இயேசுவின் கதை : 05

 
வாருங்கள்

கடவுளைக் கண்டிருக்கிறீர்களா ?
ஆம் என்பது ஆத்திகமா ?
இல்லை என்பது நாத்திகமா ?

அதோ
சிறகடித்துச் சிரிக்கும்
சின்னக் குருவியில்,

அசைவுகளில் அழகூட்டி
வாசனையில்
வரவேற்கும்
வண்ணப்பூக்களின் இதழசைவில்,

வரிசையாய்
மலைகீறி முளைத்திருக்கும்
உயர்ந்த மரங்களின் ஒய்யாரச் சரிவில்,

ஒவ்வோர் அழகும்
ஒளிந்திருக்கும்
பூமியின் பக்கங்களில்
இறைவன் இருக்கிறார்.

சாலையோர ஏழையின்
கைத்தடியாய் நீ
உருமாறும் போதும்,

ஓர்
விவசாய நண்பனின்
வியர்வைக்கரையில் நீ
உனை நனைக்கும் போதும்,

வறுமை வயிறுகளில்
சோற்றுப் பருக்கைகளாய்
நிரம்பும் போதும்,
வியாதியரின் வேதனைப் படுக்கையில்
ஆறுதலாய் நீ
அமரும் போதும்,

அயலானின் தேடல்களில்
சந்தோஷமாய் நீ
சந்திக்கப்படும் போதும்,
ஆண்டவனை நீ
சமீபத்தில் சந்திக்கிறாய்.

எப்போதேனும்
கற்பனையில் மோட்சத்தை
எட்டிப்பார்க்கத் தோன்றும் எனக்கு.

விரித்த கரங்களும்,
சிரித்த உதடுகளுமாய்,
ஆசனத்தில் அமர்ந்திருக்கும்
ஓர் கடவுள்,
சிறு வயதிலிருந்தே
பார்த்துப் பழகிய
இயேசுவின் முகம்.

சில வேளைகளில்
நான் குழந்தையாய்
அவர் கரங்களைப் பிடித்துக் கொண்டு,
திராட்சைத் தோட்டத்தில்
சின்ன நடை பயில்வதாய்
சிலிர்ப்பைத் தரும்.

செபிக்கும் போதெல்லாம்,
ஓர் சிவப்பு ஆடையின் உள்
தனைப் புதைத்து,
சிறு பாறையில் அமர்ந்து
நான் பேசுவதைக் கேட்பதாய்,
ஆறுதலாய் என் தோள் தொடுவதாய்
தோன்றும்.

சில வேளைகளில்
உருவத்துள் இழுக்க இயலா
ஓர் ஒளிப் பிரவாகமாய்….

கடவுளைக்
கடவுளாய் காணும் நிமிடங்கள் அவை.

சுயநலமற்ற அன்பின்
சுய உருவம் இயேசு.

போதனைகளைக் கேட்பவன்
புனிதனல்ல,
போதனைகளின் படி
வாழ்பவனே மனிதன்.
மனிதனாய் மாறுவதே
புனிதனாவதன் முதல் படி.

இயேசுவின் போதனைகள்,
சில தலைமுறைகளைச்
சலவை செய்தது.
ஆணித்தரமாய் இறங்கி
சம்பிரதாயங்களின் ஆணிவேரை
அச்சமில்லாமல் அசைத்தது.

கிறிஸ்தவம்,
இறைவனின் போதனைகளின்
பிம்பமாக வேண்டும்

கிறிஸ்தவன்
கிறிஸ்துவின் வாழ்வின்
பிம்பமாக வேண்டும்.

கிறிஸ்துவின் போதனைகள்
ஒரு
குழுவுக்காய் கொடுக்கப்பட்ட
ஒளித்து வைக்கப்பட வேண்டிய
ஓலைச் சுவடிகளல்ல.

முழு மனித சமுதாயத்துக்காய்
வழங்கப்பட்ட வழிமுறைகள்.
ஒடுக்கப்பட்ட மக்களுக்காய்
கொடுக்கப்பட்ட நன்கொடைகள்.

இயேசுவின் போதனைகள்,
மனுக்குலத்தின் மாண்புகள்.
மதச்சாயம் கண்டு
இதை
மறுதலித்து விடாதீர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *