கிறிஸ்தவ வரலாறு 20 – தமிழ் வளர்த்த கிறிஸ்தவம்

 

தமிழ் இலக்கியச் செழுமைக்குப் பெயர்போன மொழி. அடர்த்தியும் அழகும், ஆழமும் நிறைந்த செய்யுள்களாலும், பாடல்களாலும் தமிழ் இலக்கிய உலகம் ஆழமாய் வளர்ந்திருந்தது. தமிழ் மொழிக்கு ஒரே ஒரு குறை மட்டுமே இருந்தது, அப்போது தமிழில் உரைநடை நூல்கள் இல்லை ! வெறும் பாடல்கள் மட்டுமே இலக்கியத்தை வாழவைத்துக் கொண்டிருந்தது. உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்கள் கூட கவிதையாகவே அமைந்திருந்தன. தூய உரைநடை நூல்களே இல்லை.

ஓலைச் சுவடிகளில் ஆணிகளால் எழுதிக் கொண்டிருந்த காலம் அது. பக்கம் பக்கமாய் உரைநடையை எழுதுதல் சுலபமில்லையே. எழுதும் வேலை குறைவாகவும், அது தரும் பயம் மிக அதிகமாகவும் இருக்க வேண்டும் என்பதே அந்தக் கால புலவர்களின் எண்ணமாக இருந்தது. எனவே அவர்கள் கவிதைகளையே இலக்கியத்துக்கான வடிவமாக்கிக் கொண்டார்கள். இதனால் உரை நடை இலக்கியம் தமிழில் வளரவில்லை. நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் போன்ற வெகு சில உரை நடை நூல்களும் பெரும்பாலும் சமஸ்கிருதத்திலேயே அமைந்திருந்தது.

உரைநடை இலக்கியமே மக்களுக்கு தகவல்களை மிக விரைவாக விளக்க முடியும். கவிதைகளை மனப்பாடம் செய்து, அவற்றின் பொருளறிந்து கற்பதில் ஏராளமான நேரம் செலவிட வேண்டி இருந்ததால், உரை நடை இலக்கியத்தின் தேவை இன்றியமையான ஒன்றாக இருந்தது.

தமிழின் முதல் உரைநடை நூலை எழுதிய பெருமை இயேசு சபை பாதிரியார்களையே சாரும். கிறிஸ்தவ மதத்தைப் பரப்புவதற்காக வந்த அவர்கள் முதலில் மொழியைக் கற்றார்கள். அவர்களில் பலர் நல்ல தரமான இலக்கிய நூல்களைப் படைக்குமளவுக்கு மொழியறிவு பெற்றார்கள். கி.பி 1577ல் “கிறிஸ்தவ வேதோபதேசம்” என்னும் உரை நடை நூல் வெளியிடப்பட்டது. இதுவே தமிழில் வெளியான முதல் உரைநடை நூல். இந்நூல் வெளியாகி இரண்டு ஆண்டுகளுக்குப் பின் ‘கிறிஸ்தவ வணக்கம்’ என்னும் நூல் ஆன்ரிக் என்னும் பாதிரியாரால் அச்சிடப்பட்டது. அதன்பின் பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்து வந்த ராபர்ட் நோபிலி, பதினெட்டாம் நூற்றாண்டின் துவக்க காலங்களில் வாழ்ந்து வந்த வீரமாமுனிவர் போன்றோர் பல உரை நடை நூல்களை இயற்றினார்கள்.

பதினாறாம் நூற்றாண்டிலேயே உரைநடை நூல் அறிமுகம் ஆகியிருந்தாலும் அது வளரத் துவங்கியது பத்தொன்பதாம் நூற்றாண்டில் தான். அதுவரை மிகவும் குறிப்பிட்ட நூல்கள் மட்டுமே தமிழ் உரை நடை வடிவில் எழுதப்பட்டன. இடைப்பட்ட நூற்றாண்டுகளி உரைநடை வளரவேயில்லை என்பது வியப்பளிக்கிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் அச்சுப் பொறிகள் ஆங்காங்கே நிறுவப்பட்டதால் உரைநடை நூல்கள் ஏராளம் வெளிவந்தன. கிறிஸ்தவ மதத்தைப் பரப்புவதற்காக எளிய விலையிலும், இலவசமாகவும் நூல்களும் பிரசுரங்களும் அச்சிடப்பட்டன.

கிறிஸ்தவர்களின் புதிய அணுகுமுறை இந்தியாவிலிருந்த மற்ற மதத்தினரை உசுப்பி விட்டது. அவர்களும் தங்கள் பங்கிற்கு நூல்களையும், பிரசுரங்களையும் அச்சிட்டு வெளியிட்டார்கள். தமிழ் மொழியில் உரைநடை நூல்கள் ஏராளம் வரத் துவங்கின. இந்த அச்சுநூல்கள் விலையில் மிகவும் குறைவானதாகவும், பல நூல்கள் இலவசமாகவும் இருந்ததால் சமூகத்தின் கீழ்தட்டு மக்களும் மிக எளிதாக நூல்களைப் பெற முடிந்தது. மதங்களின் பிரச்சாரத்தின் வெளிச்சத்தில் தமிழ் உரை நடை வளர்ந்தது.

அச்சுப் புத்தகங்களின் வரவு இலக்கிய வளர்ச்சியில் ஒரு மிக முக்கியமான திருப்பமாக அமைந்தது. இந்தியாவிலேயே முதன் முதலில் அச்சு ஆரம்பித்தது தமிழ் மொழியில் தான். அதையும் செய்தது இயேசு சபை பாதிரியார்கள் தான். அச்சுப்பொறிகள் முதலில் கேரளாவிலுள்ள கொச்சியில் தான் நிறுவப்பட்டன. அதன்பின்னர் திருநெல்வேலியிலுள்ள புன்னக்காயல் என்னுமிடத்தில் அச்சுப் பொறி ஒன்று நிறுவப்பட்டது. தமிழின் முதல் உரைநடை நூல்கள் இரண்டுமே கேரளாவில் அச்சிடப்பட்டதாக நம்பப்படுகிறது.

இந்தியாவின் வணிக மாற்றங்கள் அச்சுத் தொழிலில் ஒரு தேக்கத்தை ஏற்படுத்தின. இயேசு சபைப் பாதிரியார்களை டச்சுக்காரர்கள் விரட்டியடித்தார்கள். எனவே அச்சுத் தொழிலும் முடங்கியது. அதன்பின் ஸீகன் பால்கு என்னும் டேனிஷ் சபையைச் சேர்ந்தவரின் முயற்சியினால் ஜெர்மனியிலிருந்து அச்சுப் பொறிகளும் அச்சு எழுத்துக்களும் வரவழைக்கப்பட்டு தரங்கம்பாடியில் நிறுவப்பட்டது. 1713ம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்த அச்சுப்பொறி பல நூல்களைப் பதிப்பித்தது. இந்தியர்கள் அச்சுப்பொறி தயாரிக்கக் கூடாது என்னும் சட்டம் கூட அந்த காலத்தில் இருந்தது. அந்த சட்டம் 1835ல் தான் விலக்கிக் கொள்ளப்பட்டது. அதன் பின்னர் அச்சுத் தொழில் அசுர வளர்ச்சி கண்டது.

இவ்வாறு கிறிஸ்தவ மதத்தினரின் மதப்பிரச்சாரம் ஒருவகையில் தமிழ் மொழியை வளர்ச்சியடையச் செய்தது என்றால் அது மிகையல்ல. தமிழ் மீது தணியாத தாகம் கொண்டு இதை அவர்கள் செய்யவில்லை. ஆனால் கிறிஸ்தவத்தைப் பரப்பவேண்டுமெனில் தமிழ் மொழி தெரிந்திருக்க வேண்டும் என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள். எனவே அவர்கள் தமிழ் மொழியையும் கற்று, மொழிபெயர்ப்பு இலக்கியங்களையும் நல்ல இலக்கியங்களையும், அச்சு, உரைநடை போன்ற தளங்களையும் விரிவுபடுத்தினார்கள்.

அவர்களில் மிக முக்கியமான சிலரைப் பற்றிய சுவையான செய்திகளை அடுத்தடுத்த அத்தியாயங்களில் காண்போம்.
****************************************************************************************************************************

பூணூல் போட்ட கிறிஸ்தவர்
ராபர்ட் டி நோபிலி – தத்துவப் போதக சுவாமிகள்

****************************************************************************************************************************

கி.பி 1606 ல் தமிழ்நாட்டுக்கு வந்த நோபிலி அவர்கள் இத்தாலி நாட்டைச் சேர்ந்தவர். இயேசு சபையைச் சேர்ந்த இவர் தமிழகத்திலுள்ள மதுரைக்கு வந்தபோது தமிழகத்தில் வேரோடிப் போயிருந்த சமயப் பிரிவினைகளை முதலில் கவனித்தார். பெரும்பாலான மத செய்திகள் எல்லாம் அடித்தட்டு மக்களை, அல்லது கீழ் சாதி என்று சொல்லப்படுகின்ற மக்களை மட்டுமே சென்று சேர்கிறது என்றும், உயர் குல இந்துக்கள் கிறிஸ்தவத்தை நிராகரித்தார்கள் என்பதையும் அவர் புரிந்து கொண்டார். அவருடைய பார்வை உயர்குல இந்துக்களின் மேல் விழுந்தது. உயர்குல இந்துக்களை கிறிஸ்தவ மதத்தில் இழுக்க வேண்டும் என்று அவர் திட்டமிட்டார்.

அதற்கு இன்னொரு காரணமும் இருந்தது. உயர்குல இந்துக்கள் மட்டுமே கல்வியறிவுடனும், சமூக மரியாதைக்குரிய மனிதர்களாகவும் இருந்தார்கள். எனவே அவர்கள் கிறிஸ்தவ மதத்தைத் தழுவினால் கிறிஸ்தவம் மிக வேகமாக வளரும் என்பது அவருடைய கணிப்பு. அவர் உயர்குல இந்துக்களின் நடை உடை பாவனைகளையும், உணவுப் பழக்கவழக்கங்களையும் முதலில் கண்டறிந்தார். அவர்களுடைய அடையாளங்கள் என்னென்ன என்பதையும், சாஸ்திரங்கள் சம்பிரதாயங்களையும் ஆழமாய் கவனித்தார். அவர்களிடம் இருந்த தீண்டாமை என்னும் சாஸ்திரம் தான் அவர்களிடம் கிறிஸ்தவத்தைக் கொண்டு செல்ல மிகப்பெரும் தடையாய் இருக்கிறது என்பதை அவர் அறிந்து கொண்டார்.

பிராமணர்களைப் படித்த நோபிலி தானும் ஒரு பிராமணர் போல வேடமிட்டார் ! தங்கத்தினாலான பூணூல் அணிந்தார். நெற்றியிலும் மார்பிலும் சந்தனமிட்டார். அசைவ உணவை அறவே ஒதுக்கி சைவ உணவை மட்டுமே உண்டார். தன்னுடைய பெயரையும் தத்துவப் போதக சுவாமிகள் என்று மாற்றிக் கொண்டார். அவருடைய வேடத்தைக் கண்டு சற்றே நம்பினாலும் அவரை பிராமணர் என்று நம்புமளவுக்கு பூர்வீக பிராமணர்கள் முட்டாள்கள் அல்லவே. அவர்கள் அவரை சோதித்தார்கள்.

அவர்களைச் சமாளிக்க நோபிலி ஒரு திட்டமிட்டார். மிகவும் பழைய ஓலை ஒன்றில் சமஸ்கிருதத்தில் ஒரு ஸ்லோகம் எழுதினார். அதில் ரோமில் உள்ள இயேசு சபைப் பாதிரியார்கள் உண்மையிலேயே பூர்வீக பிராமணர்கள் என்று குறிப்பிட்டு அனைவரையும் நம்பச் செய்தார். இப்போது நோபிலி அவர்கள் உயர் குல மக்களோடு உறவாட முடிந்தது. பலருக்கு கிறிஸ்தவ மதத்தைப் பற்றி விளக்கி அவர்களை தன்பால் இழுத்தார்.

தமிழ் மொழியை நன்றாகக் கற்றுத் தேர்ந்த இவர் ஏராளம் உரை நடை நூல்களை எழுதினார். பல கிறிஸ்தவத் தத்துவங்களை தமிழ் மொழியில், தமிழ் மக்களுக்காக இவர் எழுதினார். இயேசு நாதர் சரித்திரம், ஞானோபதேச காண்டம், நித்திய ஜீவன் சல்லாபம் உட்பட பதினேழு உரைநடை நூல்களை இவர் தமிழ் மொழியில் எழுதினார்.

இவருடைய இந்த வேட அணுகுமுறையை கிறிஸ்தவத் தலைமையிடம் கண்டித்தது. யாரையும் ஏமாற்றி மனம் மாற்றுதல் தவறு என்று தலைமையிடம் இவரை கடிந்து கொண்டது. தான் யாரையும் ஏமாற்றும் நோக்கத்தில் இதைச் செய்யவில்லை என்றும், உயர்குல இந்துக்களை நெருங்கிப் பழகும் ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ளவே அப்படி நடந்து கொண்டதாகவும் நோபிலி விளக்கினார். கிறிஸ்த மதத்தைப் பரப்புவதற்காக தன்னுடைய விருப்பு வெறுப்புகளை விட்டு ஒரு உயர்குல இந்துவைப் போல நடந்து கொண்டது பார்வைக்குத் தவறாக இருந்தாலும் அடிப்படையில் அவர் நிறைவேற்றியது ‘எல்லா இனத்தாருக்கும் நற்செய்தியை அறிவியுங்கள்’ என்னும் இயேசுவின் கட்டளையைத் தான் என்று கூறி ரோம் இவர் குற்றமற்றவர் என்று அறிக்கை வெளியிட்டது.

இந்த சலசலப்புகள் வெளியே தெரிய ஆரம்பித்தன. உண்மை தெரிந்த உயர்குல இந்துக்கள் இவரைப் புறக்கணித்தார்கள். இவரை எங்கும் சேர்த்துக் கொள்ளவில்லை. தனக்கு மதுரை உயர்குல மக்களிடம் இருந்த ஆதரவு விலகி விட்டதை அறிந்த நோபிலி வட தமிழகத்தை நோக்கி தன்னுடைய பணியைத் இடமாற்றம் செய்தார். கி.பி 1656ல் இவர் சென்னையில் காலமானார்.
***************************************************************************************************************************************************

புலித்தோலில் அமர்ந்த கிறிஸ்தவர்.
வீரமாமுனிவர் – கான்ஸ்டண்டைன் ஜோசப் பெஸ்கி

***************************************************************************************************************************************************

கி.பி 1700 ல் மதுரைக்கு இத்தாலியிலிருந்து வந்த இயேசு சபையைச் சேர்ந்த இன்னொருவர் பாதிரியார் பெஸ்கி. சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் சிறந்த தமிழ் பண்டிதரான சுப்பிரதீபக் கவிராயரிடம் இவர் தமிழ் பயின்றார். வெறும் வாசிப்பு அனுபவத்துக்காகவோ, பேச்சு அறிவுக்காகவோ இவர் தமிழ் கற்கவில்லை. ஆழமான அறிவு வேண்டுமெனும் வேட்கையுடன் தமிழ் கற்றார். தமிழுடன் சேர்த்து சமஸ்கிருந்தம், தெலுங்கு போன்ற மொழிகளையும் இவர் கற்றறிந்தார்.

இவரும் தன்னுடைய நடை உடை பாவனைகளை மாற்றிக் கொண்டு தான் பணி செய்தார். காவி உடையும், தலைக்கு தொப்பியும், நெற்றிக்கு சந்தனமும் இட்டுக் கொண்டு, சைவ உணவை மட்டும் உண்டு வாழ்ந்து வந்தார் இவர். புலித்தோலில் அமர்ந்து செபமும், தபமும் செய்பவராக இருந்தார். இந்துஸ்தான், பாரசீகம் போன்ற மொழிகளையும் அறிந்திருந்ததால் இவரை மதுரையில் ஆண்டு வந்த சந்தா சாகிபு என்னும் நவாபு தனக்குத் திவானாக ஏற்படுத்தினார்.

தமிழ் மொழியில் சிறப்பு பயிற்சி பெற்ற இவர் தமிழ் இலக்கியங்கள் அனைத்தையும் படித்தார். தமிழ் மொழிக்கு என்னென்ன தேவை என்பதையும் மனதுக்குள் குறித்துக் கொண்டார். அதன் விளைவாக வந்தது தான் தமிழின் முதல் அகராதி ! இவருடைய சதுரகராதியே தமிழில் எழுதப்பட்ட முதல் அகாராதியாகும்.

இவருடைய தேம்பாவணி இன்னும் காலத்தைக் கடந்து நிற்கும் உயர்ந்த இலக்கியமாகிறது. 1726ம் ஆண்டில் இவர் தேம்பாவணியை எழுதினார். கலி வெண்பா, அன்னை அழுங்கல் அந்தாதி, கித்தேரியம்மாள் அம்பானை,திருக்காவலூர்க் கலம்பம், அடைக்கல மாலை இவையெல்லாம் இவர் எழுதிய செய்யுள்கள்., இதைத் தவிர வேதியர் ஒழுக்கம், திருச்சபைக் கணிதம், வாமன் கதை உட்பட பல உரை நடை நூல்களையும் எழுதியுள்ளார்.

தமிழுக்கு பல நன்மைகள் செய்து, தமிழ் மூலம் கிறிஸ்தவத்தின் வளர்ச்சிக்கும் தன்னாலான பங்களிப்பை அளித்த வீரமாமுனிவர் 1742ல் காலமானார்.
***************************************************************************************************************************************************

ஸீகன் பால்கு

***************************************************************************************************************************************************

கிறிஸ்தவ மதத்திலுள்ள புராட்டஸ்டண்ட் – பிரிவிலிருந்து முதன் முதலாய் இந்தியாவுக்கு வருகை தந்தவர் இவர் தான். தன்னுடைய நண்பர் பிளீஷௌ என்பவருடன் 1705ம் ஆண்டு தரங்கம்பாடியில் வந்து சேர்ந்தார் இவர். ஜெர்மன் நாட்டிலுள்ள புல்ஸ்னிட்ஸ் என்னும் நகரில் இவர் பிறந்தார். டென்மார்க் நாட்டின் அரசன் நாலாம் ப்ரடரிக் என்வர் தமிழ்நாட்டிற்கு நல்ல மத போதகர்களை அனுப்பவேண்டும் என்று விரும்பி அழைப்பு விடுத்தான். இதைக் கேள்விப்பட்ட ஜெர்மனி நாட்டு சீகன் பால்க் தன்னுடைய நண்பருடன் டென்மார்க் நாட்டு அரசனைச் சென்று சந்தித்து தமிழ்நாட்டுக்குப் பயணமானார்கள்.

சிறுவயதிலிருந்தே இறை பக்தியில் சிறந்து விளங்கிய சீகன் பால்க் தமிழ்நாட்டுல் கிறிஸ்தவ மதத்தைப் போதிக்கத் துவங்கினார். மொழி அவர்களுக்கு ஒரு தடையாக இருந்தது கற்றுக் கொண்ட தமிழை வைத்து இறை பணி செய்து வந்தார். வீரமாமுனிவரைப் போல இவர் தமிழில் பெரும் புலமை பெறவில்லை மதத்தை எடுத்துரைக்குமளவுக்கு கற்றிருந்தார்.

இவர் செய்த மிகப் பெரும் பணி ஜெர்மனியிலிருந்து அச்சு இயந்திரமும் தமிழ் எழுத்துக்களும் வரவழைத்தது தான். இதன்மூலம் ஏராளமான உரை நடை நூல்கள் வெளியிடப்பட்டன. இவருடைய காலத்தில் தான் உரைநடை நூல்கள் பொதுமக்களிடையே பெருமளவு புழங்கின. கிறிஸ்தவ மதத்தைப் பரப்பவும், தமிழ் மொழியை வளர்க்கவும் இந்த அச்சு இயந்திரங்கள் உதவின. ஆலயங்கள், கல்வி நிலையங்கள் போன்றவற்றை ஏற்படுத்தியும், கிறிஸ்தவ மதம் சார்ந்த நூல்களை தமிழ் மொழியில் மொழிபெயர்த்தும் இவர் கிறிஸ்தவ மதம் வளர மிகப்பெரும் தூணாக நின்றார். இவர் மூலமாகத் தான் புரட்டஸ்டண்ட் கிறிஸ்தவமதம் இந்தியாவில் முளை விட்டது. 1719ம் ஆண்டு இவர் மரணமடைந்தார்.

மதப் பிரச்சாரத்தில் மேலும் சிலர்
______________________

சீகன் பால்க் கிற்குப் பின் பிரான்சிஸ் வயிட் எல்லிஸ் என்னும் ஆங்கிலேயர் கிறிஸ்த மதப் பரப்புதலில் ஈடுபட்டார். இவர் வீரமாமுனிவரின் வாழ்க்கை வரலாறு, அவர் எழுதிய நூல்கள் போன்றவற்றை அச்சில் வெளியிட்டு அவற்றுக்கு மறு வாழ்வளித்தார். திருக்குறளின் முதல் பதிமூன்று அதிகாரங்களை இவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து தமிழ் வளர்ச்சிக்கும் ஊன்றுகோலாய் இருந்தார். பலரை கிறிஸ்தவ மதத்துக்குள் இணைத்த இவர் 1819ல் காலமானார்.

இவருக்குப் பின் சார்லஸ் தியோபிலஸ் எட்வர்ட் இரேனியுஸ் என்னும் ஜெர்மனியர் 1814ல் சென்னைக்கு வந்தார். இவர் லூத்தரன் மிஷன் என்னும் கிறிஸ்தவ மதப் பிரிவைச் சார்ந்தவர். இவர் தன்னுடைய இறைபணியை பெரும்பாலும் மனித நேய பணிகளின் மூலமாக வெளிப்படுத்தினார். விதவைகள் மறுவாழ்வு, பள்ளிக்கூடங்கள் கட்ட நிலம் வாங்கிக் கொடுத்தல், ஆலயங்கள் கட்ட உதவுதல், ஏழைகளுக்கு வறுமை போக்க உதவுதல் என பல நல்ல செயல்கள் செய்தார். மக்களோடு மக்களாக ஒன்றித்து வாழ்ந்தார். இவருடைய பணிகளில் கவரப்பட்டு பலர் கிறிஸ்தவத்தை ஏற்றுக் கொண்டனர். 1838ம் ஆண்டு இவர் காலமானார்.

அயர்லாந்துக் காரரான ராபர்ட் கால்ட்வெல் தென் தமிழகத்தில் ஏராளமான கிறிஸ்தவர்கள் உருவாக பெரும் பங்காற்றியவர். திருநெல்வேலையை அடுத்துள்ள பகுதிகளில் இவருடைய போதனைகள் காரணமாக சில நூறுகளாக இருந்த கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை இலட்சத்தைத் தாண்டியது. பின் அங்கேயே ஒரு சபையில் இறை பணி ஆற்றிவந்தார். திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்னும் நூலை இவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து தமிழ்ப் பணியும் செய்திருக்கிறார். இவருடைய நூலில் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்றவை ஒரே இனத்தைச் சேர்ந்தவை என்பதை விளக்கமாக எழுதியிருந்தார். திராவிட மொழிகள் ஒரே மூலத்தைச் சேர்ந்தவை என்பதை நூலாக்கிய பெருமை இவரையே சாரும். நற்கருணைத் தியான மாலை, தாமரைத் தடாகம், போன்றவை இவர் இயற்றிய பிற நூல்களாகும். 1891ம் ஆண்டு இவர் காலமானார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *