அன்னை 15 : அன்புப் பணியாளர் சபை ஆரம்பம்

மிஷனரீஸ் ஆஃப் சாரிட்டி “அன்புப் பணியாளர் சபை”

அன்னை தன்னுடைய பணிக்கு பெயரிட்டார்.

அன்னை திரு கோம்ஸ் என்பவருடைய வீட்டின் மாடியை வாடகைக்கு எடுத்தார். அந்த மாடியறையில் தனியே தங்கத் துவங்கினார்.

இதுவரை சகோதரிகள் சிலருடன் தங்கியிருந்த அன்னையை தனிமை வாட்டியெடுத்தது.

எனவே லோரிடோ இல்லத்தில் பணிபுரிந்து வந்த ஒரு பணியாளப் பெண்மணியை தன்னுடன் துணைக்கு அமர்த்தினார்.

எனினும் அன்னை வீட்டு வேலைகளைச் செய்யத் தயங்கியதே இல்லை. அந்த வாடகை வீட்டின் தரையையும், அந்த மாடிப்படிகள் முழுவதையும் தண்ணீர் விட்டுத் தன் கைகளால் தேய்த்துக் கழுவுவார்.

அந்தப் பகுதிகளில் நடக்கும் செயல்களெல்லாம் அன்னையை தினம் தோறும் பாதித்துக் கொண்டிருந்தன.

ஒருநாள் அன்னை இரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தபோது ஒருவன் மழைநீரில் நனைந்து நடுங்குவதைக் கண்டார்.

திரும்பி வருகையில் அதே மனிதன் தண்ணீரில் விழுந்து கிடப்பதைக் கண்டார். அன்னை அவனருகே சென்று பார்த்தார். அவனுடைய உயிர் அவனை விட்டுப் பிரிந்திருந்தது.

இந்த நிகழ்வு அன்னையை உலுக்கியது.

அந்த மனிதன் மரணத்துக்கு முந்தைய வினாடியில் என்ன நினைத்திருப்பான். யாராவது வந்து தன்னை காப்பாற்றுவார்கள் என்று நினைத்திருப்பானா ?

தனக்கென யாருமே இல்லையே என நினைத்திருப்பானா ?

ஏதேனும் சொல்ல நினைத்திருப்பானா ? மரிக்கும் போது யாராவது என் கரம் பற்றியிருந்தால் நன்றாக இருக்குமே என நினைத்திருப்பானா ?

அன்னையின் கண்கள் ஈரமாய் கேள்விகளை எழுதின.

இப்படி மரணத்தின் வாசலில் நிற்பவர்களை நிச்சயம் மனமகிழ்ச்சிப் படுத்த வேண்டும்.

அவர்களுக்கு யாரேனும் இருக்கிறார்கள் என்னும் எண்ணத்தை வரவைக்க வேண்டும். என அன்னை விரும்பினாள்.

அன்னையின் மனதுக்குள் அந்த விதை விழுந்தது. பின்னாளில் கிளைவிடுவதற்காக அது அமைதியாய் இருந்தது.

அன்னை தன்னுடைய பணிக்கு இன்னும் பலர் வந்து சேரவேண்டுமென ஆர்வம் கொண்டிருந்தார். ஆனால் யாரும் இதுவரை வந்து சேரவில்லை.

மூன்று வாரங்கள் கடந்தன.

ஒருநாள் அன்னையின் வாசலுக்கு அவருடைய பள்ளி மாணவி ஒருத்தி வந்தாள்.

அன்னை பதினேழு ஆண்டு காலம் மரியன்னை பள்ளியில் பணியாற்றியபோது பயின்ற மாணவி. இப்போது தனது ஆசிரியை பணிசெய்கிறார் என்பதைக் கண்டு அவரைப் பார்க்க வந்திருந்தார்.

அன்னை அவளைக் கண்டு ஆனந்தமடைந்தார்.

உற்சாகமாய் வரவேற்றார்.

“நலமாய் இருக்கிறாயா ?”

“நன்றாக இருக்கிறேன் சிஸ்டர்.”

“சரி.. என்ன விஷயமாய் வந்திருக்கிறாய் ?”

“உங்களிடம் பயின்ற மாணவி நான். உங்கள் மறைக்கல்வியிலும், வீடு சந்தித்தல் நிகழ்ச்சிகளிலும் ஈடுபட்டவள். இப்போது உங்கள் தெருப்பணியிலும் ஈடுபட ஆர்வமாய் இருக்கிறேன்” அவள் சொன்னாள்.

அன்னை அவளைப் பார்த்தார். நன்றாகத் தெரிந்த பெண். படிப்பில் சுட்டி, சமூகநலனிலும் மனித நேயப் பணிகளிலும் ஈடுபட்டிருந்தவள்.

“உண்மையிலேயே பணி செய்ய விரும்புகிறாயா? இது பகுதி நேரப் பணி அல்ல. முழு நேரப் பணி. அருவருப்பானதை அழகானதாய் பார்க்கும் பக்குவம் வேண்டும், நிரம்ப நிரம்ப மனித நேயம் வேண்டும், எதிர்ப்புகளை இறைவனின் பெயரால் சமாளிக்கும் தெளிவு வேண்டும். தடம் மாறாத பிடிப்பு வேண்டும்” அன்னை விளக்கினாள்.

“எல்லாம் இருக்கிறது என்னிடம். என்னை ஏற்றுக் கொள்ளுங்கள்” அவள் சொன்னாள்.

அன்னை நிமிர்ந்து பார்த்தாள். அவளுடைய உறுதி ஆனந்தம் அளித்தது. ஆனால் அவளுடைய உடலில் விலையுயர்ந்த ஆடையும், நகைகளும்.

“பணி செய்ய வரும் போது, இந்த நகைகள் விலையுயர்ந்த ஆடை எதுவும் தேவையில்லை. இப்போது போ. எல்லாம் விட்டு விட்டு வா” அன்னை சொன்னாள்.

“சரி.. இன்றைக்கே போய் வருகிறேன்” அவள் சொன்னாள்

“வேண்டாம். மார்ச் 19ம் நாள் வா. அது யோசேப்பு தினம். பணி வாழ்வை நல்ல உற்சாகமான தினத்தில் துவங்கு”

அன்னையின் அறிவுரையை அவள் ஏற்றாள்.

மார்ச் பத்தொன்பதாம் தியதி அந்த சகோதரி அன்னையின் பணியில் தன்னை இணைத்துக் கொண்டாள்.

அன்னையின் பணியில் முழு நேரமாக தன்னை இணைத்துக் கொண்ட முதல் பெண்மணி அவள்.

பிற்காலத்தில் அன்னை தன்னுடைய இயற்பெயரான ஆன்கஸ் என்னும் பெயரை அவருக்குச் சூட்டி மகிழ்ந்தார்.

அந்த சகோதரி சுபாஷினி தாஸ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *