, சிதைக்காதீர்கள்
 • நீங்கள் பேசும் முன், சற்று அமைதியாய் இருங்கள். அமைதியே இறைவனின் குரலைக் கேட்கும் வழி.
 • உங்கள் முழு ஈடுபாட்டோடு செய்யப்பட்ட ஒரு செயலில் தோல்வியடைந்தால் கவலையே படாதீர்கள்.
 • நாம் செபித்தால் நம்பிக்கை கொள்வோம்
  நம்பினால் அன்பு செய்வோம்
  அன்பு செய்தால் பணி செய்வோம்.
  எனவே செபியுங்கள்
 • உண்மையான அன்பு இருக்குமிடம்தான் வியப்பூட்டும் அதிசயங்கள் நடக்கும் இடம்.
 • இறைவனின் கருணைக்கு இணையான கருணை உங்கள் விழிகளிலும், கரங்களிலும், செயல்களிலும் இருக்கட்டும். உங்களைச் சந்திக்கும் எவரும் மலர்ச்சியுடன் செல்வதையே நாடுங்கள்
 • இறைவன் அமைதியின் தோழன். மௌனமாய் வளரும் செடிகளைப் போல, மௌனமாய் நகரும் விண்வெளியைப் போல, மௌனமாய் இருப்பதே இறையில் வளரவும், இதயம் தொடவும் ஒரு வழி.
 • எல்லோரையும் ஒரே போல அன்பு செய்வதற்கான ஒரே வழி அவர்களுக்குள் இருக்கும் இறைவனை அன்பு செய்வதே. இறைவன் ஒருவனே எனவே இறைவனை அன்பு செய்தால் அனைவரையும் ஒரே போல அன்பு செய்யலாம்.
 • அன்னை மரியைப் போல தாழ்மையுடன் இருந்தால், இறைமகன் இயேசுவைப் போல தூய்மையாய் வாழலாம்.
 • அன்பு செலுத்துவதற்கு சோர்வடையாத மனமே அன்பு செலுத்துவதில் முக்கியம்.
 • நாம் வெற்றி பெற்றே ஆகவேண்டும் என இறைவன் நிர்ப்பந்திப்பதில்லை, ஆனால் முயலவேண்டும் என விரும்புகிறார்.
 • நான் வெற்றிக்காக இறைவனிடம் மன்றாடுவதில்லை, இறை விசுவாசம் அதிகரிக்கவே வேண்டுகிறேன்

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ஒரு இந்து நல்ல இந்துவாகவேண்டும்

ஒரு கிறிஸ்தவர் நல்ல கிறிஸ்தவராக வேண்டும்

ஒரு இஸ்லாமியர் நல்ல இஸ்லாமியர் ஆகவேண்டும்

இதுவே நான் விரும்பும் மாற்றம்

 

                                    – அன்னை தெரேசா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *