கிறிஸ்தவ வரலாறு 19 : மதத்தைப் பரப்பிய வணிகம்

 

யவணர்கள் தென்னிந்தியாவுடன் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வியாபாரத் தொடர்பு வைத்திருந்தார்கள். அவர்கள் கடல் வழியாக வந்து தென் இந்தியாவின் கடலோரப் பகுதிகளை தங்கள் வணிக வளாகமாக்கியதாக வரலாறு கூறுகிறது. தமிழ் இலக்கியங்கள் யவணர்கள் இந்தியாவுடன் கொண்டிருந்த வணிகத் தொடர்பைக் குறிப்பிடுகின்றன. காவிரிப் பூம்பட்டினம், மதுரை போன்ற இடங்களில் யவணர்கள் வசித்ததாக இலக்கியங்கள் சொல்கின்றன. கி.மு இருபத்து இரண்டிலேயே மதுரையை ஆண்ட பாண்டிய மன்னனுக்கும் யவன அரசர்களுக்கும் தொடர்பு இருந்ததாக தெரிகிறது. வணிகத் தொடர்புக்காக இந்தியாவுக்கு வருகை தந்தவர்கள் இந்தியாவின் வணிகச் சிறப்பைப் பற்றி மற்றவர்களுக்கும் சொல்வது வழக்கம். வணிகத் தொடர்பு இருந்ததேயன்றி அது மிகப் பெரிய அளவில் நடந்ததற்கான வரலாற்றுச் சான்றுகள் இல்லை.

ஹிப்பல்லஸ் காற்றின் திசையை அறிந்து எப்போதெல்லாம் கடல்வழிப் பயணம் செய்தால் விரைவாக பயணத்தை முடிக்க முடியும் என்பதை கி.பி 47ல் கண்டுபிடித்தார். அதன் பின்னர் வணிகத் தொடர்பு இன்னும் வளர்ந்தது. யவணர்களிடம் இந்தியாவிற்கு இருந்த வணிகத் தொடர்பு இஸ்லாமியர்கள் எகிப்து, பாரசீகம் போன்ற நாடுகளைக் கைப்பற்றிய ஏழாம் நூற்றாண்டுடன் அடியோடு நின்று போனது. அதன்பின் இஸ்லாமியர்கள் வணிகத்தைக் கையிலெடுத்துக் கொண்டார்கள். அவர்கள் இந்தியாவின் பொருட்களைக் கப்பல்களில் ஏற்றி ஐரோப்பா போன்ற நாடுகளுக்குக் கொண்டு சென்று பெரும் பொருளீட்டினார்கள்.

1498ம் ஆண்டு போர்ச்சுக்கல் நாட்டிலிருந்து வாஸ்கோடகாமா என்னும் வணிகர் இந்தியாவுக்கு வந்தார். யவணர்களுக்குப் பிறகு கிறிஸ்தவ மதம் சார்ந்த வியாபாரி இவர் தான். வாஸ்கோடகாமா இந்தியாவுடன் செய்து கொண்ட வணிக உடன்படிக்கையின் காரணமாக ஏராளமான போர்ச்சுக்கீசியர்கள் இந்தியாவிற்கு வருகை தந்தார்கள். அவர்கள் மூலமாக பல தாவரங்கள், பழச் செடிகள் இந்தியாவிற்கு அறிமுகமாயின. போர்ச்சுக்கீசியர்களின் வரவு இஸ்லாமியர்களின் வியாபாரத்தைப் பாதித்தது. அவர்கள் போர்ச்சுக்கீசியர்களை எதிர்த்தார்கள். ஆனால் போரில் இஸ்லாமியர்கள் தோல்வியைச் சந்தித்தார்கள். அதன்பின் போர்ச்சுக்கீசியர்களின் வாணிகம் எந்தவிதமான இடையூறுமின்றி சிறப்பாக நடந்தது.

போர்ச்சுக்கீசியர்களின் இந்திய வரவு தான் இந்தியாவில் கிறிஸ்தவம் பரவுவதற்குக் காரணமாய் இருந்தது. இயேசுவின் அப்போஸ்தலரான தோமா இந்தியாவில் வந்து கிறிஸ்தவ மதத்தை அறிமுகம் செய்தாலும் அது பதினைந்து நூற்றாண்டுகளாக வளராமலேயே இருந்தது. கேரள நாட்டில் இருந்த தோமா கிறிஸ்தவர்களும் மதத்தைக் கட்டிக் காத்தார்களே தவிர பரப்ப வேண்டுமென்று எண்ணவில்லை. எனவே கிறிஸ்தவம் முறையான வளர்ச்சியின்றி கவனிக்கப்படாமலேயே இருந்தது.
இவர்களோ பல இயேசு சபைப் பாதிரியார்களை இந்தியாவுக்கு அழைத்து வந்து கிறிஸ்தவ மதத்தைப் பரப்பும் பணியிலும் ஈடுபட்டார்கள். வீரமாமுனிவர், புனித சவேரியார் போன்றோர் அதில் முக்கியமானவர்கள்.

இந்தியாவுடன் போர்ச்சுக்கல் வணிகர்கள் செய்து வந்த வணிகம், ஹாலண்டு நாட்டுக்கும் ஆசையைத் தூண்டிவிட்டது. அங்கிருந்த டச்சுக்காரர்களும் இந்தியாவுடன் வணிகத்தைத் துவங்கினார்கள். அவர்கள் ஆரம்பித்த “கிழக்கிந்திய வர்த்தகச் சங்கம்” அவர்களுடைய வணிகத்தை விரிவு படுத்த உதவியது. இவர்கள் பதினேழாம் நூற்றாண்டின் இறுதியில் போர்ச்சுக்கீசியர்களைத் துரத்திவிட்டு வியாபாரத்தை முழுவதும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்கள்.

டச்சுக்காரர்களின் காலத்தில் கிறிஸ்தவ மதத்தைப் பரப்பும் பணி துரிதமாக நடைபெற்றது. இவர்கள் பலவேளைகளின் வன்முறையின் மூலமாகவும் மதத்தை மக்கள் மேல் திணிக்க முயன்றார்கள். விரும்பியும், விரும்பாமலும் பலர் கிறிஸ்தவர்களானார்கள். ஆங்கிலேயர்களின் வரவு இவர்களின் ஆட்சியை முடித்து வைத்தது.
அதன்பின் பிரஞ்சு மக்கள் இந்தியாவுடன் வாணிகம் செய்தார்கள். “பிரஞ்ச் கிழக்கிந்திய வர்த்தக சங்கம்” எனும் ஒரு சங்கத்தை 1664ல் இவர்கள் ஆரம்பித்தார்கள்.

வியாபாரத்துக்கு வந்த ஐரோப்பியர்கள் வெறும் வியாபாரத்தோடு தங்கள் கடமையை முடித்துக் கொள்ளவில்லை. அவர்களுடைய அடுத்த இலக்கு கிறிஸ்தவத்தைப் பரப்புதல் என்பதே. இதற்காக அவர்கள் ஏராளமான கிறிஸ்தவப் பாதிரியார்களை இந்திய தேசத்துக்கு அழைத்து வந்தார்கள். இந்திய மொழி தெரியாத இவர்களுடைய மத ஆர்வமும், கிறிஸ்தவத்தைப் பரப்பும் ஆர்வமும் ஒருவகையில் இந்தியாவின் வளர்ச்சிக்கு அடிகோலின. அதிலும் குறிப்பாக தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு இவர்களின் வருகை மிகப்பெரிய வரமாய் அமைந்தது எனலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *