கிறிஸ்தவ வரலாறு :15 – புராட்டஸ்டண்ட் சபையின் துவக்கம்

 

கி.பி 1483ம் ஆண்டு பிறந்த மார்ட்டின் லூத்தர் என்பவரே புராட்டஸ்டண்ட் சபையின் துவக்கத்துக்கு வித்திட்டவர். நல்ல இறை சிந்தனையும், பக்தியும் உடைய லூத்தர் முதலில் நம்பியது துறவறத்தையே. சில காலம் துறவறத்தில் இணைந்து துறவியாகவே வாழ்க்கை நடத்தினார் இவர். தன்னுடைய உயிர்நண்பனின் திடீர் மரணம் தந்த பாதிப்பு இவரை மரணத்தின் மீது பயம் கொள்ள வைத்தது. மரணத்தின் பயத்திலிருந்து எப்படித் தப்புவது ? மரணத்துக்குப் பின் என்ன நிகழும் என்பவை போன்ற சிந்தனைகள் அவரை வாட்டின. எனவே அகஸ்டீனியரின் மடத்தில் சென்று தன்னுடைய இருபத்து இரண்டாவது வயதிலேயே துறவியானார். தந்தையின் கனவுகள் தகர்ந்தன. லூத்தரோ அடுத்த வாழ்க்கையைக் குறித்தே அதிகமாய் கவலைப்பட்டார். மோட்சத்தை அடைய என்ன வழி என்று எப்போதும் யோசிக்கத் துவங்கினார்.

துறவற வாழ்க்கை அவருக்கு நிம்மதியைத் தரவில்லை. வாழ்க்கையில் ஏதோ ஒன்று குறைபடுவதாக அவருடைய உள்ளுணர்வு உறுத்திக் கொண்டே இருந்தது. துறவற வாழ்க்கை அவருக்கு மனதோடு உரையாடும் பக்குவத்தை வழங்கியிருந்தது. தன்னுடைய கேள்விகளையும், அதற்குரிய பதில்கள் என்னவாக இருக்கும் என்பதையும் அவர் தன்னுடைய மனதில் இருத்தி தியானித்துக் கொண்டே இருந்தார். கி.பி 1507 ல் அவர் குருப்பட்டம் பெற்றார். ஆனாலும் மனதில் கவலைகள் தீரவில்லை. வேதாகமத்தை வாசிப்பதில் தீவிர ஆர்வம் காட்டிய அவர் விவிலியத்தின் மூல மொழிகளைக் கற்கும் ஆர்வம் காட்டினார். எபிரேய கிரேக்க மொழிகளைக் கற்றுத் தேர்ந்தார். இறையியல் பயின்று போதகர்களுக்கான B.D பட்டமும் பெற்றார். விட்டன்பெர்க் பல்கலைக் கழகத்தில் பணியாற்றிய அவருக்கு அங்குள்ள ஆலயத்தில் போதிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பு லூத்தரின் வாழ்வில் முக்கியமான நிகழ்வாய் அமைந்தது.

ஆலயத்தில் போதிப்பதற்காக அவர் வேதாகமத்தை மிகவும் ஆழமாக வாசிக்கத் துவங்கினார். அப்போது பரவலாக மக்களிடம் வேதாகமம் இல்லாததால் இவருடைய பேச்சையும், நற்செய்தியையும் கேட்க மக்கள் குவிந்தார்கள். இயல்பிலேயே நல்ல பேச்சுத் திறமை கொண்டிருந்த லூத்தர் தன்னுடைய பேச்சுத் திறமையால் மக்களை வசீகரித்தார்.

ஸ்தொபிட்ஸ் துறவிகளுக்கும், அகஸ்டின் மட துறவியருக்குமிடையே கருத்து மோதல்கள் எழுந்தபோது லூத்தர் நடுநிலைவாதியாக ரோம் நகருக்குச் சென்று போப்பைச் சந்தித்தார். அப்போது இரண்டாம் ஜூலியஸ் என்பவர் போப்பாக இருந்தார். அந்நேரத்தில் பிரான்ஸ் மீது யுத்தம் நடந்து கொண்டிருந்தது. லூத்தரின் பயணம் வெற்றிகரமாக இருக்கவில்லை. அவர் அங்கே காத்திருக்க நேரிட்டது. ரோம் ஆலயத்தில் இருந்த பிரம்மாண்டம் அவரை வியக்க வைத்தது. அங்கே இருந்த பரிசுத்த ஏணி என்றழைக்கப்படும் படிக்கட்டுகளையும் தரிசித்தார். அந்த படிக்கட்டுகளில் முழங்காலால் ஏறி செபம் செய்து தங்கள் பாவங்களைக் கரைப்பது அங்கே வரும் கிறிஸ்தவர்களின் நம்பிக்கையாக இருந்தது. வாழ்வில் நிம்மதி தேடி அலைந்த லூத்தருக்கு அதுவும் நிம்மதி தரவில்லை. உள்ளுக்குள் மீண்டும் கேள்விகள். இவை உண்மை என்று எப்படி நம்புவது என்று அவருக்குள் மீண்டும் சந்தேகம்.

தான் சென்ற பணியை முடித்துவிட்டு மீண்டும் விட்டன்பர்க் ஆலயத்தில் போதனைசெய்து கொண்டிருந்தார் லூத்தர். ரோமன் கத்தோலிக்க மதத்தில் இருந்த குறைபாடுகள் அவருடைய மனதை வெகுவாகப் பாதித்தது. கடவுளிடமிருந்து பாவ மன்னிப்பைப் பெற்றுத்தரும் கருவிகளாக தாங்கள் மட்டுமே இருப்பதாக குருக்கள் கர்வத்துடன் நினைத்தது லூத்தரை எரிச்சலடைய வைத்தது. அதுமட்டுமின்றி அந்நாட்களில் ரோமன் கத்தோலிக்கர்களுக்கு பெரிய எதிர்ப்பு ஏதும் வராததால் அவர்கள் இறை பணியையும் சரிவரக் கவனிக்கவில்லை. இவையெல்லாம் லூத்தரின் போதனைகளில் முக்கிய இடம் பிடித்தன. அவருடைய போதனைக்கும், அவருடைய சொல்வன்மைக்கும் மக்கள் குவிந்ததால் தனியே ஒரு சபை ஆரம்பிக்கும் எண்ணம் அவருக்குள் உதித்தது. அப்படி உதித்தது தான் புரட்டஸ்டண்ட் சபை. விவிலிய அறிவு பெற்றிருந்த லூத்தர் ‘விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான்’ என்னும் வார்த்தையை தன்னுடைய போதனைகளின் மையமாக்கிக் கொண்டார். அவர் சார்ந்திருந்த மடத்திலுள்ளவர்களைச் சந்தித்து அவர்களுடைய ஆதரவையும் பெற்றார் லூத்தர். தனியே ஒரு குழுவாக இயங்க ஆரம்பித்தார். அவருடைய போதனைகளில் ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையின் சடங்குகளையும், அவர்களுடைய வழிபாட்டு முறையையும் அனைத்தையும் கடுமையாக விமர்சித்தார்.

கத்தோலிக்கத் திருச்சபையில் இருந்து கொண்டே லூத்தர் தனியே சபை ஆரம்பித்ததை திருச்சபை எதிர்த்தது. லூத்தர் திருச்சபையிலிருந்து விலக்கப்பட்டார். லூத்தர் கவலைப்படவில்லை. அவர் இதை எதிர்பார்த்திருந்தார். தன்னுடைய எதிர்ப்புகளை இப்போது இன்னும் அதிகமாக வெளிக்காட்ட ஆரம்பித்தார். பாவமன்னிப்பு உட்பட ஏராளம் சடங்குகளை லூத்தர் கடுமையாக எதிர்த்தார். அவருடைய பெயர் வேகமாக பரவியது.

லூத்தர் அதன்பின் ஜெர்மானிய மொழியில் விவிலியத்தின் புதிய ஏற்பாட்டு நூலை மொழிபெயர்த்தார். ஜெர்மானியர்கள் இதன் மூலம் விவிலியத்தை தங்கள் மொழியிலேயே வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. நாடுமுழுவதும் தன்னுடைய சபைக்குக் கிளைகள் ஏற்படுத்த கடுமையாய் உழைத்தார். கத்தோலிக்கக் குருமார்கள் திருமனம் செய்யக் கூடாது என்பது திருச்சபை நியதி. லூத்தர் திருச்சபையிலிருந்து வெளியே வந்தபின் 1525ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். புராட்டஸ்டண்ட் சபை கத்தோலிக்க மதத்தின் சடங்குகளை விலக்கி ஒரு புதிய சபையாக தன்னை வெளிக்காட்டிக் கொண்டது. புரட்டஸ்டண்ட் சபை விவிலியத்தை மையப்படுத்தியது. மீட்பு என்பது கடவுள் மீது நாம் வைக்கும் நம்பிக்கையினாலும், அவருடைய இரக்கத்தினாலும், விவிலிய வார்த்தைகளாலும் மட்டுமே என்பது இவர்களுடைய மையக்கருத்தானதால், சமுதாயப் பணிகளும், மனித நேயப் பணிகளும் பின் தள்ளப்பட்டன.

இங்கிலாந்தில் அப்போது எட்டாம் ஹென்றி ஆட்சி செய்து வந்தார். மிகவும் திறமையாக தன்னுடைய நாட்டை ஆட்சி செய்து கொண்டிருந்த அவருக்கு ஒரே ஒரு மகள் இருந்தாள். ஹென்றி ஆனி போலின் என்றொரு பெண்ணையும் நேசித்தார். தன் மனைவி தனக்கு ஒரு ஆண்குழந்தை பெற்றுத் தரவில்லை என்று சொல்லி தன்னுடைய மனைவியை விவாகரத்து செய்துவிட்டு ஆனி போலினைக் கைப்பிடிக்க மன்னன் முடிவு செய்தான். இதை கத்தோலிக்க மதம் ஏற்கவில்லை. அவருடைய விவாகரத்துக்கு எதிராக நின்றது. அரசனே ஆனாலும் செய்வது தவறு என்பதை கத்தோலிக்கத் திருச்சபை ஆணித்தரமாய் கூறியது.

காதல் மயக்கத்தில் இருந்த மன்னனுக்கு போப்பின் எதிர்ப்புகள் எரிச்சலைக் கிளப்பின. அவன் போப்புக்கும், திருச்சபைக்கும் எதிராகத் திரும்பினான். தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி மத குருமார்கள் பலரை தன்னுடன் இணைத்துக் கொண்டான். இனிமேல் இங்கிலாந்தில் திருச்சபைக்குத் தலைவர் போப் அல்ல, அரசனே என்று தீர்மானம் கொண்டு வந்தான். அவனுடைய சார்பாக இருந்த ஒரு பிஷப்பை வைத்து விவாகரத்து வாங்கி தான் விரும்பிய பெண்ணைத் திருமணம் செய்தான்.

இந்த மாற்றம் மிகப்பெரிய தாக்கத்தை கத்தோலிக்கத் திருச்சபையில் ஏற்படுத்தியது. மார்டின் லூத்தரால் துவங்கப் பட்ட புராட்டஸ்டண்ட் சபை பின்னாட்களில் மிகவும் பிரபலமாக வளர்வதற்கு எட்டாவது ஹென்றியின் இந்த முடிவே முன்னுரையானது. ஹென்றி கத்தோலிக்க திருச்சபையை விட்டு விட்டு புராட்டஸ்டண்ட் திருச்சபைக்கு சார்பானார்.

ஹென்றியின் காதல் மனைவி ஆனிபோலின் தாய்மை எய்தினாள். அவளுக்குக் குழந்தை பிறக்கும் நாளுக்காக மன்னன் ஆவலுடன் காத்திருந்தான். ஒரு ஆண்மகனை கையில் ஏந்தும் ஆர்வம் அவனிடம் மிளிர்ந்தது. ஆனால் அவளுக்கும் பெண்குழந்தையே பிறந்தது. மன்னன் தன் காதல் மனைவியை கொலை செய்தான். பின்னர் ஜேனி செய்மோர் என்னும் பெண்ணை மணந்தான். அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. இறுதியில் ஆனி என்னும் இன்னொரு பெண்ணையும் ஹென்றி மணந்தான். திருச்சபை நீதிக்கு எதிராக மன்னன் செய்ய இருந்த திருமணத்தை தடை செய்தது. மனைவியை விலக்கி விடுதல் முறையல்ல என்னும் இயேசுவின் போதனைகளை அது பிரதிபலித்தது. ஆனால் மன்னனோ தனக்குத் தானே சட்டங்களை வகுத்துக் கொண்டு விருப்பம் போல வாழ்ந்தான்.
கத்தோலிக்கத் திருச்சபைக்கும் இங்கிலாந்து மண்ணிற்கும் இருந்த பிடிப்பு உடைபட்டது இவருடைய காலத்தில் தான்.

எட்டாம் ஹென்றிக்குப் பிறகு மன்னனாகப் பொறுப்பேற்ற ஆறாம் எட்வர்ட் புராட்டஸ்டண்ட் திருச்சபையை தீவிரமாய் வளர்த்தார். குருமார்களின் திருமணத்தை அங்கீகாரம் செய்ததால் புராட்டஸ்டண்ட் மதத்தில் சேர்ந்த குருமார்கள் அனைவரும் திருமணம் செய்து கொண்டார்கள். இறந்தவர்களுக்காக, அவர்களுடைய ஆன்ம இளைப்பாறுதலுக்காக செபிப்பது நிறுத்தப் பட்டது. கத்தோலிக்கத் திருச்சபையின் அருளடையாளங்கள் விடப்பட்டன.

ஆறாம் ஹென்றிக்குப் பின் ஐந்து வருடங்கள் ஆட்சி செய்த ஹென்றியின் மகள் மேரி கத்தோலிக்க மதத்துக்கு ஆதரவாகச் செயல்பட்டாள். தன்னுடைய தந்தையின் முடிவு தவறானது என்னும் உறுதியான முடிவு அவளிடம் இருந்தது. எனவே தந்தை இயற்றிய சட்டங்களை அவள் திரும்பப் பெற்றாள். கத்தோலிக்கத் திருச்சபை மீண்டும் இங்கிலாந்தில் எழுச்சியடைந்தது. ஆனால் அந்த எழுச்சியை அடுத்து வந்த எலிசபெத் அடக்கினார். கிபி 1558 முதல் 1603 வரை ஆட்சி செய்த அவருடைய காலத்தில் புராட்டஸ்டண்ட் சபைக்கு ஆதரவாக அனைத்தும் செய்யப்பட்டன.

புராட்டஸ்டண்ட் மதம் வேகமாக வளர்ந்தது. கத்தோலிக்கத் திருச்சபைக்கு எதிராக எழும்பிய முதல் மிகப்பெரிய பிரிவு என்னும் பெயரை புராட்டஸ்டண்ட் பிரிவு பெற்றது. மற்ற பிரிவுகளைப் போல காலப்போக்கில் அழிந்து விடாமல் அது உலகெங்கும் கிளை விரித்துப் படர்ந்தது. பிரான்ஸ், ஹாலந்து, ஸ்காட்லாண்ட் துவங்கி எல்லா இடங்களிலும் புராட்டஸ்டண்ட் திருச்சபை வளர்ந்தது. புதிய போதனைகளால் வசீகரிக்கப்பட்டு புராட்டஸ்டண்ட் சபைக்குத் திரும்பிய பல நாடுகள் மீண்டும் கத்தோலிக்க மதத்தில் இணைந்த சம்பவங்களும் ஏராளம் நடந்தன. போலந்து, பெல்ஜியம் போன்ற நாடுகள் புராட்டஸ்டண்ட் பிரிவில் இணைந்து சில காலம் இயங்கிவிட்டு மீண்டும் தாய் திருச்சபையான கத்தோலிக்கத்துக்கே திரும்பின.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *