கிறிஸ்தவ வரலாறு :17 – கிறிஸ்தவத்தில் வன்முறை

 

புராட்டஸ்டண்ட் சபையினர் கத்தோலிக்க மதத்துக்கு எதிராகவும் அவர்களுடைய நம்பிக்கைகள் சடங்குகளுக்கு எதிராகவும் பலத்த விமர்சனங்களை எழுப்பினார்கள். அவர்களுடைய எதிர்ப்புகளுக்கு கத்தோலிக்க மதம் கண்டனங்களையும் வேறு பல எதிர் விமர்சனங்களையும் வைத்தது. இதனால் கிறிஸ்தவர்களுக்கிடையே ஒற்றுமையின்மை நிலவியது. யார் பெரியவன் என்னும் போட்டியாக அது உருவெடுத்தது.

கருத்துப் போர்களில் ஆரம்பித்த இந்த சண்டை பின்னர் வன்முறை நோக்கி நகர்ந்தது. ஆங்காங்கே ஏற்பட்ட கலவரங்கள் உலகம் தழுவிய கிறிஸ்தவர்களிடையே பெரும் மோதல் ஏற்பட விதையாக அமைந்தன. கத்தோலிக்க மதத்திலிருந்து பிரிந்து புராட்டஸ்டண்ட் சபையின் சட்டங்களற்ற சபைக்குச் சென்ற பல்லாயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் மீண்டும் தங்கள் முந்தைய விசுவாச வாழ்வின் மீது நம்பிக்கை வைத்து கத்தோலிக்க மதத்துக்குத் திரும்பினர். பல கத்தோலிக்க நாடுகள் புராட்டஸ்டண்ட் வழிக்கு மாறின. இவையெல்லாம் விரோதத்தை கிறிஸ்தவர்களிடையே வளர்த்தது.

கிபி 1618ம் ஆண்டு கத்தோலிக்க – புராட்டஸ்டண்ட் கருத்துப் போராட்டம் மிகப்பெரிய போராய் வெடித்தது. கிறிஸ்தவர்களும், கிறிஸ்தவத்தை எதிர்த்தவர்களும் இந்த போரில் ஈடுபட்டார்கள். பல அரசர்கள் தங்கள் விரோதத்தைத் தீர்த்துக் கொள்ள இந்த போரை பயன்படுத்தினார்கள். ஐரோப்ப நாடு முழுவதும் இந்த போரில் ஈடுபட்டது. இந்த யுத்தம் முப்பது ஆண்டுகள் நடந்தது.

ஜெர்மன் உட்பட பல நாடுகள் பெருமளவில் பாதிக்கப்பட்டன. ஜெர்மனியில் முப்பது சதவிதம் மக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். கொடிய ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன. கத்தோலிக்கர்களை, பிரிந்து சென்ற மதத்தினரும், பிரிந்து சென்றவர்களை கத்தோலிக்கர்களும் பரஸ்பரம் தாக்கிக் கொண்டனர். பலர் கொலை செய்யப்பட்டனர். சொத்துகள் சூறையாடப்பட்டன. இயேசுவால் நிறுவப்பட்ட சபை என்று கர்வம் கொண்டிருந்த கத்தோலிக்க மதமும், வேதத்தின் படி வாழ்கிறோம் என்று சொல்லிக் கொண்ட புராட்டஸ்டண்ட் மதமும் இயேசுவின் உண்மையான போதனையை மறந்து விட்டு விரோதம் வளர்த்தார்கள்.

கிபி 1648 ல் மேற்கு பாலியா என்னுமிடத்தில் ஒரு சமாதான உடன்படிக்கை செய்யப்பட்டது. இதன் மூலம் ஒரு தலைமுறைகாலம் நடந்த யுத்தம் முடிவுக்கு வந்தது. புராட்டஸ்டண்ட், கத்தோலிக்க மத எல்லைகள் வரையறுக்கப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *