வன்முறையை விதைக்கும் சமூக வலைத்தளங்கள்

Facebook_3474124b

சமூக வலைத்தளங்களின் பங்கு சமூகத்திற்கு மாபெரும் வரமாகவும், மிகப்பெரிய‌ சாபமாகவும் மாறியிருக்கிறது. முன்பெல்லாம் ஒரு செய்தி பல இடங்களுக்குப் பரவ வானொலியோ, அச்சுப் பத்திரிகையோ தான் ஊடகமாக இருந்தது. செய்திகள் பரவும் வேகமும், அதன் மூலம் உருவாகும் தாக்கங்களும் ஊகிக்கக் கூடிய அளவிலேயே இருந்தன.

ஆனால் இன்று அப்படியில்லை, ஒரு செய்தி விதையாக ஒரு இடத்தில் விதைக்கப்பட்ட உடனே அதை சமூக வலைத்தளங்கள் உலகின் கடை கோடி எல்லை வரைக்கும் எடுத்துச் செல்கின்றன. அந்த செய்தி வாசிப்பவர்களின் கண்ணோட்டத்துக்கு ஏற்ப விஷயமாகவோ, விஷமாகவோ சமூகத்தில் வேர் இறக்குகின்றன. காட்டுத் தீயைப் போல ஒரு விஷயம் சில நிமிடங்களிலேயே மாபெரும் பாதிப்பை உருவாக்கி விடுகிறது.

இணையமும், சமூக வலைத்தளங்களும் நுழைந்தபின்பு இனவெறித் தாக்குதல்களும், வெறுப்புகளும், குரோதங்களும் பெருமளவு அதிகரித்திருக்கின்றன என்கிறது சமீபத்தில் வெளியான அமெரிக்க ஆய்வு ஒன்று.

இல்லாத ஒன்றை இருப்பது போலக் காட்டும் மாயையை சமூக வலைத்தளங்களில் திட்டமிட்டே பரப்புபவர்கள் இருக்கிறார்கள். அந்த போலியான செய்தியை மீண்டும் மீண்டும் படிக்கும் வாசகர்கள் அது மாயை என்பதை மறந்து உண்மை என்று நம்பத் துவங்குகிறார்கள். க‌ட‌ந்த‌ தேர்த‌ல்க‌ளில் சில கட்சிகளுக்கு அத்த‌கைய‌ உத்தி கைமேல் ப‌ல‌ன் கொடுத்த‌து.

இப்போதும் சில‌ அர‌சிய‌ல் த‌லைவ‌ர்க‌ளைக் கோமாளிக‌ளாக‌ச் சித்த‌ரித்தும், அவ‌ர்க‌ளுடைய‌ செய‌ல்க‌ளை ந‌க்க‌ல‌டித்தும் ச‌ர‌மாரியாக‌ ச‌மூக‌ வ‌லைத்த‌ள‌ங்க‌ளிலும், வாட்ஸ‌ப் போன்ற‌ மொபைல் குழுக்க‌ளிலும் ப‌ட‌ங்க‌ளும், செய்திக‌ளும் வ‌ந்து கொண்டே இருக்கின்ற‌ன‌. இவையெல்லாம் தேர்த‌ல் நெருங்கும்போது இன்னும் சூடுபிடிக்கும்.

இவை வெறுமனே ந‌கைச்சுவை நோக்க‌த்தில் உருவாக்க‌ப்ப‌ட்ட‌வை போல‌ தோன்றினாலும் மாபெரும் தாக்க‌த்தை ம‌க்க‌ள் ம‌த்தியில் உருவாக்க‌க் கூடிய‌வை. அத‌னால் தான் இத‌ற்கு எதிராக‌ தேமுதிக‌ த‌லைவ‌ர் விஜ‌ய‌காந்த் காவ‌ல்துறையிடம் புகார் அளித்தார். இப்போது திமுக‌ இளைஞர் அணித் த‌லைவ‌ர் ஸ்டாலின் அவ‌ர்க‌ளுடைய‌ தொகுதிப் பிர‌ச்சார‌த்தைக் குறிவைத்து ச‌க‌ட்டு மேனிக்கு கிண்ட‌ல் ப‌ட‌ங்க‌ள் வ‌ந்து கொண்டிருக்கின்ற‌ன‌.

திரைத்துறையிலும் இது புற்றீசல் போல புகுந்து விட்டது. திட்ட‌மிட்டே ஒரு ந‌டிக‌ரைக் கொச்சைப்ப‌டுத்த‌வும், அவ‌ர் ப‌ட‌ங்க‌ளை திட்ட‌மிட்டே தோற்க‌டிக்க‌வும் இத்த‌ உத்தி ச‌மீப‌கால‌மாக தீவிரமாய்ப் ப‌ய‌ன்ப‌டுத்த‌ப்ப‌ட்டு வ‌ருகிற‌து. ப‌ட‌ம் வெளியாகும் நாள் அதிகாலையிலிருந்தே ப‌ட‌ம் ‘ப‌டு மொக்கை’ என‌ தொட‌ர்ந்து ப‌ரப்பப்படும் செய்தி ஒரு குறிப்பிட்ட‌ ச‌த‌வீத‌ம் ம‌க்க‌ளை திசைதிருப்பி விடுகிற‌து. குறிப்பாக‌ ந‌டிக‌ர் விஜ‌ய் ப‌ட‌ங்க‌ள் அதிக‌மான‌ எதிர்வினைக்கு உள்ளாகின்ற‌ன‌.

சுருக்கமாகச் சொல்ல வேண்டுமெனில், சாதார‌ண‌ வாச‌க‌னாக‌ ஏதோ ஒரு ஓர‌த்தில் வ‌லைத்தள‌த்தை மேய்ந்து கொண்டிருப்ப‌வ‌ர்க‌ளை மூளைச் ச‌ல‌வை செய்து வன்முறையில் ஈடுபடுத்தும் வேலையைத் தான் இவை செய்கின்ற‌ன. ஆங்கிலத்தில் இதை லோன் ஊல்ஃப் என்பார்கள். ஐஎஸ் ஐஎஸ் தீவிர‌வாத‌ இய‌க்க‌ம் உல‌கின் ப‌ல்வேறு பாக‌ங்க‌ளிலுமுள்ள‌ ம‌க்க‌ளை த‌ங்க‌ள் இய‌க்க‌த்தில் இழுத்துக் கொண்ட‌தில் ச‌மூக‌ வ‌லைத்த‌ள‌ங்க‌ளின் ப‌ங்கு முக்கிய‌மான‌து.

ம‌த்திய‌ கிழ‌க்கு நாடுக‌ளைத் த‌விர‌ மேற்குல‌க‌ நாடுக‌ளின் ம‌க்க‌ளையும் இந்த‌ இய‌க்க‌ம் ஈர்த்துக் கொண்டதற்கு ச‌மூக‌ வ‌லைத்த‌ள‌ங்க‌ளே முக்கிய‌க் கார‌ண‌ம். யூகேயிலிருந்து ஆயிர‌ம் பேர், அமெரிக்காவிலிருந்து ஒரு கூட்ட‌ம் என தீவிரக் குழுவில் இணைந்த மக்களின் புள்ளி விபரங்கள் மலைக்க வைக்கின்றன.

வ‌ன்முறைச் செய்திக‌ளையும், ப‌ட‌ங்க‌ளையும், வீடியோக்க‌ளையும் தொட‌ர்ந்து பார்க்கும் ம‌க்க‌ளுக்கு அதீத‌ ம‌ன‌ அழுத்த‌ம் உண்டாவ‌தாக‌ பிராட் போர்ட் ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌ம் தெரிவித்திருந்த‌து. இந்த மன அழுத்தம் மக்களுடைய வளர்ச்சியையும், உடல் நலத்தையும் பாதிக்கிறது. அல்லது இந்த‌‌ ம‌ன‌ அழுத்த‌ம் வ‌ன்முறைச் செய‌லாக‌ வெளிப்ப‌டுகிற‌து.

அமைதியாக‌ இருக்கும் இளைஞ‌ன் திடீரென‌ துப்பாக்கி எடுத்துக் கொண்டு கிள‌ம்பி க‌ண்ணில் தென்ப‌டுப‌வ‌ரையெல்லாம் சுட்டுத் த‌ள்ளும் அமெரிக்க‌க் குற்ற‌ங்க‌ளுக்குப் பின்னால் ச‌மூக‌ வ‌லைத்த‌ள‌ங்க‌ளின் ப‌ங்க‌ளிப்பு அழுத்த‌மாய் இருக்கிற‌து.

கேங் வ‌ய‌ல‌ன்ஸ் என‌ப்ப‌டும் குழு வ‌ன்முறைக்கு ச‌மூக‌ வ‌லைத்த‌ள‌ப் ப‌திவுக‌ள் பெரும் கார‌ணியாய் இருப்ப‌தாக‌ போர்ட்லாந்தின்‌ நீதித்துறையைச் சார்ந்த‌ டிரேசி ஃபிரீமேன் தெரிவித்திருந்த‌து க‌வ‌னிக்க‌த் த‌க்க‌து. ஒரு ந‌ப‌ரை அடையாள‌ம் காட்ட‌வும், ஒரு பொறியை ஊதிப் பெரிதாக்க‌வும் ஒரு சின்ன‌ டுவீட் போதும். இத‌னால் திட்ட‌மிட்ட‌ கூலிப்ப‌டைக‌ளாக‌ இளைஞ‌ர்க‌ளை மாற்றும் வேலையை இந்த‌ டிஜிட‌ல் த‌ள‌ங்க‌ள் செய்கின்ற‌ன‌.

ஒரு காத‌ல், சாதீய‌ மோத‌லாக‌வோ, ம‌த‌ வ‌ன்முறையாக‌வோ வெடிக்க‌ இந்த‌ மின்ன‌ல் வேக‌த் த‌க‌வ‌ல் ப‌ர‌வ‌ல் தான் கார‌ண‌மாகிற‌து. உண்மையை முழுமையாய் புரிந்து கொள்ளும் பொறுமை ம‌க்க‌ளுக்கு இருப்ப‌தில்லை. உண‌ர்வு ரீதியாக‌ தூண்ட‌ப்ப‌ட்ட‌தும் அவ‌ர்க‌ள் க‌ள‌த்தில் குதிக்கின்ற‌ன‌ர். அந்த வன்முறை மிக‌ப்பெரிய பாதிப்பை உருவாக்கி விட்டு தான் அட‌ங்குகிற‌து.

சாதி சார்ந்த‌ ப‌க்க‌ங்க‌ள் ஃபேஸ்புக் போன்ற‌ ச‌மூக‌ வ‌லைத்த‌ள‌ங்க‌ளில் வலிமையாய் வேரூன்றியிருக்கின்ற‌ன. இவ‌ற்றில் பிற‌ சாதி சார்ந்த‌ விரோத‌ங்க‌ளும், வெறுப்புக‌ளும் இடைவிடாம‌ல் ப‌ரிமாற‌ப்ப‌டுகின்ற‌ன‌. இவ‌ற்றை தொட‌ர்ந்து ப‌டிக்கும் இளைஞ‌ர்க‌ள் உண‌ர்வு ரீதியாக‌ அடுத்த‌ சாதியின‌ர் மீது வெறுப்பு கொள்கின்ற‌ன‌ர்.

ஒரு சாதியைப் பற்றியோ, மதத்தைப் பற்றியோ இன்னொருவர் பேசும் கருத்து வைரலாகிறது. வ‌ன்முறை க‌ருத்துக‌ளும், அவ‌தூறுக‌ளும், நாலாந்த‌ர‌மான‌ ஆபாச‌ வார்த்தைக‌ளும் எதிர்வினைகளாகப் ப‌திவாகின்ற‌ன. ர‌க‌சிய‌மாக‌வோ, ப‌கிர‌ங்க‌மாக‌வோ இப்ப‌டிக் குழுக்க‌ள் இய‌ங்குவ‌தில் ச‌மூக‌ ஒற்றுமைக்கான‌ க‌ண்ணிவெடி க‌ட்சித‌மாய் ம‌றைந்திருக்கிற‌து.

ஃபேஸ்புக்கிலோ, டுவிட்ட‌ரிலோ இணையும் பிர‌ப‌ல‌ங்க‌ளில் ப‌ல‌ரும், ‘ஆளை விடுங்க‌ப்பா சாமி’ என‌ அல‌றி அடித்துக் கொண்டு ஓடும் சூழ‌லை நாம் தொட‌ர்ந்து பார்த்துக் கொண்டே தான் இருக்கிறோம்.

ம‌றுப‌க்க‌ம் ஃபேஸ்புக்கில் லைக்ஸ் வாங்க‌ வேண்டும் என்ப‌த‌ற்காக‌ கொலை கூட‌ செய்து ப‌திவிடும் கொலையாளிக‌ளும் இருக்கிறார்க‌ள். ச‌மூக‌ அக்க‌றை என்ப‌து மாறி, ச‌மூக வ‌லைத்த‌ள‌ங்க‌ளில் கிடைக்கும் அங்கீகார‌ம் என்ப‌தே முக்கிய‌மான‌தாகி விட்ட‌து. அத‌னால் தான் ஒரு விப‌த்தில் உத‌வும் நப‌ர்க‌ளை விட‌ அதிக‌மாய், அதைப் ப‌ட‌மெடுக்கும் ம‌க்க‌ள் இருக்கிறார்க‌ள்.

ஸ்மார்ட் போன்க‌ளும், ச‌மூக‌ வ‌லைத்த‌ள‌ங்க‌ளும் தான் கேர‌ளாவில் வ‌ன்முறையை அதிக‌ப்ப‌டுத்தியிருக்கின்ற‌ன‌ என கேரள ஸ்டேட் சோஷியல்‌ வெல்ஃபேர் போர்ட் தெரிவித்திருந்த‌து. குஜ‌ராத்தில் ந‌ட‌ந்த‌ ப‌ட்டேல் எழுச்சியின் பின்ன‌ணியில் சோஷிய‌ல் மீடியா தான் முக்கிய‌ ப‌ங்காற்றிய‌தாக அங்குள்ள‌ அர‌சு அதிகாரிக‌ள் தெரிவித்திருந்த‌ன‌ர்.

வன்முறைகளால் நேர்ந்த பொருள் இழப்பு கடந்த ஆண்டு மட்டும் 22 இலட்சம் கோடிகள். அதை விட‌ அதிக‌ ம‌திப்பு வாய்ந்த‌ உயிர்க‌ள் ப‌ல‌ நூறு அழிந்திருக்கின்ற‌ன‌. இவையெல்லாம் நாட்டின் வ‌ள‌ர்ச்சியை பின்னோக்கி இழுக்கும் கார‌ணிக‌ள் என்ப‌தில் ச‌ந்தேக‌மில்லை.

ச‌மூக‌ வ‌லைத்த‌ள‌ங்க‌ள் உல‌கின் அத்த‌னை திசைக‌ளிலுள்ள‌ ம‌னித‌ர்க‌ளையும் இணைக்கும் ஒரு மிக‌ப்பெரிய‌ வ‌ர‌ப்பிர‌சாத‌ம். இத‌னை மிக‌ச் ச‌ரியாக‌ப் ப‌ய‌ன்ப‌டுத்தினால் இய‌ற்கைப் பேரிட‌ர்கள்,அரசியல் மாற்றங்கள், சமூகப் பணிகள் போன்ற‌ நிக‌ழ்வுக‌ளில் ஒன்றிணைந்து ப‌ணியாற்ற‌ முடியும். ஆனால் அதை விட்டு விட்டு உல‌கைக் கூறுபோடும் வேலையையே ச‌மூக‌ வ‌லைத்த‌ள‌ங்க‌ள் செய்கின்ற‌ன‌ என்ப‌து க‌வ‌லைய‌ளிக்கும் விஷ‌ய‌மாகும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *