பெயர்க் காரணம் !!!

xavier33.jpg
பெயர்க் காரணம்
—————–

கதை சொல்லும் நேர்த்தி எல்லோருக்கும் வாய்த்து விடுவதில்லை. சாகித்ய அகாடமி வாங்கிய எழுத்தாளர்களை விட பிரமிக்க வைக்கும் நடை பாட்டிகளின் கதைகளில் சர்வ சாதாரணமாய் வாழ்வதுண்டு. பாட்டி சொன்ன நல்ல தங்காள் கதையோ, மணிமேகலைக் கதையோ இன்றும் என் மனதில் ஒரு திரைப்படமாகவே விரியும். பாட்டிக் கதைகளில் இசையும், நாடகமும், நாட்டியமும், இலக்கியமும் எல்லாமே ஒரு குதிரைச் சவாரி செய்வது போல ஒரு காட்சிப் படுத்துதல் இருக்கும்.

எனக்கு இறைவனால் வழங்கப்பட்ட அம்மாவும் அப்படித் தான். அம்மா சொல்லும் கதைகள் மனதை விட்டு ஒருபோதும் நீங்கிப் போவதில்லை. அம்மா சொன்ன வரலாற்றுக் கதைகளை விட வாழ்க்கைக் கதைகளே மனதில் நங்கூரமிறக்கியிருக்கின்றன. ஒரு சின்ன விஷயத்தைக் கூட சுவாரஸ்யமாய் ஆரம்பித்து, பரபரப்பாய் நகர்த்திச் சென்று பளிச் என்று முடித்து வைப்பார்.

என்னுடைய பெயர்க் காரணத்துக்கும் அம்மாவிடம் ஒரு கதை உண்டு. எனக்கு மூன்று அக்காக்கள். வாழ்க்கையில் நான் மிகவும் ஆனந்தமாய் நினைக்கும் விஷயங்களில் ஒன்று அது தான். திகட்டத் திகட்ட அன்பை வாரி வழங்க சகோதரிகளால் மட்டுமே முடியும். அக்காக்கள் இல்லாத தம்பிகளைப் பார்த்து எனக்கு கொஞ்சம் அனுதாபமும் எழுவதுண்டு.

அம்மாவின் நிலமை அன்றைக்கு அப்படி இருக்கவில்லை. ஊர்ப் பேச்சு “மறுபடியும் பெண்ணா ?” எனும் குத்தல் பேச்சுகள் அம்மாவை அடுத்ததாச்சும் ஒரு பையனா பொறக்கணும் என எண்ண வைத்திருக்கிறது. “நாலாதும் பொண்ணுன்னா நடைக்கல்லப் பேக்கும்லே” என பக்கத்து வீட்டுக்காரர்களின் முன்னுரை முற்றங்களில் வேண்டுமென்றே விளம்பப் பட்டுக் கொண்டிருந்த சமயம். அம்மாவுக்கு பாசம் அதிகம், அதை விட அதிகமாய் பக்தி ரொம்ப ரொம்ப அதிகம்.

1972 டிசம்பர் மாதக் குளிரில் கோட்டாறு சவேரியார் ஆலயத் திருவிழா (டிசம்பர் 3 ) வுக்குச் சென்றார். ஒரு தாய் தன் குழந்தை எப்படி இருந்தாலும் ஏற்றுக் கொள்கிறாள். ஆனால் ஒரு சமூகம் ஒரு அன்னையை அவள் விருப்பத்துக்குள் வாழ அனுமதிப்பதில்லை. நிர்ப்பந்தங்கள் அம்மாவுக்குள்ளும் சிந்தனைகளை புதிதாய் எழுதியது. ” அடுத்தது ஒரு பையனா பிறந்தா நன்றாக இருக்கும்” எனும் வேண்டுதல் தான் அன்றைக்கு அம்மாவுக்கு பிரதான விண்ணப்பம்.

சவேரியார் ஆலயத்தில் சென்று பிரார்த்தித்துக் கொண்டிருக்கிறார். தேர்ப்பவனி நடக்கிறது. ஆழமாய் இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொண்டிருந்த அம்மாவின் மனதுக்குள் திடீரென தெளிவாய் ஒலிக்கிறது ஒரு குரல். “உனது விருப்பம் நிறைவேறும், கலங்காதே”. அம்மா சிலிர்த்துப் போய் சுற்று முற்றும் பார்க்கிறார். எதுவும் இல்லை. ஒரு வேளை பிரம்மையோ என அவநம்பிக்கை வந்து ஒட்டிக் கொள்கிறது. ‘ ஆண்டவரே எனக்கு ஏதேனும் ஒரு அடையாளம் வேண்டும்’ அம்மாவின் மனம் மீண்டும் இறைவனிடம் பிரார்த்திக்கிறது. அடுத்த வினாடியே சவேரியார் சிலையிலிருந்த ஒரு மலர் வந்து அம்மாவின் கைகளில் விழுந்து அப்படியே ஒட்டிக் கொள்கிறது.

கேட்பதற்கு புனைக் கதை போல இருக்கும் இந்த நிகழ்வு அம்மாவுக்குள் அசாத்திய நம்பிக்கையை விதைத்து விட்டது. முகத்தில் மலர்ச்சி. அடுத்தது நமக்கு பையன் தான் சந்தேகமேயில்லை என ஜெபித்துக் கொண்டிருந்த அப்பாவிடம் சொல்கிறார்.

அடுத்த வருடம் நான் பிறக்கிறேன். எல்லோரும் பதட்டத்துடன் காத்திருக்க அம்மாவுக்கு மட்டும் சந்தேகமே இருக்கவில்லை. நான் பிறப்பதற்கு முன்பே அப்பாவிடம் சொல்லியிருக்கிறார், பையனுக்கு சவேரியாருடைய பெயரைத் தான் வைக்கணும். “சேவியர்” ன்னு வைப்போம் ! அப்பா, அம்மாவின் மனம் நோகும்படி எதையும் செய்ததில்லை, அப்போதும் “கண்டிப்பா” எனும் ஒற்றை வார்த்தை மட்டுமே !

அம்மா இந்தக் கதையை என்னிடம் பல நூறு தடவை சொல்லியிருக்கிறார். சொல்லும்போதெல்லாம் அம்மாவின் முகத்திலும் குரலிலும் சர்வ உணர்வுகளும் வந்து மறையும். ஒவ்வொரு தடவை சொல்லும் போதும் அதுவே முதல் முறை போல அம்மா சொல்வதும், அதுவே முதல் முறை போல நான் கேட்பதும் வாடிக்கையாகிவிட்டது !

நான் எழுத்தின் மீது ஆர்வம் கொண்டு எழுத ஆரம்பித்த காலத்திலிருந்தே பலர் என்னிடம் “ஒரு புனைப் பெயர் வைத்துக் கொள். சேவியர் எனும் பெயரெல்லாம் அங்கீகரிக்கப் படாது. அதில் மத அடையாளம் இருக்கு, தேவையான சில அடையாளம் இல்லை” என்று சொல்லியிருக்கிறார்கள். நல்ல மனசோடு தான் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கெல்லாம் ஒரு பதிலை நான் தயாராய் வைத்திருப்பேன்.

“எனக்கு கிடைக்கப் போகும் எல்லா அங்கீகாரங்களையும் விட என் பெற்றோர் எனக்கு வைத்த இந்தப் பெயர் ரொம்ப சிறப்பானது. அங்கீகாரத்துக்காக இந்தப் பெயரை இழப்பதை விட, பெயருக்காக பிற அங்கீகாரங்களை இழப்பதே எனக்கு மகிழ்ச்சியானது. ஆத்மார்த்த அன்பை விடப் பெரிய அங்கீகாரம் எதுவும் இல்லை !”

நேற்று சவேரியார் தினம். அம்மாவுக்கு உடல் நிலை சரியில்லை, இருந்தாலும் போன் செய்த போது ‘மக்களே இந்நு சவேரியார் தினம். மின்னே ஒரு காலத்தில…” என பேச ஆரம்பித்தார். “இருக்கட்டும்மா.. ரெஸ்ட் எடுங்க பின்னீடு பேசலாம்” என்றேன், கதை கேட்கும் ஆர்வம் மனதுக்குள் நிரம்பியே இருந்தாலும் !

பெயரில் என்ன இருக்கிறது என்று பலரும் கேட்பதுண்டு
பெயரிலும் இருக்கலாம் இதே போல ஜீவன் ஊற்றிய நினைவலைகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *