கிறிஸ்தவ வரலாறு 21 : நாடுகளில் கிறிஸ்தவம்

**************************************************************************************************************************************************

பிரிட்டனில் கிறிஸ்தவம்
**************************************************************************************************************************************************
பிரிட்டனுக்குள் எப்போது கிறிஸ்தவம் நுழைந்தது என்பதைக் குறித்த தெளிவான குறிப்புகள் இல்லை. எனினும் மூன்றாம் நூற்றாண்டுகளில் கிறிஸ்தவம் பிரிட்டனில் இருந்ததற்கான சான்றுகள் உள்ளன.

கி.பி 286ம் ஆண்டு அல்பான் என்பவர் கிறிஸ்தவராக இருந்த காரணத்திற்காய் சிரச்சேதம் செய்யப்பட்டார். படைவீரராய் இருந்த அவர் காயமடைந்த ஒரு குருவானவருக்கு உதவி செய்து அவரை படையின் கையிலிருந்து தப்புவித்தார்.

படைவீரர்கள் வந்து விசாரித்தபோது துணிச்சலாய் தான் ஒரு கிறிஸ்தவன் என்றும் குருவை தானே தப்பித்ததாகவும் சொல்ல சிரச்சேதம் செய்யப்பட்டார் என்கிறது வரலாறு. அந்த இடத்தில் புனித அல்பான் ஆலயம் அமைந்துள்ளது.

இயேசுவின் காலத்தில் வாழ்ந்த அரிமத்தியா ஊரானாகிய சீமோன் எனும் சீடரால் பிரிட்டிஷ் தீவுகளில் கிறிஸ்தவம் நுழைந்திருக்கலாம் என்று செவி வழிச் செய்திகள் உலவுகின்றன.

வணிகர்கள் மூலமாக கிறிஸ்தவம் அங்கே நுழைந்திருக்கவோ, ரோம் அரசு பிரிட்டன் மீது போர் தொடுத்தபின் கிறிஸ்தவம் பரவியிருக்கவோ கூட வாய்ப்புகள் உள்ளன.

ஆரோன் , ஜூலியஸ் எனும் இருவர் கூட கிறிஸ்தவ மதத்தினரானதால் படுகொலை செய்யப்பட்ட வரலாறு உண்டு. எனவே துவக்க காலத்திலேயே கிறிஸ்தவம் பிரிட்டிஷ் தீவுகளில் நுழைந்திருக்கிறது.

கி.பி 312ல் நடந்த ஆர்ல்ஸ் கவுன்சிலில் லண்டனிலிருந்தும், யார்க்கிலுமிருந்தும் இரண்டு பேராயர்கள் கலந்து கொண்டிருக்கின்றனர். எனவே அமைப்பு ரீதியான கிறிஸ்தவம் மூன்றாம் நூற்றாண்டுகளின் துவக்கத்திலேயே பிரிட்டனில் உண்டு என்பது தெளிவாகிறது.

கிறிஸ்தவத்தின் கொள்கைப் பிரிவுகளில் பிரிந்தவர்களைக் குறித்த குறிப்புகளும் இந்த நூற்றாண்டு சரித்திரத்தில் இடம்பெற்றுள்ளன. ஹிலாரி, ஜெரோம், அடனாஸ் போன்றோரின் குறிப்புகளில் அவர்கள் பிரிவுக் கொள்கைகளில் நுழைந்து விடவில்லை என குறிப்பிட்டுள்ளனர்.

ரோமர்கள் பிரிட்டனிலிருந்து கி.பி 418களில் பிரிந்தபோது பெலாகியு கொள்கை பரவியிருந்ததாக அரசியல் குறிப்பேடுகள் தெரிவிக்கின்றன. அந்த கொள்கையின் பிடியிலிருந்து கிறிஸ்தவர்களை வெளியேற்ற வெளியிடங்களிலிருந்து, குறிப்பாக கால் என்னுமிடத்திலிருந்து பேராயர்கள் வரவழைக்கப்பட்டிருக்கின்றனர்.

சாக்சன்ஸ் மற்றும் ஆங்கில்ஸ் தாக்குதல் கி.பி.449 களில் நடந்தபோது கிறிஸ்தவர்கள் வேல்ஸ், கார்ன்வால் போன்ற இடங்களுக்குக் குடிபெயர்ந்தனர்.
வேல்ஸ்லிலுள்ள பாங்கார் என்னுமிடத்தில் துறவற மடம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டு சுமார் இரண்டாயிரம் துறவிகள் அங்கே தங்கினர்.

புனித பாட் ரிக் அயர்லாந்தில் கிறிஸ்தவம் வளர முக்கிய காரணியாக இருந்தார். வேல்ஸ்சில் ஒரு துறவியின் மகனாக 389ல் பிறந்த இவர் அயர்லாந்தில் அடிமையாக விற்கப்பட்டு பல ஆண்டுகள் அங்கே துன்புற்றவர்.

அங்கிருந்து தப்பி ஐரோப்பா சென்று கிறிஸ்தவ துறவி மடத்தில் இணைந்தார். தனது நாற்பத்து மூன்றாவது வயதில் குருப்பட்டம் பெற்றபின் தான் அடிமையாய் வாழ்ந்த அயர்லாந்திற்கே சென்றார். அங்கே தனது மரணம் வரை சுமார் முப்பது ஆண்டுகள் பணியாற்றினார்.

அவருடைய முயற்சியால் கிறிஸ்தவம் அயர்லாந்தில் முழு மூச்சாக வளர்ந்தது. ஒரு காலகட்டத்தில் ‘புனிதர்களின் தீவு’ என்று அழைக்கப்படும் அளவுக்கு அயர்லாந்து கிறிஸ்தவத் துறவிகளால் நிறைந்தது. சுமார் 435 பேராயர்கள் கிறிஸ்தவக் குரு மடங்களை நிர்வாகித்தனர்.

கொலம்பா என்பவரின் முயற்சியால் கிறிஸ்தவம் ஸ்காட்லாந்தில் பரவியது. இவர் கிபி 521ல் பிறந்த இவர் தன்னுடைய வாழ்வின் பெரும்பாகத்தை கிறிஸ்தவ மதத்தைப் பரப்புவதிலேயே செலவிட்டார்.

இவருக்கு முன்பாகவே நினியன் என்பவர் நாலாம் நூற்றாண்டின் இறுதிகளிலேயே கிறிஸ்தவத்தை ஸ்காட்லாந்தில் பரப்பியிருக்கிறார். இவர் ஸ்காட்லாந்தின் தென்பாகத்தில் கிறிஸ்தவத்தைப் பரப்பினார். கொலம்பா வடபாகத்தில் தன்னுடைய பணியை மேற்கொண்டார்.

ஸ்காட்லாந்திலும் கிறிஸ்தவம் துறவற சபை மூலமாகவே வளர்ந்தது,.

போப் கிரகோரி ஸ்காட்லாந்தில் கிறிஸ்தவத்தைப் பரப்புவதற்காக பெரும் முயற்சிகள் செய்தார். அகஸ்டின் எனும் குருவானவர் ஸ்காட்லாந்திற்கு வந்தார். அவருடன் வேறு சில துறவியரும் கிபி 597ல் ஸ்காட்லாந்தின் கெண்ட் பகுதிக்கு வந்தனர்.

அப்போது அங்கு மன்னனாயிருந்த எட்வர்ட் கிறிஸ்தவ மதத்தை அறிந்திருந்தார். எனவே அகஸ்டினும் அவருடன் வந்த குருமார்களுமாக சேர்ந்து கிறிஸ்தவத்தை விரைவாகப் பரப்பினர்.

பிரிட்டன் முழுவதுமே போப்பின் அதிகாரத்தை ஏற்றுக் கொண்டு செயல்பட்டன. எனவே தலைமை குறித்த விவாதங்கள் பெருமளவில் எழவில்லை.

**************************************************************************************************************************************************

ஜெர்மனியில் கிறிஸ்தவம்
**************************************************************************************************************************************************
ஜெர்மனியில் கிறிஸ்தவம் நுழைந்த வரலாறு பெரும்பாலும் இங்கிலாந்து நற்செய்தி அறிவிப்புப் பணியாளர்களைச் சார்ந்தே இருந்தது. ஹாலந்து, ஜெர்மனி போன்ற இடங்களில் கிறிஸ்தவர்கள் நுழைய இங்கிலாந்து சபையின் பங்களிப்பே முக்கியமானது.

வில்லிபிராட், வில்பிரட் எனும் பானிபேஸ் என்னும் இருவருடைய வரலாறும் ஜெர்மனியில் கிறிஸ்தவம் வளர்ந்த வரலாறோடு மிகவும் நெருங்கிய தொடர்புடையது.

வில்லிபிராட் தன்னுடைய கிறிஸ்தவ மதப் பரப்புதலை பெல்ஜியம், ஹாலந்து போன்ற இடங்களில் செய்தார். அந்த நாடுகளில் வாழ்ந்த ஜெர்மன் – பிரிசீய குலத்தினரிடையே இவர்களுடைய கிறிஸ்தவ மத போதனை முழு மூச்சாய் நடந்தது.

தனது முப்பத்து மூன்றாவது வயதில் ஹாலந்துக்குச் சென்ற வில்லிபிராட் தமது எண்பத்து ஓராவது வயது வரை கடுமையாக உழைத்தார். அவருடன் ஒரு குழுவாக பல குருக்கள் ஹாலந்துக்குச் சென்று மதப் பணி ஆற்றினார்கள்.

போப் அவருக்கு முழுமையான ஆதரவு அளித்தார். அவரை ஒரு பேராயராகவும் நியமித்தார்.

வில்பிரட் தன்னுடைய பணிவாழ்க்கையில் பானிபேஸ் என்றே அழைக்கப்பட்டார். இவருடைய பணி மிகவும் குறிப்பிடத்தக்கது. 718ல் போப்பின் அனுமதியுடன் ஜெர்மனிக்கு வந்த வில்பிரட் தன்னுடைய பணியை செவ்வனே செய்தார். அவருடைய உழைப்பினால் பல கிறிஸ்தவக் குழுக்கள் ஜெர்மனியில் புதிதாய் தோன்றின.

ஜெர்மனியில் உள்ள அனைத்து கிறிஸ்தவ இயக்கங்களையும் போப்பின் அதிகாரத்திற்குக் கீழே இணைத்த பெருமையும் இவரையே சாரும். ஒரே தலைமைக்கு இவர் மிகவும் மரியாதை செலுத்தினார்.

எஸ்ஸென் நாட்டில் ஒரு மிகப்பெரிய மரம் இருந்தது. அந்த மரம் தெய்வீகத் தன்மை வாய்ந்தது என்றும், அதை வெட்டினாலோ அதை பழித்துப் பேசினாலோ மரணம் நிச்சயம் என்று காலம் காலமாக நம்பிக்கை அங்கே உலவி வந்தது.

வில்பிரட் தன்னுடைய போதனைக்குக் குறுக்கே நின்ற அந்த மரத்தைப் பார்த்தார். இந்த மரத்தை நான் வெட்டி வீழ்த்துகிறேன். உங்கள் கடவுள் உண்மையானவராய் இருந்தால் என்னைக் கொல்லட்டும் என்று சவால் விட்டார்.

நாட்டு மக்கள் பெரும் திரளாக மரத்தினருகே குவிந்தனர். வில்பிரட் தன்னுடைய உடன் பணியாளருடன் மரத்தருகே வந்தார். மக்களிடம் சிறு உரையாற்றிவிட்டு மரத்தை வெட்டி வீழ்த்தினார்.

சுற்றியிருந்த மக்கள் அதிர்ந்தனர். வில்பிரட் கண்டிப்பாக இறந்துவிடுவார் எனும் நம்பிக்கையில் அவரையே பார்த்துக்கொண்டிருந்தனர். ஒன்றும் நடக்கவில்லை. அவர்களுடைய நம்பிக்கைக்கு கோடரி அங்கே வைக்கப்பட்டது. கிறிஸ்தவ மதம் அந்த பகுதியில் நுழைய அது ஒரு காரணமாயிற்று.

வில்பிரட் ஜெர்மனியில் துறவற சபைகளையும் ஏற்படுத்தினார். அவை பெனடிக் குழுவைப் போல செயல் பட்டன. போப்பின் அதிகாரத்துக்கும், வழிகாட்டலுக்கும் உட்பட்டே அவருடைய பணிகள் இருந்தன.

கி.பி754 ஜூன் ஐந்தாம் தியதி வில்பிரட் தன்னுடைய உடன் பணியாளரோடு திருமுழுக்கு கொடுக்க வந்திருந்தார். திருமுழுக்கு பெற்று கிறிஸ்தவத்தில் சேர பலர் தயாராய் இருந்தார்கள். அப்போது பிற மதத்தைச் சேர்ந்தவர்கள் அவர்கள் மீது கொடூரமாகத் தாக்கினர்.

வில்பிரட் படுகொலையானார். அவருடைய உடன் பணியாளரும் மாண்டனர். வில்பிரட் மரணம் வரை கிறிஸ்தவ மதத்துக்காய் சிறப்பாகப் பணியாற்றியதால் ஜெர்மனியில் அப்போஸ்தலர் எனும் பெயரைப் பெற்றார்.
**************************************************************************************************************************************************

பிற நாடுகளில் கிறிஸ்தவத்தின் வளர்ச்சி

**************************************************************************************************************************************************
அன்ஸ்காரின் கிறிஸ்தவ மத பரப்புப் பணி குறிப்பிடத்தக்க இடம் வகிக்கிறது. ஐரோப்பாவின் வட பகுதிகளில் இவருடைய முயற்சியினால் கிறிஸ்தவம் நுழைந்தது, வளர்ந்தது.

அன்ஸ்காரின் பணி முதலின் டென்மார்க்கில் ஆரம்பமானது. ஆனால் டென்மார்க் நகரில் அவருடைய கிறிஸ்தவ மதப்பணி பெரும் வரவேற்பைப் பெறவில்லை. அப்போது தான் ஸ்வீடன் நாட்டு மன்னனின் அழைப்பு அன்ஸ்காருக்கு வந்தது.

அன்ஸ்கார் ஸ்வீடன் சென்றார். அங்குள்ள மக்களுக்கு குறிப்பாக வணிகர்களுக்கு அவர் கிறிஸ்தவத்தைப் போதித்தார். அங்கே ஓராண்டு காலம் சிறப்பான பணி செய்தபின் ஹாம்பர்க் சென்றார். அது ஜெர்மனியின் ஒரு துறைமுக நகரம்.

கி.பி 865ம் ஆண்டு வரை இவருடைய பணி தொடர்ந்தது. பலரை குருக்களாகவும், மறை பரப்புக் கருவிகளாகவும் இவர் தயாராக்கினார். இவரிடமிருந்து பலர் நாட்டின் வெவ்வேறு பகுதிகளுக்குச் சென்று போதித்தனர்.

டென்மார்க், நார்வே, ஸ்வீடன் எனும் மூன்று நாடுகளிலும் கிறிஸ்தவம் அடுத்த நூற்றாண்டில் வளர அன்ஸ்காரின் அடித்தளமே மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததென கருதப்படுகிறது.

கிரீமியா நாட்டு மக்களுக்கு கிறிஸ்தவ மதத்தைக் கொண்டு சென்றவர்கள் இருவர். ஒருவர் சிரில், இன்னொருவர் அவருடைய சகோதரர் மெதாடியஸ். குறிப்பாக கிரீமியா நாட்டில் சிரில் செய்த கிறிஸ்தவ அடித்தளப் பணி காரணமாக அங்கே ஒரு சபை உருவானது.

கிரீமியா கி.பி 1016ம் ஆண்டு ரஷ்யாவின் ஆட்சியின் கீழ் வந்தது. அப்படி ரஷ்ய நாட்டிலும் கிறிஸ்தவ மதத்தின் சிறு முளை எழுந்தது. ரஷ்ய பழங்குடியினரின் மொழியைக் கற்ற சிரில் அந்த மொழியில் பைபிளின் ஒரு பாகத்தை எழுதி பணி செய்தார்.

ரஷ்ய மன்னன் வால்டிமோர் கிபி 988ல் கிறிஸ்தவ மதத்தைத் தழுவினான். அதன்பின் ரஷ்யாவில் கிறிஸ்தவம் வளர்ந்தது. அவருடைய இறப்புக்கு முன்பே கிறிஸ்தவம் ரஷ்யாவில் மூன்று பெரும் பிரிவுகளுக்குக் கீழ் ஒன்றிணைந்தது.

மெதாடியஸ் பல்கேரிய நாட்டு மன்னனிடம் சென்று கிறிஸ்தவ மதத்தைக் குறித்து உரையாடினார். முக்கியமாக இறுதித் தீர்ப்பைக் குறித்து அவர் மன்னனிடம் எச்சரிக்கை செய்தார். அணையா நெருப்பில் வேக வேண்டுமோ எனும் பயத்தின் காரணமாகவே மன்னன் கிறிஸ்தவனானான். மன்னன் கிறிஸ்தவன் ஆனதனால் நாட்டில் பலர் கிறிஸ்தவ மதத்தைத் தழுவினார்கள்.

எகிப்தை ஒட்டிய பகுதிகளில் இருந்த ஆதிகால கிறிஸ்தவம் இஸ்லாமியர்களின் ஆட்சியின் கீழ் அழிந்து விட்டது. பின் பத்தொன்பதாம் நூற்றாண்டில் வணிகர்களால் அங்கு கிறிஸ்தவம் நுழைந்தது. மேற்கு ஐரோப்பிய நாடுகளின் ஆதிக்கம் வந்தபோது கிறிஸ்தவம் பரவியது.

அல்ஜீரியாவில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் ஐம்பது இலட்சம் கிறிஸ்தவர்கள் இருந்தார்கள்.

பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆஸ்திரேலியா பிரிட்டிஷ் ஆதிக்கத்துக்குள் வந்தபோது கிறிஸ்தவம் அங்கே பரவியது.

பாலஸ்தீனாவிலும் கிறிஸ்தவம் முற்றிலும் அழியவில்லை. கத்தோலிக்க சபையினர் அங்கே காணப்பட்டன. பின்னர் பத்தொன்பதாம் நூற்றாண்டில் புராட்டஸ்டண்ட் சபையினரும் நுழைந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *