இந்த உலகம் பெண்களுக்கானதா ?

 

“ஏங்க‌, தீபாவ‌ளிக்கு ஒரு டிர‌ஸ் எடுக்க‌ணும் வ‌ரீங்க‌ளா” என்ற‌ ம‌னைவியின் குர‌ல் தான் ஆண்க‌ளை ப‌த‌ற‌டிக்க‌ச் செய்யும் மிக‌ப்பெரிய‌ கேள்விக‌ளில் ஒன்று. அந்த‌க் கேள்விதான் பெண்க‌ள் ஆண்க‌ளுக்கு வைக்கும் மிக‌ப்பெரிய‌ டெஸ்ட் என்ப‌தை பெரும்பாலான ஆண்க‌ள் அறிவ‌தில்லை.

அப்பாவி போல‌ பிக் ஷாப்ப‌ரைக் கையில் பிடித்துக் கொண்டு பலியிடக் கொண்டு செல்ல‌ப்ப‌டும் ஆட்டைப் போல‌ பின்னாலேயே செல்லும் ஆண்க‌ளுக்காக, க‌ருணை அடிப்ப‌டையில், க‌டைக‌ளில் ஆங்காங்கே ஒன்றிர‌ண்டு இருக்கைக‌ள் இருக்கும். ஆனால் ஒரு காலி இட‌த்தைப் பிடித்து அம‌ர‌ப் போகும் வினாடியில் ம‌னைவியின் குர‌ல் கேட்கும்.

“ஏங்க‌ இந்த சாரி ந‌ல்லாயிருக்கா ?” அந்த‌க் குர‌ல் கேட்ட‌ வினாடியில் ம‌னைவியின் அருகே ஓடுவார் கணவர். சில‌ வினாடிக‌ள் அந்த‌ சாரியை அப்ப‌டியும் இப்ப‌டியும் பார்த்து விட்டு, “சூப்ப‌ரா இருக்கு. உன் க‌ல‌ருக்கு செம‌யா இருக்கும்” எனும் பொய்யைச் சொல்ல வேண்டும். ஒரு சில‌ வினாடிக‌ள் பார்க்காவிட்டால், “ந‌ல்லா பாத்து சொல்லுங்க‌..” என‌ மிர‌ட்ட‌ல் வ‌ரும்.

“சூப்ப‌ரா இருக்கு” என்று சொன்னால் ம‌னைவி அதை வாங்கி விடுவார் என்ப‌து தான் அப்பாவிக் கண‌வ‌னின் ம‌ன‌க் க‌ண‌க்கு. அது மட்டும் நடக்கவே நடக்காது. மூன்று மணி நேரம் சாரிகளைப் புரட்டி விட்டு, “எதுக்கும் இந்த வாட்டி சாரி வேண்டாம், நான் சுடிதாரே எடுக்கறேங்க” என்பார் மனைவி. மிரண்டு போகும் கணவனுக்கு வேறு வழியில்லை, அடுத்த இரண்டு மணி நேரத்துக்குப் பின் சுடிதார் குவியலுக்குள்ளே இருந்து தலையை எட்டிப் பார்த்து மனைவி சொல்வார், “கலெக்ஷன் சரியில்லீங்க.. நாம அடுத்த‌ கடைக்குப் போவோம்”.

ஜவுளி கடைகள், பெண்களுக்கு ஏழெட்டு மாடிகளை ஒதுக்கும் பிரம்மாண்டக் கடைகளெல்லாம், ஆண்களுக்காய் போனாப் போவுதென ஒரு மாடியை ஒதுக்கி வைத்து விட்டு ஒதுங்கி விடுவார்கள். எப்படிப் பார்த்தாலும் அழகாய்த் தெரியும் கண்ணாடிகளை எங்கிருந்து தான் இறக்குமதி செய்வார்களோ, ஆண்டவனுக்கே வெளிச்சம்.

ஜவுளிக் கடைகளுக்குள் நுழைந்து, வெளியே வரும் ஆண்கள் மனசுக்குள் சொல்லிக் கொள்வார்கள், “இந்த உலகம் பெண்களுக்கானதுப்பா” ! என்று. அந்த அளவுக்கு பெண்களை வசீகரிக்கும் ஆடைகளால் கடைகள் குவிந்திருக்கும். ஆண் குழந்தையென்றால் ஒரு டவுசர், ஒரு சட்டை என பத்து நிமிடத்தில் ஷாப்பிங் முடிந்து விடும். பெண் குழந்தைகளுக்கு, என்ன வாங்க வேண்டும் என்பதை முடிவு செய்யவே சில மணி நேரங்கள் ஆகும்.

பெண்கள் மிக வேகமாக ஒரு ஷாப்பிங்கை முடிக்கிறார் என்றால் அதற்கு ஒரே ஒரு காரணம் தான் இருக்க முடியும். ஷாப்பிங் செய்வது அவருக்கு வேண்டாத யாரோ ஒருவருக்கு !! பெரும்பாலும் மாமியாராய் இருக்கலாம் என்பது சர்வதேச சிந்தனை.

அப்படியே ஜவுளி கடையை விட்டு விலகி நகைக்கடைக்குப் போகும் போதும் அதே நிலமை தான். “எங்கேயிருந்துடா புடிக்கிறீங்க, இந்த டிசைனை” என்று பின் வரிசையில் நின்று கதறிக் கொண்டிருக்கும் ஆண்களின் குரல்களைத் தாண்டி பெண்கள் உற்சாகத்தின் உச்சியில் நகைகளைப் புரட்டிக் கொண்டிருப்பார்கள்.

ஒரு ஆண் குதூகலமாய் ஒரு நகையை தேர்வு செய்து கொண்டிருக்கிறார் எனில் இரண்டு காரணங்கள் இருக்கலாம். ஒன்று, அவருடைய காதலிக்காய் வாங்குகிறார். அல்லது சின்ன மகளுக்காய் வாங்குகிறார். இதைத் தவிர்த்தவைகளில் ஆண்களின் உற்சாகம் குதிரைக் கொம்பு தான்.

இன்னும் சொல்லப் போனால் இந்த வர்த்தக உலகமே பெண்களை மையமாக வைத்துத் தான் இயங்குகிறது. விளம்பரங்களில் போலியாய்ச் சிரிக்கும் நடிகைகள் முதல், கிராபிக்ஸ் கலரில் பற்களைக் காட்டும் பெண்கள் வரை முழுக்க முழுக்க பெண்கள் தான். வேறு வழியில்லாமல் தலைகாட்டும் ஆண்களைச் சுற்றியும், நான்கைந்து பெண்கள் இருப்பார்கள் என்பது எழுதப்படாத விதி.

உண்மையில் பெண்க‌ள் தான் உல‌கை அழ‌காக்குகிறார்க‌ள். பெண்களற்ற வாழ்க்கையை நினைத்துப் பார்க்க முடிவதில்லை. சிக்ஸ் பேக்ஸ் வைக்கும் ஆண்களிடம், நாளை முதல் உலகில் பெண்களே இல்லை என்றால் ஜிம்மை இழுத்து மூடிவிட்டு கிளம்பி விடுவார்கள். சங்க காலம் முதல் இந்த காலம் வரை பெண்களின் இதயக் கதவுக்குள் இளைப்பாறவே ஆண்கள் பல்வேறு செயல்களில் ஈடுபடுகின்றனர்.

பாறை எவ்வ‌ள‌வு தான் வ‌லிமையாய் இருந்தாலும் ஒரு ரோஜா ம‌ல‌ரைப் போல‌ அது ம‌ன‌தை வ‌சீக‌ரிப்ப‌தில்லை. ஒரு மெல்லிய‌ தென்ற‌லைப் போல‌ ஒரு ஃபேன் காற்று வ‌ருடுவ‌தில்லை. ஒரு சார‌ல் ம‌ழையைப் போல‌ ஷ‌வ‌ர் நீர் சிலிர்க்க‌ வைப்ப‌தில்லை. என‌வே தான் அத்த‌னை மென்மை விஷ‌ய‌ங்க‌ளையும் பெண்க‌ளை வ‌ர்ணிப்ப‌த‌ற்காய் க‌விஞ‌ர்க‌ள் குத்த‌கைக்கு எடுத்து விட்டார்க‌ள்.

ஏவாளைக் க‌ட‌வுள் ப‌டைத்த‌ நிமிட‌ம் முத‌ல் உல‌க‌ம் பெண்க‌ளுக்கான‌தாய் உருமாறிவிட்ட‌து. அத‌னால் தான் பூமித் தாய் என்கிறோம். க‌ட‌ல் அன்னை என்கிறோம், க‌ங்கை, ய‌முனை என‌ பெண்க‌ளின் பெய‌ர்க‌ளைத் தேடித் தேடி ந‌திக‌ளுக்கு வைக்கிறோம். உல‌கின் எல்லா இட‌ங்க‌ளிலும் பெண்க‌ளின் இருப்பு தொட‌ர்ந்து கொண்டே இருக்கிற‌து.

ஹிட்ல‌ரின் வாளுக்கு இருக்கும் ம‌ரியாதையை விட‌ மோன‌லிசாவின் புன்ன‌கைக்கு அதிக ம‌ரியாதை உண்டு. வ‌லிமைக‌ளை விட‌ மென்மைக‌ளே பூமியை அழகுபடுத்துகின்றன‌. வலிமைகளை விட மென்மைகளே வாழ்க்கையை அர்த்தப்படுத்துகின்றன. அத‌னால் தான் பெண்க‌ளை மைய‌மாய் வைத்து உல‌க‌ம் ப‌ய‌ணிக்கிற‌து.

பெண் குழ‌ந்தைக‌ள் இல்லாத‌ வீடுக‌ளில் ஒரு மிக‌ப்பெரிய‌ வெறுமை ஒளிந்திருப்ப‌தையும், பெண்குழ‌ந்தைக‌ள் அதிக‌ம் இருக்கும் வீடுக‌ள் எப்போதுமே ஆன‌ந்த‌த்தின் இருப்பிட‌மாய் இருப்ப‌தையும் அனுப‌வ‌ஸ்த‌ர்க‌ள் ச‌ட்டென‌ ஒத்துக் கொள்வார்க‌ள்.

பெண்களின் ஆனந்தமான வாழ்க்கையில் தான் குடும்பங்களின் நிம்மதி அடங்கியிருக்கிறது. குடும்பங்களின் நிம்மதி, சமூகத்தை மென்மையாக்கும். சமூகத்தின் மென்மை தேசத்தை நேசமாக்கும்.

எனவே தான் பெண்களை ரசிக்கும் சமூகத்தை விட, பெண்களை மதிக்கும் சமூகம் அவசியமாகிறது.

பெண்களை அடிமை செய்யும் சமூகத்தை விட, பெண்க‌ளை அன்பு செய்யும் ச‌மூக‌ம் அவசியமாகிறது.

குடும்பத்தில் பெண்களுக்கு வழங்கப்படும் அன்பில் தான் பெண்க‌ளின் வாழ்வின் அஸ்திவார‌ம் க‌ட்டியெழுப்ப‌ப்ப‌டுகிற‌து. பெண்க‌ளை உள‌மார‌ நேசிக்கும் ஒரு ச‌மூக‌த்தில், பெண்விடுத‌லைக் கோஷ‌ங்க‌ளுக்கு அவ‌சிய‌மே இல்லாம‌ல் போய்விடுகிற‌து.

பெண்க‌ள் இல‌க்கிய‌ங்க‌ளை செழுமைய‌டைய‌ச் செய்திருக்கிறார்க‌ள், குடும்ப‌ங்க‌ளை ம‌ல‌ர‌ச் செய்திருக்கிறார்க‌ள். பெண்க‌ளுக்காய் நாம் என்ன‌ செய்திருக்கிறோம் எனும் கேள்வி அவ‌சிய‌மாகிற‌து.

ஜ‌வுளிக் க‌டைக‌ளிலும், ந‌கைக்க‌டைக‌ளிலும் பெண்க‌ளுக்கான‌ ச‌ந்தோச‌ம் அட‌ங்கியிருப்ப‌தாய் நினைக்கும் ஆண்க‌ளின் சிந்த‌னை பிர‌ம்மாண்ட‌த் த‌வ‌று. பெண்க‌ளின் ம‌கிழ்ச்சி அவ‌ர்க‌ளைப் புரிந்து கொள்வ‌திலும், அன்பு செய்வ‌திலும், செவிம‌டுப்ப‌திலும் தான் அட‌ங்கியிருக்கிற‌து.

அத்த‌கைய‌ சூழ‌ல் அமையும் போது மீண்டும் ஒருமுறை சொல்லிக் கொள்ள‌லாம் “பெண் இன்றி அமையாது உல‌கு !”

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *