Sep 27

பாராட்டலாமா ? வேண்டாமா ?

 

Image result for appreciate others

“மனித மனம் தனது ஆழத்தில் பாராட்டுக்காக ஏங்குகிறது” – என்கிறார் வில்லியம் ஜேம்ஸ்.  தான் முக்கியமானவனாகக் கருதப்படவேண்டும், தான் அங்கீகரிக்கப் படவேண்டும், பிறரால் விரும்பப்படவேண்டும் எனும் ஆசையின் சல்லி வேர்கள் எல்லா மனிதர்களுக்குள்ளும் பின்னிப் பிணைந்திருக்கின்றன.

“இப்போதெல்லாம் பாராட்டும் பழக்கமே குறைந்து விட்டது” என்று சொன்னால் உடனே எல்லோரும் தலையாட்டுவீர்கள். “ஆமாம். யாருமே யாரையுமே பாராட்டுவதில்லை. எல்லோருக்கும் ஈகோ” என சட்டென பதில் வரும். அந்த பேச்சை அப்படியே ஒரு நிமிடம் நிறுத்தி விட்டுக் கொஞ்சம் யோசித்துப் பார்ப்போம்.

“நேற்றைய தினம் நாம் எத்தனை பேரைப் பாராட்டினோம் ?” ஏதேனும் நினைவுக்கு வருகிறதா ? சரி, போன வாரத்தில் ? போன மாதத்தில் ? – ஒவ்வொரு படியாக பின்னோக்கிப் போய் சிந்தித்துப் பார்த்தால், நாமே யாரையும் பாராட்டவில்லை எனும் உண்மை உறைக்கும். “பாராட்டு என்பது நம்மைத் தவிர மற்ற எல்லோரும் செய்ய வேண்டிய விஷயம்” என ஒவ்வொருவரும் நினைத்துக் கொள்கிறோம் !

மனதாரப் பாராட்டுவது மனிதனுக்கே இருக்க வேண்டிய மிக மிக முக்கியமான பண்பு. எந்தச் செலவும் இல்லாத விஷயம் இது. ஆனால் பணத்தினால் உருவாக்க முடியாத ஒரு ஆரோக்கியமான சூழலை பாராட்டுவதன் மூலமாய் உருவாக்கிவிட முடியும்.

நமது தினசரி வாழ்க்கையில் நாம் எத்தனையோ நபர்களைச் சந்திக்கிறோம். காலையில் காபி குடிப்பது முதல், அலுவலகம் சென்று, வேலை முடித்து, வீடு வந்து சேர்வது வரை ஏராளமான நபர்களோடு நாம் உரையாடுகிறோம். அவர்களில் எத்தனையோ பேர் பாராட்டுக்கு உரியவர்களாய் இருக்கிறார்கள் என்பது தான் நிஜம்.

பலரும் செய்யும் ஒரு தவறு, பாராட்டு என்பது அலுவலக சமாச்சாரம் என நினைப்பது தான். பாராட்டு என்பது நல்ல எந்த ஒரு செயலுக்குமே உரியது ! எந்த இடத்திலும் வழங்கப்படக் கூடியது. எந்த நபருக்கும் கொடுக்கக் கூடியது !

சின்னச் சின்ன விஷயங்களையும் பாராட்டுங்கள். சில ஆண்டுகளுக்குப் பின், நீங்கள் திரும்பிப் பார்க்கும் போது, நீங்கள் விதைத்த அந்த சின்னச் சின்னப் பாராட்டுகள் பூஞ்சோலையாய் வளர்ந்து புன்சிரிக்கக் காண்பீர்கள்.

“பணம் வாங்கறாங்க, வேலை பாக்கறாங்க” எனும் மனநிலையிலிருந்து நாம் வெளியே வர வேண்டியது முதல் தேவை. உதாரணமாக உங்கள் வீட்டை அழகாகத் துடைத்து வைக்கும் வேலைக்காரப் பெண்ணுக்குக் கொடுக்கலாம் ஒரு பாராட்டு ! வீட்டில் தோட்ட வேலை செய்யும் ஒருவருக்கும் வழங்கலாம் பாராட்டு. பணம் வாங்கிக் கொண்டு வேலை செய்பவர்கள் பாராட்டுக்கு உரியவர்கள் அல்ல எனில் நம்மில் பலரும் பாராட்டுக்கு உரியவர்களாக இருக்க மாட்டோம் இல்லையா ?

ஏன் பாராட்ட வேண்டும் என்று கேட்கும் பலருக்கும் பாராட்டுகள் செய்யும் மாயாஜாலங்கள் புரிவதில்லை. பாராட்டு ஒருவருடைய தன்னம்பிக்கையை வளர்க்கிறது. பாராட்டு, வேலை சரியான பாதையில் செல்கிறது என்பதை ஒருவர் சரிபார்க்க உதவுகிறது. பாராட்டு, ஒரு நபர் தன்னை உற்சாகப்படுத்திக் கொண்டு பயணிக்க உதவுகிறது.

பாராட்டில் இருக்க வேண்டிய ஒரே விஷயம், அது ஆத்மார்த்தமானதாய் இருக்க வேண்டும் என்பது தான். போலித்தனமான பாராட்டுகளைத் தோண்டிப் பார்த்தால் உள்ளே சுயநலமே ஒளிந்திருக்கும்.

பாராட்டுவதற்கு பாசிடிவ் மனநிலை வேண்டும். வாழ்க்கையை இனிமையாகவும், ஆனந்தமாகவும், உற்சாகமாகவும் எதிர்கொள்பவர்களே பாராட்டுவதில் தயக்கம் காட்டுவதில்லை. சிடுமூஞ்சிகள் பாராட்டுவதற்குக் காசு கேட்கும் பார்ட்டிகள். இதில் நீங்கள் எந்த வகை ? தப்பான பக்கம் நிற்கிறீர்களெனில் உடனே நேர் மனநிலையை வளர்த்துக் கொள்ளுங்கள்.

எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்குமோ என புலம்புபவர்கள் ஒரு வகை. எந்தப் பூவில் எந்தத் தேன் இருக்குமோ என்று பார்ப்பவர்கள் இன்னொரு வகை. நேர் சிந்தனை உள்ளவர்கள் பிறரிடம் இருக்கும் நல்ல விஷயங்களைத் தேடுவார்கள். அப்போது அவர்களுக்குப் பாராட்ட நிறைய விஷயம் கிடைக்கிறது. குறை சொல்பவர்கள் எல்லா செயலுக்கும் “உள் நோக்கம்” கற்பிப்பதிலேயே காலத்தைச் செலவிடுவார்கள். அவர்களுக்குப் பாராட்டும் மனமே வருவதில்லை.

சந்திரனுக்கு ராக்கெட் விடுவது போன்ற சாதனை செய்தால் தான் பாராட்ட வேண்டும் என சிலர் கங்கணம் கட்டிக் கொள்வதுண்டு. அது தப்பு ! சின்னச் சின்ன செயல்களில் உங்கள் அன்பான பாராட்டு வெளிப்படவேண்டும். உங்கள் பையன் பத்தாம் வகுப்பில் முதல் மாணவனாக வந்தால் மட்டுமா பாராட்டுவீர்கள் ? எல்.கே.ஜி யில் ஹோம் வர்க் செய்யும் போதே பாராட்டுவீர்களல்லவா ? அதே உற்சாகத்தைப் பிறரிடமும் காட்டுங்கள். !

நல்ல விஷயத்தைப் பாராட்டுவதில் முதல் ஆளாய் நில்லுங்கள். உங்களைப் பற்றிய ஒரு நல்ல அபிப்பிராயமும் பிறரிடம் உருவாகும். பாராட்ட வேண்டும் என முடிவெடுத்துப் பாருங்கள் உங்கள் கண்ணுக்கு பிறருடைய நல்ல விஷயங்கள் தெரிந்து கொண்டே இருக்கும். ஒவ்வொரு பாராட்டும் ஒருவகையில் தனிமனித முன்னேற்றத்துக்கு உதவுகிறது. தனிமனித வளர்ச்சி தானே சமூக வளர்ச்சியின் ஆதாரம் !

ஒரு கூட்டத்தில் ஒருவர் பாராட்டும் பண்பு உடையவராக இருந்தாலே போதும். பூவோடு சேர்ந்த பூக்கூடையும் மணப்பது போல, கூட இருப்பவர்களுக்கும் அந்த பழக்கம் தொற்றிக் கொண்டு விடும். எனவே அத்தகைய நண்பர்களோடு நீங்கள் இணைந்து இருப்பதே சிறப்பானது.

பாராட்டு அடுத்தவர்களுடைய மனதில் மகிழ்ச்சியை வரவழைக்கும். மகிழ்ச்சி என்பது அருவி போல, அது அருகில் இருப்பவர்களையும் நனைக்கும். அந்த மகிழ்ச்சி உங்களையும் ஈரமாக்கும். உங்களுடைய மனமும் உற்சாகமடையும். உற்சாகமான மனம் ஆரோக்கியமான உடலுக்கு உத்தரவாதம் என்பதையே மருத்துவம் சொல்கிறது !

ஒரு சூழல் எப்படி மோசமாய் இருக்கிறது என்பதைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பது ஒரு வகையான மனநிலை. அந்த சூழலை என்ன செய்தால் சீர்செய்யலாம் என யோசிப்பது இன்னொரு மனநிலை. பாராட்டும் குணமுடையவர்கள் இரண்டாவது வகையைச் சேர்ந்தவர்களாய் இருப்பார்கள்.

அன்பு ! அதுவே பாராட்டும் மனதுக்கான அஸ்திவாரம். மனதளவில் அன்பு இருந்தால் பாராட்டு தானாகவே ஊற்றெடுக்கும். பலருக்கு இந்த அஸ்திவாரம் வலுவற்றதாக இருப்பது தான் துயரம். ஆரம்பத்தில் பாராட்டுபவர்கள் கூட பாராட்டப்பட்ட நபர் வளர்ச்சியடைந்தால் பிறகு பாராட்டமாட்டார்கள். அடுத்தவர்களின் வளர்ச்சியில் பொறாமை படும் குணம் பாராட்டை அனுமதிப்பதில்லை.

ஒருவரைப் பாராட்டும் போது அவருடைய திறமையை அளவுகோலாய் வைத்தே பாராட்டுங்கள். உங்களுடைய திறமையை வைத்தல்ல. அப்போது தான் பலவீனமான மனிதனும் பாராட்டுக்குரியவனாய் தெரிவான். ஒவ்வோர் சூழலுக்கும் ஒவ்வொரு விஷயம் தேவையானதாய் இருக்கும். மிருதங்கத்தில் துளைகள் இருந்தால் அது வீண். புல்லாங்குழலில் துளைகள் இல்லையேல் அது வீண். சூழலோடு பொருந்தி பாராட்டுகள் வெளிப்படுவது நல்லது.

“என்னதான் செய்தாலும் அவனைப் பாராட்டவே முடியாது” என ஒருவரைப்பற்றி நீங்கள் முடிவெடுத்தால் கூட அவரிடம் இருக்கும் நல்ல செயல்கள் என்னென்ன என பட்டியலிடுங்கள். அந்தப் பட்டியல் கொஞ்சம் கொஞ்சமாய் விரிவடைவதைப் பார்க்க உங்களுக்கே வியப்பாக இருக்கும். அதன் பின் அவரைப் பாராட்ட காரணங்கள் உங்கள் கையிலேயே இருக்கும் !

நம்பிக்கை வையுங்கள். ஒரு நபர் மீது நீங்கள் நம்பிக்கை வைக்கும் போது அவருடைய வளர்ச்சி உங்களுக்கு பிரியமானதாய் மாறுகிறது. அவர் மீதான நம்பிக்கை அவரைப் பாராட்டச் செய்கிறது. அந்தப் பாராட்டு அவரை வெற்றியை நோக்கி நகர்த்தும். எனவே மனிதர்கள் மீது நம்பிக்கை வையுங்கள்.

மிக முக்கியமாக, பாராட்டும் பழக்கம் வீடுகளிலிருந்து துவங்க வேண்டும். வீடுகளில் விதைப்பது, வீதிகளில் முளைவிடும். பாராட்டு தனது முதல் சுவடை வீட்டில் வைக்கும் போது அதன் பயணச் சாலைகள் நாட்டில் விரிவடையும். கணவனோ, மனைவியோ பாராட்டுக்கு அப்பாற்பட்டவர்களல்ல. பெற்றோரையும் பாராட்டுங்கள். பிள்ளைகளையும் பாராட்டுங்கள். முதியவர்கள் மனதளவில் குழந்தைகள். அவர்களுக்கும் உங்கள் பாராட்டு ரொம்பவே அவசியம்.

நேரடியாகப் பாராட்டுகையில் உடல் மொழி ரொம்பவே முக்கியம். உடல் மொழி உற்சாகமாக இருந்தால் தான் பாராட்டின் முழுப் பரிமாணமும் பாராட்டப் படுபவரைப் போய்ச் சேரும் என்பதைச் சொல்லத் தேவையில்லை.

யாரையேனும் விமர்சித்தால் கூட, சகட்டு மேனிக்கு குறைகளை மட்டுமே அடுக்காதீர்கள். அவர்களுடைய ஒரு நல்ல பண்பையாவது பாராட்டுங்கள். விமர்சனங்கள் பக்குவமாகப் பரிமாறப்படவேண்டியவை, பாராட்டுகள் மறைக்காமல் பகிரப்படவேண்டியவை !

வெறும் வார்த்தைகளிலான பாராட்டுகளைத் தாண்டி அடுத்த நிலையில் சின்னச் சின்னப் பரிசுகள் கொடுத்துப் பாராட்டுவது ரொம்பவே சிறப்பானது. அந்த பரிசு அவர்களுக்கு உங்கள் பாராட்டை தொடர்ந்து நினைவூட்டிக் கொண்டே இருக்கும். அது அபரிமிதமான உற்சாகத்தையும் ஊட்டும்.

பாராட்டு என்பது அன்பின் விதைகளில் முளைத்தெழும் அழகிய கொடி. அது பின்னிப் படரும் சமூகம் ஆனந்தத்தின் கானகமாய் வசீகரிக்கும்.

மனம்தரும் எந்தப் பாராட்டும்

வெற்றியின் வீதியில் தேரோட்டும்

 

சேவியர்

 

 

Sep 27

இயேசு சொன்ன உவமைகள் 9 : தலைவனும், பணியாளரும்

Image result for master and servant parable

 

லூக்கா 17 : 5..10

 

( புது மொழிபெயர்ப்பு )

 

திருத்தூதர்கள் ஆண்டவரிடம், “எங்கள் நம்பிக்கையை மிகுதியாக்கும்” என்று கேட்டார்கள். அதற்கு ஆண்டவர் கூறியது: “கடுகளவு நம்பிக்கை உங்களுக்கு இருந்தால் நீங்கள் இந்த காட்டு அத்தி மரத்தை நோக்கி, ‘நீ வேரோடே பெயர்ந்துபோய்க் கடலில் வேரூன்றி நில்’ எனக் கூறினால் அது உங்களுக்குக் கீழ்ப்படியும்.

“உங்கள் பணியாளர் உழுதுவிட்டோ மந்தையை மேய்த்துவிட்டோ வயல்வெளியிலிருந்து வரும்போது அவரிடம், ‘நீர் உடனே வந்து உணவருந்த அமரும்’ என்று உங்களில் எவராவது சொல்வாரா? மாறாக, ‘எனக்கு உணவு ஏற்பாடு செய்யும்; உம் இடையை வரிந்துகட்டிக்கொண்டு, நான் உண்டு குடிக்கும்வரை எனக்குப் பணிவிடை செய்யும்; அதன்பிறகு நீர் உண்டு குடிக்கலாம்’ என்று சொல்வாரல்லவா? தாம் பணித்ததைச் செய்ததற்காக அவர் தம் பணியாளருக்கு நன்றி கூறுவாரோ? அது போலவே, நீங்களும் உங்களுக்குப் பணிக்கப்பட்ட யாவற்றையும் செய்தபின், ‘நாங்கள் பயனற்ற பணியாளர்கள்; எங்கள் கடமையைத்தான் செய்தோம்’ எனச் சொல்லுங்கள்.”

 

 

( பழைய மொழிபெயர்ப்பு )

 

அப்பொழுது அப்போஸ்தலர் கர்த்தரை நோக்கி: எங்கள் விசுவாசத்தை வர்த்திக்கப்பண்ணவேண்டும் என்றார்கள்.

அதற்குக் கர்த்தர்: கடுகுவிதையளவு விசுவாசம் உங்களுக்கு உண்டாயிருந்தால், நீங்கள் இந்தக் காட்டத்திமரத்தை நோக்கி: நீ வேரோடே பிடுங்குண்டு கடலிலே நடப்படுவாயாக என்று சொல்ல, அது உங்களுக்குக் கீழ்ப்படியும்.

உங்களில் ஒருவனுடைய ஊழியக்காரன் உழுது அல்லது மந்தை மேய்த்து வயலிலிருந்து வரும்போது, எஜமான் அவனை நோக்கி: நீ முன்பு போய்ச் சாப்பிட்டுவா என்று அவனுக்குச் சொல்வானோ? நீ எனக்குச் சாப்பாடு ஆயத்தம்பண்ணி, அரைகட்டிக்கொண்டு, நான் போஜனபானம்பண்ணுமளவும் எனக்கு ஊழியஞ்செய், அதற்குப்பின் நீ புசித்துக்குடிக்கலாம் என்று அவனுக்குச் சொல்லுவானல்லவா. தான் கட்டளையிட்டவைகளை அந்த வேலைக்காரன் செய்ததற்காக அவனுக்கு உபசாரஞ்செய்வானோ? அப்படிச் செய்யமாட்டானே. அப்படியே நீங்களும் உங்களுக்குக் கட்டளையிடப்பட்ட யாவற்றையும் செய்தபின்பு: நாங்கள் அப்பிரயோஜனமான ஊழியக்காரர், செய்யவேண்டிய கடமையைமாத்திரம் செய்தோம் என்று சொல்லுங்கள் என்றார்.

 

 

சீடர்கள் இயேசுவிடம் வந்து “எங்களது விசுவாசத்தை அதிகப்படுத்தும்” என கேட்கின்றனர். இயேசு அவர்களுக்கு நேரடியாக ஒரு பதிலைச் சொல்லாமல் ஒரு உவமையைச் சொல்கிறார். அதற்கு முன் விசுவாசத்தின் வலிமையை ஒரு வசனத்தில் விளக்குகிறார்.

கடுகளவு விசுவாசம் இருந்தால் போதும், நிலத்தில் நிற்கும் மரத்தை வேரோடு பெயர்ந்து போய் கடலில் வேரூன்றி நில் என சொன்னால் அது கீழ்ப்படியும் என்கிறார் இயேசு. சற்றும் சாத்தியமில்லாதது போலத் தோன்றும் இது விசுவாசத்தினால் சாத்தியம் என்கிறார் இயேசு.

உலகப் பாவத்தில் நிலைத்திருக்கும் மனிதன், அப்படியே பிடுங்கப்பட்டு திருமுழுக்கு எனும் நீருக்குள் அமிழ்த்தப்பட்டு அங்கே வேரூன்றி வளர்வான். கனிகொடுப்பான் எனும் ஆன்மீக விளக்கமாகவும் இதைக் கொள்ளலாம்.

அதன்பின் இயேசு இந்த தலைவர், பணியாளர் உவமையைச் சொல்கிறார். ஒரு பணியாளன் வெளியே கடுமையான, உடல் உழைப்பைச் செலுத்தி விட்டு வந்தாலும் வீட்டில் தலைவன் இருந்தால் அவனுக்கு உணவு சமைத்துப் பரிமாற வேண்டும். அதை விட்டு விட்டு பிரதிபலன் எதிர்பாக்கக் கூடாது என்கிறார்.

இந்த உவமை இரண்டு விஷயங்களைச் சொல்கிறது.

 

 1. விசுவாசத்தை அதிகப்படுத்த வேண்டுமெனில் செய்யவேண்டியது ஒன்று தான்.

எப்போதும் இறைவனுக்குப் பணிசெய்யும் மனநிலையில் இருப்பது. தனக்கென எந்த விருப்பு வெறுப்பையும் வைக்காமல் எல்லாவற்றையும் இறைவனில் சமர்ப்பித்து அவருக்காகவே வாழ்தல். அவரிடமிருந்து எதையேனும் எதிர்பார்த்து வாழ்தலல்ல. முழுமையாய் இறையில் சரணடைந்து வாழ்தல்.

பணிசெய்து வருகிறான் பணியாளன். வீட்டில் தலைவர் இருக்கிறார். உடனே மனமகிழ்ச்சியோடு, இடையைக் கட்டிக்கொண்டு, அதாவது பணியாளனுக்குரிய உடையோடு, பணி செய்கிறார். அதில் மகிழ்ச்சியடைகிறார். எந்த பிரதிபலனையும் அவர் எதிர்பார்க்கவில்லை.

இப்படிப்பட்ட எந்த விதமான எதிர்பார்ப்புமற்ற இறை அர்ப்பணிப்பு, விசுவாசத்தை அதிகரிக்கும். அல்லது விசுவாசம் அதிகரிப்பதன் வெளிப்பாடாய் இந்த அர்ப்பணிப்பு நடக்கும் என்பது ஒரு செய்தி.

 

 1. இரண்டாவதாக, ஒரு பணியாளன் எப்படிப்பட்ட மனநிலையில் இருக்க வேண்டும் என்பதை விளக்கும் உவமையாகவும் இது இருக்கிறது.

விசுவாசம் வல்ல செயல்களைச் செய்யும். ஆனால் அந்த செயல்களினால் எந்த விதமான கர்வமும் பணியாளனின் மனதில் நுழைந்து விடக் கூடாது. கர்வத்தை அனுமதிக்காமல், இடையில் கட்டிக் கொண்டு பணி செய்கின்ற மனநிலையோடே எப்போதும் இருக்க வேண்டும்.

“எல்லா” பணிகளையும் செய்து முடித்த பின்பும் கூட, “என் கடமையைத் தான் செய்தேன்” என பணிவுடன் சொல்லும் மனநிலையே பணியாளனின் மனநிலை. அந்த பணியை மகிழ்வுடனும், அர்ப்பணிப்புடனும் செய்வதே உண்மையான பணியாளனின் அடையாளம்.

அத்தகைய தன்மை பணியாளர்களிடம் இருக்க வேண்டும் என்கிறார் இயேசு.

“தலைவர் வந்து பார்க்கும்போது விழித்திருக்கும் பணியாளர்கள் பேறு பெற்றவர்கள். அவர் தம் இடையை வரிந்து கட்டிக்கொண்டு அவர்களைப் பந்தியில் அமரச் செய்து, அவர்களிடம் வந்து பணிவிடை செய்வார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்” என லூக்கா 12:37 ல் இயேசு சொல்கிறார்.

அதாவது, அர்ப்பணிப்புடன் பணிசெய்கின்ற ஊழியர்களை இயேசு அங்கீகரிக்கிறார். அவர்களுக்கு உரிய மதிப்பை வழங்குகிறார். ஆனால் “இதைச் செய்ததால் எனக்கு இது கிடைக்க‌ வேண்டும்” என பிரதிபலன் கேட்கும் மனநிலை இருப்பவர்களை அவர் விட்டு விடுகிறார். எதையும் எதிர்பாராமல் அன்பின் வெளிப்பாடாய் பணி செய்ய வேண்டும் என்பதே இதன் பொருள்.

இந்த உவமை சொல்லும் அடிநாதமான இன்னொரு விஷயம், மீட்பு என்பது செயல்களின் அடிப்படையில் கிடைப்பதல்ல. இறைவனில் சரணடைதலில் கிடைப்பது மட்டுமே எனும் உண்மை !!!

மோசேயின் வாழ்க்கையில் அவர் இந்த மனநிலையில் இருந்தார் என்பதைப் பார்க்க முடியும். இறைவனின் துணையுடன் வல்ல செயல்களைச் செய்தவர் அவர். இஸ்ரயேலரின் மீட்பின் பயணத்தில் மோசேயைத் தவிர்த்து விட்டு எதையும் பார்க்கவே முடியாது. ஆனால் கடவுள் அவரிடம், “நீ கானானுக்குள் நுழைய முடியாது” என சொன்னபோது எதுவும் மறுத்துப் பேசவில்லை.

“எனது பணியை செய்தேன். பயனற்ற ஊழியன் நான்” எனும் மனநிலையில் அதை அப்படியே ஏற்றுக் கொள்கிறார். அத்தனை நீண்ட நெடிய ஆண்டுகள் துயரத்தின் பாதையில் கடந்து வந்தாலும் தனக்கு ஒரு ஆசுவாசமான முடிவு வேண்டும் என அவர் வாதிடவில்லை. அவருடைய வாழ்க்கை இதன் ஒரு எடுத்துக்காட்டு எனலாம்.

இந்த சிந்தனைகளை, இந்த உவமையிலிருந்து பெற்றுக் கொள்வோம்.

 

Sep 26

கூடப் பொறந்த பாசம் !

Image result for siblings love

கிராமப் புறங்களில் சகோதர சகோதரிகளை “கூடப் பொறந்ததுக” என்பார்கள். கூடி வாழ்வதற்காகப் பிறந்தவர்கள் என்பதே அதன் பொருள். அப்படி ஆனந்தமாய்க் கூடி வாழ்வதற்காகப் பிறந்தவர்கள் இன்று எப்படி இருக்கிறார்கள் எனும் கேள்வியை ஒவ்வொருவரும் எழுப்ப வேண்டியது அவசியம்.

சின்ன வயதில் தோப்பிலும், வரப்பிலும், குளத்திலும்  ஆனந்தமாய் குதித்து விளையாடும் சகோதரர்கள் வளர வளர தங்களுடைய பிணைப்பைக் கொஞ்சம் கொஞ்சமாய்க் குறைத்துக் கொள்கிறார்கள்.  இந்த அன்னியோன்யம் முழுமையாய் மறைந்து போய் பல நேரங்களில் வெறுப்பாய் மாறுவது துயரத்தின் உச்சம்.

பொம்மைக்காகவோ, சாக்லெட்டுக்காகவோ சின்ன வயதில் போடும் சண்டைகளின் நீளம் சில நிமிடங்களோ, சில மணி நேரங்களோ தான். வயது ஏற ஏற சண்டைகளின் நீளமும் வளர்ந்து கொண்டே போகிறது. பெரியவர்களானபின் வாரக்கணக்கிலோ, மாதக்கணக்கிலோ பிணக்கு நீடிக்கிறது. சில சமயங்களில் வருடங்களையும் விழுங்கி இது நிரந்தரப் பிரிவாய் நிலைத்தும் விடுகிறது.

அரையடி நிலத்துக்காக அண்ணனை வெட்டும் தம்பி. சொத்துக்காக தம்பியின் குடும்பத்தையே காலி பண்ணும் அண்ணன் என தினசரிகள் குடும்ப உறவின் பலவீனங்களை சோகமாய் எழுதிச் செல்கின்றன.  குடும்ப உறவுகளெல்லாம் பின் வரிசைக்குத் தள்ளப்பட வெறும் பொருளாதார வசீகரங்கள் வாழ்வின் முன் இருக்கைகளை ஆக்கிரமித்துக் கொண்டு விட்டன

சகோதர பாசம் எப்படி இருக்கிறது என இங்கிலாந்தில் ஒரு ஆராய்ச்சி நடத்தினார்கள். அதில் தெரிய வந்தது இது தான். மூன்றில் ஒரு பங்கு சகோதரர்கள் தங்கள் கல்லூரி காலத்திலும் நெருங்கிய ஸ்னேகமாய் இருக்கிறார்கள். இன்னொரு 33 சதவீதம் பேர் “ரொம்ப நெருக்கமும் இல்லை, ரொம்பத் தூரமும் இல்லை” ரேஞ்சுக்கு இருப்பவர்கள். மிச்சமுள்ளவர்களோ தொடர்பில்லாமல் இருப்பவர்கள் அல்லது எதிரிபோலவே முறைத்துக் கொள்பவர்கள். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமெனில் சுமார் 70 சதவீதம் பேர் ஆழமான சகோதர உறவு இல்லாமல் தான் இருக்கிறார்களாம் !

குடும்பம் மனிதனின் முதல் தேவை. சகோதரர்கள், சகோதரிகள், பெற்றோர் எனும் உறவுகள் அவர்களுடைய வேர்களைப் போன்றவர்கள். சமூகத்தில் கிளை பரப்பும் மரம் பூக்களையும், கனிகளையும் கிளைகளில் தாங்குகிறது. பிறருடைய பார்வைக்குத் தெரிபவை இந்த பூக்களும் கனிகளும் தான். ஆனால் வேர்களின் பலத்தைப் பொறுத்தே கிளைகளின் வசீகரம் இருக்கும். வெற்றிகளின் பச்சையத்தைத் தாவரங்கள் தயாரிக்க வேர்கள் மண்ணில் இறுக்கமாக இருக்க வேண்டும். தண்ணீரை அவை இலைகளுக்கும் அனுப்பி வைக்க வேண்டும்.

அத்தகைய சகோதர, சகோதரிகள் அமைந்தால் வாழ்க்கை சுவர்க்கமாகும். அவர்களைத் தோல்விகள் அச்சுறுத்துவதில்லை. அவர்கள் தங்களுடைய இளைப்பாறுதலை சகோதரர்களிடமிருந்து பெற்றுக் கொள்கிறார்கள். இங்கே தற்கொலைகள் தலை தூக்குவதில்லை.

சகோதரர்களிடையே ஆழமான அன்புறவைக் கட்டியெழுப்புவதன் முதல் பங்கு பெற்றோரைச் சார்கிறது. சின்ன வயதில் குழந்தைகளைச் சமமாய்ப் பாவிப்பதும், பகிர்தல் மனப்பான்மையைக் கற்றுக் கொடுப்பதும், தவறுகளைச் சுட்டி காட்டுவதுமாய் நல்ல பெற்றோர் நல்ல குடும்பத்தைக் கட்டி எழுப்புவார்கள். அந்த குடும்பம் சகோதர பாசத்தில் வலுப்படும்.

சின்ன வயதிலேயே குழந்தைகளிடையே வேறுபாடு காட்டி வளர்க்கும் பெற்றோர் தங்களை அறியாமலேயே தவறிழைக்கிறார்கள். குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களானபின் அவர்களிடையே அந்த வெறுப்புணர்வு பெரிதாகிறது. “நான் தான் பெரியவன்” என்றோ, “நானும் பெரியவன் தான்” என்றோ ஒருவருக்கொருவர் முறுக்கிக் கொள்ள அடிப்படை குடும்ப பந்தம் உடைந்து போய்விடுகிறது.

Image result for siblings love

குழந்தைகளாக இருக்கும் போதே வாழ்வின் மதிப்பீடுகள், குடும்ப உறவுகள், அன்பு போன்றவற்றின் தேவையைப் போதிக்க வேண்டும். அத்தகைய செயல்களை ஊக்கப்படுத்த வேண்டும். நாம் பெரும்பாலும் குழந்தைகளைப் பாராட்டுவது அவர்கள் தேர்வில் சாதிக்கும்போதோ, அல்லது போட்டிகளில் வெல்லும் போதோ தான். அது தவறு. குழந்தைகள் சகோதர பாசத்துடன் இருப்பதையோ, பகிர்ந்தலில் மிளிர்தலையோ, அன்புச் செயல்கள் செய்வதையோ பாராட்டுங்கள். ஊக்கப்படுத்துங்கள். அவர்களுடைய ஆரோக்கியமான எதிர்காலத்துக்கு அது உதவும்.

கணவன் மனைவியரிடையே உண்மையான அன்பும் ஆழமான குடும்ப உறவும் இருந்தால் குழந்தைகளிடமும் அந்த அன்பு இருக்கும் என்கின்றனர் உளவியலார்கள். பெற்றோரிடையே சண்டை, விவாகரத்து போன்றவை எழும்போது குழந்தைகள் தங்களுக்குள்ளே ஆழமான அன்பை உருவாக்கிக் கொள்ள முடியாமல் போய்விடுகிறது. சகோதரர்களிடையே அன்பாய் இருக்க முடியாத குழந்தைகள் பல வேளைகளில் பள்ளிக்கூடம், கல்லூரி,  அலுவலகம் என தொடரும் இடங்களில் பிறருடனான நட்புறவில் தடுமாறிவிடுகிறார்கள்.

சகோதரர்களிடையே கருத்து வேறுபாடுகள் வருவதில் தவறில்லை. அவை அதிக நேரம் தொடராமல் இருக்க வேண்டும் என்பது தான் முக்கியம். “விட்டுக் கொடுத்தலைக்”  கற்றுக் கொள்ள வேண்டியது ரொம்ப முக்கியம். மகிழ்ச்சி என்பது பெற்றுக் கொள்வதிலல்ல, பிறருக்குக் கொடுப்பதில் என்பதைக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருமே கற்றுக் கொள்ள வேண்டும்.

சகோதரர்களிடையே ஆழமான அன்பு இருப்பது உடலுக்கும் நல்லது என ஆய்வுகள் சொல்கின்றன.” ஆழமான சகோதர உறவு இருந்தால் முதுமையில் உளவியல் பாதிப்புகள் ஏற்படாது” என்று ஹார்வேர்ட் பல்கலைக்கழகத்தில் வெளியான ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. குறிப்பாக அறுபது வயதைத் தாண்டியவர்கள் அமைதியான முதுமையை அனுபவிக்க அவர்களுடைய இளம் வயதில் ஆரோக்கியமான சகோதர உறவு இருந்தால் போதும் என்கிறது இந்த ஆய்வு.

பெய்லார் பல்கலைக்கழகத்தின் மார்க் மார்மன் என்பவர் சகோதரத்துவம் சார்பான ஆராய்சிகளை மேற்கொள்பவர். “மன அழுத்தமற்ற வாழ்க்கைக்கும், ஆரோக்கியமான இதயத்துக்கும் ஆழமான சகோதர பந்தம் அவசியமானது” என்கிறார் இவர்.

உரையாடல்கள் சகோதரர்களிடையே அன்பையும் நெருக்கத்தையும் காப்பாற்றும். இன்றைய தகவல் யுகம் நமக்கு எப்போதும் பிறருடன் தொடர்பில் இருக்கும் வாய்ப்பைத் தருகிறது. அதை நாம் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளலாம். நண்பர்களுடனோ, காதலருடனோ மணிக்கணக்கில் மெய் மறந்து பேசும் நாம் பல வேளைகளில் ஒரு போன் போட்டு சகோதரனை நலம் விசாரிக்க மறந்து போய்விடுகிறோம்.

நண்பர்களுடன் மன்னிப்பு கேட்டு ஒப்புரவாகும் நாம் சகோதரனுடனான சண்டையை ஒரு மன்னிப்பின் மூலம் தீர்க்க மறுக்கிறோம் என்பதே உண்மை. நமது இதயத்தின் ஆழத்தில் வேர்விட்ட சகோதர பாசம் எந்த நட்பினாலும் நிரப்பி விட முடியாதது. பல ஆண்டுகளாக சண்டையில் இருக்கும் சகோதரனின் வீட்டுக் கதவை ஒரு முறை அன்பினால் தட்டிப் பாருங்கள். நேசத்தின் நீரூற்று அங்கே புறப்படத் தயாராக இருக்கும்.

குடும்ப உறவுகள் உங்களுக்கான வேடந்தாங்கல் போல. மகிழ்வு வரும்போது குடும்பம் அந்த மகிழ்ச்சியை பலமடங்காக்கி உங்கள் சிறகுகளை உயரப் பறக்க வைக்கிறது. சோகம் வரும்போது குடும்பம் அதைத் தனது தோள்களில் ஏந்தி உங்கள் கால்களை இளைப்பாற விடுகிறது.

Image result for siblings love

ஆத்மார்த்தமான குடும்ப உறவும், அன்பும் இருக்கின்ற வாழ்க்கையில் எது இல்லாவிட்டாலும் ஆனந்தம் நிலை பெறும். குடும்ப அன்பு பலவீனமானால் வேறு என்ன இருந்தாலும் ஓட்டை விழுந்த படகாகவோ, வேர்கள் வெட்டப்பட்ட மரமாகவோ அழிவை  நோக்கியே வாழ்க்கை செல்லும்.

அன்பான சகோதர, சகோதரிகளைப் பெற்றவர்களுக்கு தன்னம்பிக்கை மிக அதிகமாக இருக்கும். வேலையிலோ, கலைகளிலோ அவர்கள் சாதிக்கும் உயரம் அதிகமாக இருக்கும். வலுவான அஸ்திவாரத்தைக் கொண்ட கட்டிடம் போல அவர்களுடைய வாழ்க்கையும் உயரும் என்கின்றனர் குடும்ப நல ஆய்வாளர்கள்.

அன்பு சிறக்க நம்பிக்கை ரொம்ப முக்கியம். சகோதரர்களுக்கிடையே வலுவான ஒரு நம்பிக்கையை நிலைபெறும் போது பிறர் அந்த உறவை உடைக்க முடியாது. தாயின் அன்பைப் போன்ற நம்பிக்கையை சகோதர சகோதரிகளிடையே வைத்துப் பாருங்கள். பிறர் உங்களுடைய பாசக் கூட்டுக்குத் தீ வைக்க நினைத்தாலும் அது உங்களுடைய நம்பிக்கை நதியினால் அணைக்கப்படட்டும்.

மனம் விட்டுப் பேசிச் சிரிப்பது சகோதரர்களிடையேயான அன்புறவைக் கட்டியெழுப்ப உதவும் என்கின்றனர் உளவியலார். பேசும்போது இதயத்தைத் திறந்தும், கேட்கும் போது மனதைத் திறந்தும் வைத்திருப்பதே சகோதரர்களுக்கு இருக்க வேண்டிய உரையாடல் பாணி.

சேர்ந்து நேரம் செலவிடுங்கள். அடிக்கடி போனில், மின்னஞ்சலில் என பாசத்தைப் பரிமாறிக் கொண்டாலும் அவ்வப்போது சந்தித்து, இணைந்து உண்டு, நினைவுகள் பரிமாறிக் கொள்வது சகோதர பாசத்தை ரொம்பவே வலுவாக்கும்.

சகோதரர்களுடைய தேவையில் கேட்காமலேயே உதவுங்கள். உங்கள் சகோதரரின் இடத்தில் உங்களை வைத்துப் பாருங்கள். அவருடைய வாழ்க்கை ஆனந்தமாய் இருந்தால் மகிழுங்கள். கடினமாய் இருந்தால் உதவுங்கள். இதுவே அடிப்படைக் குணாதிசயம்.

பல சிக்கல்களின் தீர்வு ஒரு சின்ன “விட்டுக் கொடுத்தலில்” இருக்கிறது. அன்பாய் நெருங்குவதில் இருக்கிறது. ஒரு சின்ன மன்னிப்பில் இருக்கிறது. இதைப் புரிந்து கொள்ளும் போது வாழ்க்கை அழகாகிறது.

பாசக் கூடு பின்னுங்கள்

நேசத் தோடு நில்லுங்கள்

 

சேவியர்

 


Image result for small bridge on the river

இரண்டு சகோதரர்கள் அருகருகே தோட்டம் அமைத்து பயிர்செய்து வந்தார்கள். தோட்டத்துக்கு இடையே ஒரு சின்ன நதி ஓடியது. பல காலம் அன்பாக வாழ்ந்த சகோதரர்களிடையே திடீரென பிணக்கு. சின்னவன் அண்ணனை ரொம்பவே திட்டி விட்டான். கோபம் கொண்ட அண்ணன் ஒரு பணியாளரை அழைத்து தனது எல்லையில் மதில் கட்டச் சொல்லி விட்டுச் சென்று விட்டார்.

சில நாட்களுக்குப் பின் அவர் திரும்பி வந்து பார்த்தபோது தனது தோட்டத்திலிருந்து தம்பியின் தோட்டத்துக்கு ஒரு பாலம் கட்டப்பட்டிருந்தது. மதிலுக்குப் பதிலாக பாலம் கட்டியிருந்தார் பணியாளர். அண்ணன் அமைதியாக பாலத்தின் மேல் நடந்தார். தூரத்தில் பாலத்தையே பார்த்துக் கொண்டிருந்த தம்பி ஓடோடிச் சென்று அண்ணனைக் கட்டியணைத்தார். “நான் இவ்வளவு திட்டியும் நீ அன்பாக பாலம் கட்டினாயே. நீ என்மேல எவ்ளோ பிரியம் வைத்திருக்கிறாய் அண்ணா” என கண் கலங்கினார்.

அண்ணன் நெகிழ்ந்தார். தம்பியை இறுக அணைத்துக் கொண்டார். மதிலுக்குப் பதிலாய் பாலம் கட்டிய பணியாளருக்கு மானசீகமாய் நன்றி சொன்னார்.


 

 

 

Sep 26

கூடா நட்பு கூடாது !

Image result for Good and bad friends

நட்பு என்பது இரண்டு உடல்களில் உலவும் ஒற்றை ஆன்மா – என்கிறார் தத்துவ மேதை அரிஸ்டாட்டில். நட்பின் பிணைப்பையும், இணக்கத்தையும் சொல்லும் ஒரு அசத்தலான வாசகமாய் இதைக் கொள்ளலாம்.

நட்பு இல்லாத மனிதன் இருக்க முடியாது. எல்லோருக்கும் நண்பர்கள் கிடைக்கிறார்கள். சில நண்பர்கள் ஆரம்ப கால அரை டவுசர் வாழ்க்கையோடு விடை பெறுகிறார்கள். சிலர் கல்லூரி கால வாழ்க்கையுடன் நின்று போய் விடுகிறார்கள். சிலர் அலுவலக வட்டத்துக்குள்ளேயே ஓடி ஓடி ஓய்ந்து விடுகிறார்கள்.

வெகு சில நண்பர்களே இந்த எல்லைகளையெல்லாம் தாண்டி நமது இதயத்தின் மேடையில் கூடாரமடித்துக் குடியிருக்கிறார்கள். நமது வாழ்க்கையின் பாதையில் நண்பர்களின் பங்களிப்பு மிக மிக முக்கியமானது. இளம் வயதில் நண்பர்களுடன் அதிக நேரம் செலவிடுவதால் நண்பர்களின் குணாதிசயங்கள் நம்மையும் தொற்றிக் கொண்டு விடுகிறது.

ஒரு மனிதனுடைய வெற்றிக்கும், தோல்விக்கும் பெரும்பாலான நேரங்களில் நண்பர்களே காரணமாய் இருக்கிறார்கள். அதனால் தான் நமக்கு அமையும் நண்பர்கள் நல்லவர்களாக இருக்க வேண்டியது அவசியமாகிறது.

நல்ல நண்பர்கள் எப்படி நம்மை உயரப் பறக்கவிடுவார்களோ, அதே போல தீய நண்பர்கள் நம்மை உயரத்திலிருந்து இழுத்து பள்ளத்தில் போட்டு விடுவார்கள். சரியான பாதையில் கப்பலைச் செலுத்தும் ஒரு மாலுமியைப் போல இருக்க வேண்டும் நல்ல நண்பன். “கூடா நட்பு கேடாய் முடியும்” என வள்ளுவர் அந்தக் காலத்திலேயே அழுத்தமாய்ச் சொன்னதன் காரணம் அது தான்.

இன்றைய இளைஞர்கள் பலரும் இந்த ‘நட்புத் தேர்வு’ ஏரியாவில் தவறி விடுகிறார்கள். “வாடா… தண்ணியடிக்கலாம்” என்று அழைப்பது தான் உண்மை நட்பின் அடையாளமென என்று நினைத்து விடுகிறார்கள். உண்மையான நண்பன் உங்களுடைய ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவான். உங்களுடைய முன்னேற்றத்தில் கவனம் செலுத்துவான். உங்களைத் தீய வழியில் இழுக்க மாட்டான் என்பதை மனதில் அழுத்தமாய் எழுதுங்கள்.

ஒருவேளை நீங்கள் புகை, மது போன்ற பழக்கங்களில் இருந்தால் உங்களை அங்கிருந்து வெளியே கொண்டு வருவது தான் உண்மையான நண்பனின் பண்பு. அதை உற்சாகப் படுத்துவதல்ல.

நல்ல நண்பன் உங்கள் தவறுகளைக் கடிந்து கொள்வான். உங்கள் மனம் கோணாமல் எப்போதும் நல்ல விஷயங்களையே சொல்லிக் கொண்டிருப்பவன் ஆத்மார்த்த நண்பன் அல்ல. நல்ல நண்பன் நாளைய வாழ்வில் நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் எனும் ஆர்வம் கொள்பவன். அப்படிப்பட்டவர்கள் உங்கள் குறைகளை உங்களிடம் சுட்டிக் காட்டத் தயங்க மாட்டார்கள். அதற்காத நட்பே போனால் கூட கவலைப்பட மாட்டார்கள்.

“நான் தண்ணியடிக்கிற விஷயத்தை அப்பா கிட்டே சொல்லாதே” என்பது போன்ற சத்தியங்களை நல்ல நண்பன் கண்டு கொள்வதில்லை. சில நேரங்களில் சத்தியம் கூட மீறப்படலாம் என்பது உண்மைத் தோழனுக்குத் தெரியும்.

உங்களுடைய இலட்சியங்களை உங்கள் நண்பன் ஆதரிக்கிறானா ? அல்லது அவனுடைய செயல்பாடுகள் உங்களுடைய இலட்சியத்துக்குத் தடைக்கல்லாய் இருக்கிறதா ? என்பதைப் பாருங்கள். உங்களுடைய இலட்சியங்களைக் கிண்டலடிப்பவனோ, அதை நோக்கிய உங்கள் பயணத்தின் போது உங்களுக்கு ஊக்கமளிக்காமல் இருப்பவனோ உங்களுடைய நண்பன் அல்ல.

உண்மையான நண்பன் உங்களுடைய திறமைகளை முழுமையாய்ப் பயன்படுத்த ஊக்குவிப்பான். ஒரு இசைக்கலைஞன் ஆவது உங்கள் இலட்சியமெனில், அதற்கு என்னென்ன செய்ய வேண்டும் எனும் விஷயங்களில் உங்களுக்கு உதவி செய்வான். உங்களைப் படிப்படியாய் அந்தப் பாதையில் நடத்துவான். வெறுமனே உங்களுடைய வெற்றிகளில் வந்து கை குலுக்கி விட்டுப் போகும் மனிதனாக அவன் இருப்பதில்லை.

மற்ற நண்பர்களைப்பற்றி உங்களிடம் தரக்குறைவாகப் விமர்சிக்கும் நண்பர்களிடம் கொஞ்சம் உஷாராய் இருங்கள். உங்களைப் பற்றி அவர்கள் வேறு நண்பர்களிடமும் அதே போலப் பேசித் திரியும் வாய்ப்பு உண்டு. நீங்கள் எந்த நண்பனுடன் இருக்கும் போது அடுத்தவர்களைப் பற்றி ஏகப்பட்ட கிசுகிசுக்களை அவிழ்க்கிறீர்கள் என யோசியுங்கள். அந்த நண்பன் நல்ல நண்பன் அல்ல என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

உண்மை நண்பர்கள் உங்களுடைய சந்தோஷத்தின் போது காணாமல் போனாலும், உங்களுடைய துயர வேளையில் நிச்சயம் உங்களோடு இருப்பார்கள். தங்களைப் பற்றிய தம்பட்டங்களை ஒதுக்கி வைத்து விட்டு உங்களுடைய உரையாடலைக் கவனமுடனும், ஈடுபாட்டுடனும் கேட்பது நல்ல நண்பனின் அடையாளம்.

“மனசுக்கு கஷ்டமாயிருக்கு, பணக் கஷ்டமாயிருக்கு, உதவி தேவையிருக்கு “ என கஷ்டம் என்றால் மட்டுமே உங்களிடம் வரும் நண்பர்கள் சிலர் இருப்பார்கள். நட்பின் முக்கியத் தேவையே உதவுவதில் தான் இருக்கிறது. ஆனால் அத்தகைய சூழல்களில் “மட்டுமே” உங்களைத் தேடி வரும் நண்பர்கள் சுயநலத்தின் சின்னங்கள் என்பதை மனதில் கொள்ளுங்கள்.

சில நண்பர்கள் அவர்கள் சொல்வதற்கெல்லாம் தஞ்சாவூர் பொம்மை போலத் தலையாட்டும் நண்பர்களே வேண்டுமென்பார்கள். அவர்கள் உண்மையான நண்பர்களல்ல. அவர்களுடைய நட்பில் வீசுவதும் சுயநல வாசமே !.

“தப்பான” ஒரு செயலைச் செய்ய உங்களை ஊக்கப்படுத்துபவன் உங்கள் நண்பனல்ல என்பதை நான் சொல்லத் தேவையில்லை. அப்படிப்பட்டவர்களை நீங்கள் முளையிலேயே கிள்ளி எறியலாம். போதை, திருட்டு, பாலியல், சமூக விரோதச் செயல் போன்ற பல தவறுகளுக்கு இளைஞர்களை இட்டுச் செல்வதில் பெரும்பாலான பங்கு நண்பர்களையே சாரும். அத்தகைய ஒழுக்கத்தை மீறிய செயல்களுக்குள் உங்களை இழுப்பவர்கள் உங்கள் எதிரிகளே ! நண்பர்களல்ல.

நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ அதே நிலையில் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பழகுபவனே உண்மை நண்பன். “எனக்குப் பிடித்த மாதிரி மாறினால் தான் உன்னோடு நட்பாய் இருப்பேன்” என நிபந்தனைகள் விதிப்பவர்களின் நட்பை விலக்கி விடுங்கள்.

உங்கள் நண்பர்களுடன் பேசும்போது உங்களுடைய மனம் நேர் சிந்தனைகளில் நிறைகிறதா ? எதிர் சிந்தனைகளில் நிரம்புகிறதா என்று பாருங்கள். எதிர் சிந்தனைகளே வளர்கிறதெனில் அந்த நட்பு தப்பானது என்பதைக் கண்டு கொள்ளுங்கள்.

சில நண்பர்களோடு பழகும்போது உங்களுடைய நல்ல குணாதிசயங்களெல்லாம் வளர்ந்து கொண்டே இருக்கும். அத்தகைய நண்பர்களை எப்போதுமே அருகில் வைத்திருங்கள்.

உங்களுடைய நெருங்கிய நண்பர்களில் நான்குபேரை நினையுங்கள். அவர்கள் நல்லவர்களா, மோசமானவர்களா என இப்போது அளவிடுங்கள். தீய நண்பர்களெனில் ஒதுக்குங்கள். தீய நண்பனோடு பழகுவதை விட நண்பனே இல்லாமல் வாழ்வது சாலச் சிறந்தது.

கடைசியாக ஒன்று. நல்ல நட்பை நீங்கள் எதிர்பார்ப்பது போலவே அடுத்தவர்களும் எதிர்பார்ப்பார்கள். எனவே நீங்களும் பிறருக்கு எப்போதும் ஒரு நல்ல நண்பனாகவே இருங்கள் !
நட்பில் உண்மை நிலவட்டும்

வாழ்வின் கிழக்கு புலரட்டும் !

 


Image result for mother teresa teen age

அன்னை தெரசாவின் வாழ்வில்…

 

அன்னை தெரசா சிறுமியாக இருந்தபோது அவருடைய தோழியர்களில் ஒரு தீய தோழி இருப்பதை அவருடைய தாய் கவனித்தார். ஒரு தீய நட்பு நல்லவர்களையும் கெடுத்துவிடும் எனவே அந்த நட்பைத் துண்டிக்க வேண்டும் என தெரசாவின் தாய் முடிவெடுத்தார்..

ஒருநாள் அவர் தெரசாவை அழைத்தார். அவருடைய கையில் ஒரு கூடை நிறைய ஆப்பிள் பழங்கள் இருந்தன. அழகான ஆப்பிள் பழங்களைக் கண்ட தெரசாவின் கண்கள் ஆனந்தத்தில் விரிந்தன. ஆர்வத்துடன் ஒரு பழத்தை எடுக்கப் போன தெரசாவை தாய் நிறுத்தினாள். தனியே வைத்திருந்த ஒரு அழுகிய பழத்தை எடுத்தாள் தாய். தெரசா புரியாமல் பார்த்தாள். தாய் அந்த அழுகிய பழத்தை அழகிய பழங்களின் நடுவே வைத்தாள்.

“ஏம்மா ? நல்ல பழங்களோடு கெட்ட பழத்தையும் வைக்கிறீர்கள் ?” தெரசா கேட்டாள்.

“எல்லாம் ஒரு காரணமாய் தான். இதை அப்படியே கொண்டு போய் ஒரு இடத்தில் வை. நான் சொல்லும்போது எடுத்து வா” என்றார் தாய்.

தெரசா அப்படியே செய்தார்.

சில நாட்களுக்குப் பின் தாய் தெரசாவை மறுபடியும் அழைத்தாள். அந்த பழக் கூடையை எடுத்து வரச் சொன்னாள். பழக்கூடையை தெரசா எடுத்து வந்து தாயின் முன்னால் வைத்தாள். அந்தக் கூடையிலிருந்த பழங்கள் எல்லாம் அழுகிப் போய் இருந்தன.

தெரசா வருந்தினாள். நன்றாக இருந்த பழங்கள் கெட்டுப் போய்விட்டனவே என்று அவளுக்கு அழுகையே வந்து விட்டது.

தாய் தெராவை அருகில் அமரவைத்து மெதுவாய்ச் சொன்னாள். “பார்த்தாயா ? ஒரு அழுகிய ஆப்பிள் பழம் ஒரு கூடை நல்ல பழங்களை அழுக வைத்து விட்டது. தீய நட்பும் இப்படித் தான். ஒரு தீய நட்பு ஒரு நல்ல குழுவையே நாசமாக்கி விடும். விஷம் ஒருதுளி போதும் ஒரு மனிதனைக் கொல்ல. எனவே நட்பைத் தேர்ந்தெடுப்பதில் கவனம் தேவை”.


 

Sep 26

தேசத்தை நேசிப்போம்

Image result for Love india

சமீபத்தில் இந்தியா கிரிக்கெட் உலகக் கோப்பையைக் கைப்பற்றியபோது இரவிலேயே வாண வேடிக்கைகள் ஆரம்பித்து விட்டன. வெற்றிக் கொண்டாட்டங்களை தேசம் நிறுத்தவே சில வாரங்களானது. “இந்தியன் என்பதில் பெருமைப்படு”, “நான் இந்தியன் என்பதில் கர்வமடைகிறேன்” போன்ற வாசகங்கள் நாடுமுழுவதும் ஒலித்தன. மக்கள் புளகாங்கிதமடைந்தார்கள்.

எல்லாம் நல்லது தான். ஆனால் பெரும்பாலான மக்களுடைய தேசப்பற்று விளையாட்டில் ஆரம்பித்து விளையாட்டிலேயே முடிந்து போய்விடுகிறதே என்பது தான் துயரம். உண்மையில் இது தான் தேசப் பற்றா ?

நாட்டுப் பற்று என்பது நாட்டின் மீது நாம் வைக்கும் பாசம். உதாரணமாக, ஒரு தாய் குழந்தையின் மீது பாசம் வைத்தால் அந்த அன்பு எப்படிப்பட்டதாய் இருக்கும் ? அந்த குழந்தை முன்னேற வேண்டும். அதற்கு எந்தப் பிரச்சினையும் வரக்கூடாது ! அதன் எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டும் ! அதன் முன்னேற்றத்துக்காக உழைக்க வேண்டும் !! இப்படித் தானே ?. இதே பாசத்தை தேசத்தின் மீது வைப்பதற்குப் பெயர் தான் தேசப்பற்று.

இப்போது நமது வாழ்க்கையைக் கொஞ்சம் ரிவைண்ட் செய்துப் பார்ப்போம். நமது தேசப்பற்று எப்படி இருக்கிறது ? உண்மையிலேயே நாம் தேசத்தின் மீது பாசம் வைத்திருக்கிறோமா ? அல்லது அப்படி ஒரு பாசம் இருப்பதாக நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டிருக்கிறோமா ?

இந்திய தேசத்தின் வரலாறைப் புரட்டிப் பார்த்தால் தேசப்பற்றின் வலிகள் புரியும். சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கும் முன் நமது வீதிகளில் வீசிய அடிமைக் காற்றின் குருதி வாசனையை நுகர முடியும். இன்றைய இளைஞர்களுக்கு சுதந்திரம் பிறவிப் பரிசு. ஆனால் இரு தலைமுறைக்கு முன் அப்படியல்ல. மக்கள் அடிமை முத்திரையுடன் இந்தியாவில் பிறந்தார்கள். அன்றைய தேசப்பற்று சுதந்திரத்தின் மீதான தாகமாய் இருந்தது.

பல தலைவர்களும், கோடிக்கணக்கான மக்களும் சுதந்திரத்தை மீண்டெடுக்க என்ன செய்தார்கள் என்பதை இளைஞர்கள் புரிந்து கொள்வது தேசத்தின் மீதான நேசத்தின் முதல் படி.

“பிரசவ வலியைப் புரிந்து கொள்ளும் போது ஒரு பெண் தனது தாயின் மகத்துவத்தை அறிந்து கொள்கிறாள்”. ஒரு தேசம் கடந்து வந்த வலிகளைப் புரிந்து கொள்ளும் போது ஒருவன் சுதந்திரத்தின் மகத்துவத்தைப் புரிந்து கொள்கிறான். எனவே தான் தேச வரலாற்றையும், தேசத் தலைவர்களின் வரலாறுகளையும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது. நம்மைப் பொறுத்தவரையில் அது வெறும் பாடநூலில் வரும் சில பாடங்களாய்ச் சுருங்கி விட்டது தான் வேதனை.

தேசத்தின் மீது ராணுவ வீரர்கள் வைக்கும் பாசமே நமது தேசத்தின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் தருகிறது. நாம் பல வேளைகளில் பணிகளை வெறும் சம்பளத்துடன் ஒப்பிட்டுப் பார்த்து எடை போடும் தவறைச் செய்கிறோம். மேலை நாடுகளில் ராணுவத்தில் பணி புரிவதை பெரும் கவுரவமாகவும், கடமையாகவும் கருதுகிறார்கள். நமது நாட்டைப் பொறுத்தவரை வேறு வேலை கிடைக்காதவர்களின் புகலிடமாகவே பலருக்கும் ராணுவ வேலை வாய்க்கிறது.

ஒரு தினம் எப்படிப் புலருமோ, எப்படி முடியுமோ என்பதைக் கணிக்கவே முடியாத ஒரு துறை காவல் துறை. தேசத்தின் பாதுகாப்பையும், அமைதியையும் மட்டுமே மனதில் கொண்டு உழைக்கும் அவர்களுக்கு உரிய மரியாதையைத் தருகிறோமா ? பத்திரிகை நகைச்சுவைக் கார்ட்டூன்கள் தொடங்கி, திரைப்பட வில்லன்கள் வரை அவர்கள் நேர்மையற்றவர்களாக வலம் வரக் காரணம் என்ன ?

பதில், “நாம் குறைகளை மட்டுமே கவனிக்கும் வித்தியாசமான அன்னப் பறவைகள்” என்பது தான். நமது கண்ணுக்கு நல்ல விஷயங்கள் பலவும் தெரிவதில்லை. அதற்கு ஊடகங்களும் ஒரு காரணம். நல்ல விஷயங்களை அதிகம் பேசும்போது நமது சிந்தனைகளும் நல்லவற்றை நோக்கியே நடைபோடும். குறைகளைக் களைய வேண்டியது எவ்வளவு அவசியமோ, நல்லவற்றைக் கண்டுணர்ந்து அதை வளர்க்க வேண்டியதும் அவசியம் என்பதை இளைஞர்கள் உணர வேண்டும்.

தேசப் பற்று என்பது ஒவ்வோர் காலகட்டத்துக்கும் ஒவ்வொரு விதமாக மாறுபடும். ஆனால் அடிப்படை விஷயம் ஒன்று தான். “நாட்டை எப்படி அடுத்த நிலைக்கு உயர்த்துவது !”. அடிமை நிலையில் இருந்தால் சுதந்திர நிலை. சுதந்திர நிலையில் இருந்தால் அதன் அடுத்த படியான வளமான நிலை. இதுவே உண்மையான தேசப்பற்றின் வெளிப்பாடு.

குறைகளை மட்டும் சொல்லிக் கொண்டிருப்பதில் பலர் தங்களுடைய தேசப்பற்றை வெளிப்படுத்த முயல்வதுண்டு. ஒரு குழந்தை தவறிப்போய் குழியில் விழுகிறது என வைத்துக் கொள்ளுங்கள். உடனே குழந்தையையும், பள்ளம் தோண்டியவர்களையும் குறை சொல்லிக் கொண்டு கடந்து போய் விட்டால் என்ன பயன் ? முதல் தேவை அந்தக் குழந்தையைப் பள்ளத்திலிருந்து வெளியே எடுப்பது தான் ! அதைத் தான் எந்த ஒரு வளரும் தேசமும் எதிர்பார்க்கும். குறைகளைச் சொல்லும் போதெல்லாம் அதைத் தீர்க்கும் வழிகளை ஆராய்வதும், குறை தீர்க்க நமது பங்களிப்பையும் செலுத்துவதும் அவசியம்.

நாளைய தேசம் இன்றைய இளைஞர்களின் கையில் இருக்கிறது என்பார்கள். தேச அக்கறை என்பது சட்டையில் தேசக் கொடியைக் குத்தி வைப்பதிலோ, ஆகஸ்ட் பதினைந்தாம் தியதி தொலைக்காட்சியில் கப்பலோட்டிய தமிழன் திரைப்படம் பார்ப்பதிலோ முடிந்து போய்விடக் கூடாது.

தேசப் பற்று முதலில் தேசத்தின் சட்டதிட்டங்களைக் கடைபிடிப்பதில் துவங்க வேண்டும். சட்டத்தை மீறும் சூழலைக் காணும்போது தார்மீகக் கோபம் உள்ளுக்குள் உருவாக வேண்டும்.

சமூக, தேச நலனுக்காய் உருவாகும் இயக்கங்கள், முயற்சிகள் போன்றவற்றில் பங்களிப்புகளைச் செலுத்துவது, இன்னொரு நாட்டுக்காரரிடம் பேசும்போது நமது நாட்டின் பெருமைகளையும், உயர்வுகளையும் பேசுவது என சின்னச் சின்ன செயல்களிலும் தேசப்பற்று வெளிப்பட வேண்டும்.

நாம் இன்றைக்குத் தயாராக்கும் தேசமே நமது பிள்ளைகளின் கரங்களில் நாளை இருக்கப் போகிறது. எதிர்கால சந்ததிக்காய் மரம் நடுவது போலவே, தேசத்தையும் தயாராக்க வேண்டிய கடமை நமக்கு உண்டு. நாளைய இந்தியாவின்  இளைஞர்கள் முந்தைய தலைமுறையினரை நன்றியோடு நினைத்துப் பார்க்க வேண்டுமே தவிர, எரிச்சலுடன் எட்டிப் பார்க்கக் கூடாது !

சமூக விரோதச் செயல்கள் ஒவ்வொன்றும் நமக்கும் தேசத்துக்குமான நட்புறவை உடைக்கின்றன. பொதுச் சொத்துக்களின் மீதான சேதமானாலும் சரி, வன்முறையானாலும் சரி, விதி மீறல்களானாலும் சரி, சட்ட விரோதமானாலும் சரி, எல்லாமே தேசப்பற்று மனதில் இல்லை என்பதன் வெளிப்பாடுகளே.

சிக்னலில் சிவப்பு விளக்கு போட்ட பின்னும் சட்டை செய்யாமல் வாகனத்தை ஓட்டிக் கொண்டு போவது கூட உங்களுக்கு தேசப்பற்று இல்லை என்பதன் அறிகுறியே !

வரிகளை ஒழுங்காகச் செலுத்துவது, சொத்துக் கணக்குகளைச் சரியாகக் காட்டுவது இவையெல்லாம் உங்களுடைய தேசப் பற்றின் சில அடையாளங்கள். இவற்றில் தில்லு முல்லு செய்வது என்பது அப்பாவின் பர்சுக்குள் கையை விட்டுத் திருடுவது போன்றது !

இன்றைக்கு நமது தேசப்பற்று பெரும்பாலும் எமோஷனல் வெளிப்பாடு தான். அது ஜெய்ஹிந்த், ஹெய்ஹோ என்றெல்லாம் வசீகர வார்த்தைகளை வீசுவதில் வெளிப்படுகிறது. அது விரைவிலேயே மங்கிப் போய்விடும். “ஆண்டுக்கு ஒரு முறை நினைத்து விட்டுப் போகும் நினைவுநாள் அல்ல தேசப்பற்று” என்பதை இளைஞர்கள் உணரவேண்டும்.

நான் மட்டும் ஓட்டுப் போடாவிட்டால் என்னவாகப் போகிறது ? நான் மட்டும் வண்டியை சிக்னலில் நிறுத்தாவிட்டால் என்னவாகப் போகிறது ? நான் மட்டும் லஞ்சம் கொடுக்காவிட்டால் என்னவாகப் போகிறது ? என “நான் மட்டும்…” எனும் வாசகங்கள் நமது தேசத்தின் வளர்ச்சிக்கான மாபெரும் முட்டுக் கட்டைகள். இத்தகைய “நான் மட்டும்..” சங்கதிகள் ஒரு சீனப் பெருஞ்சுவராய் இந்திய வளர்ச்சியின் குறுக்கே கட்டப்பட்டிருக்கிறது !

தேசம் என்பது எந்த ஒரு சின்ன எல்லைக்குள்ளும் அடைக்க முடியாதது. பல்வேறு மதங்கள், இனங்கள், மொழிகள் எனும் சர்வ சங்கதிகளின் கூட்டுத் தொகையாய் தேசத்தைப் பார்ப்பதே முழுமையான பார்வையாகும். அப்போது தான் சமத்துவ சிந்தனையும், சகோதர உணர்வும் ஊற்றெடுக்கும்.

தேசத்தின் மீதான நம்பிக்கை என்பது தேசத்திலுள்ள மண்ணிலும், கல்லிலும் வைக்கும் நம்பிக்கையல்ல. தேச மக்கள் மீது வைக்கும் நம்பிக்கை எனும் உயரிய சிந்தனை உருவாக வேண்டும். அது தான் நம்மைச் சார்ந்த மக்களை ஒருங்கிணைக்கவும், ஓர் மனிதநேயச் சமூகத்தைக் கட்டியெழுப்பவும் நமக்கு உதவும்.

தேசத்தை நேசிப்போம்

சேதத்தை சீர்செய்வோம்

 

சேவியர்

Sep 26

விட்டுக் கொடுத்தல் வெற்றியே !

 

Image result for happy couple

வாழ்க்கையை இனிமையாக்குவதும், துயரமாக்குவதும் பெரும்பாலும் சின்னச் சின்ன விஷயங்களே. சின்னச் சின்ன மலர்களின் கைகோத்தல் எப்படி ஒரு மாலையாய் உருவாகிறதோ, அப்படித்தான் வாழ்வின் இனிமைகளும் உருவாகின்றன. மனிதனுக்கே உரிய அடிப்படைப் பண்புகளைக் கொஞ்சம் தூசு தட்டித் துடைத்து வைத்தாலே போதும், வாழ்க்கை பளபளப்பாய் அழகாய் உருமாறிவிடும்.

அத்தகைய குணங்களில் ஒன்று தான் உறவுகளுக்கிடையே நிகழ வேண்டிய விட்டுக் கொடுத்தல். விட்டுக் கொடுத்தல் என்பது ஒரு வகையில் சகிப்புத் தன்மையின் குழந்தையே !

பல முதியவர்கள் தங்கள் சாய்வு நாற்காலியில் உட்கார்ந்து கடந்த காலத்தை அசை போடுகையில் வெப்பப் பெருமூச்சையே வெளி விடுவார்கள். “கொஞ்சம் விட்டுக் கொடுத்துப் போயிருக்கலாம்” எனும் உச்சுக் கொட்டல் பலருடைய சிந்தனைகளிலும் வந்து ஒட்டிக் கொள்ளும்.

விட்டுக் கொடுத்தல் முன்னேற்றத்தின் முகவரி. மண் விட்டுக் கொடுக்காமல் இருந்தால் முளை உதயத்தைக் காண்பதில்லை. முட்டை விட்டுக் கொடுக்காமல் இருந்தால் ஒரு உயிர் உதயமாவதில்லை. மேகம் விட்டுக் கொடுக்காமல் இருந்தால் பூமியின் முகத்தில் மழையின் முத்தங்கள் இல்லை. எதையும் இறுகப் பற்றிக் கொள்வதிலல்ல, விட்டுக் கொடுப்பதிலேயே இருக்கிறது வாழ்க்கையின் ரகசியம்.

குடும்பத்தில் நிகழும் ஒரு சின்ன நிகழ்வை எடுத்துக் கொள்ளுங்கள். வார இறுதியில் என்ன செய்யலாம் என எல்லோரும் அமர்ந்து பேசுவீர்கள். “ புதுப் படம் பாக்க போலாம்” என்பான் தம்பி. “அதெல்லாம் வேண்டாம் கோயில் போகலாம்” என்பார் அம்மா. “பீச் போகலாம்” என்பது உங்களுடைய கருத்தாய் இருக்கும். “எங்கே போலாம்ன்னு முடிவு பண்ணிச் சொல்லுங்க” என ஹாயாக அமர்ந்து விடுவார் அப்பா !

இந்தச் சூழலின் முடிவு என்ன? இங்கே ஒவ்வொருவரும் எப்படிச் செயல்பட்டார்கள் என்பதை வைத்தே விட்டுக் கொடுத்தலைப் புரிந்து கொள்ளலாம்.

பெரும்பாலும் விட்டுக் கொடுத்தல் என்பது அன்பின் வெளிப்பாடே ! யார் விட்டுக் கொடுக்கிறார்களோ அவர்கள் அடுத்த நபர் மீது அபரிமிதமான அன்பு வைத்திருக்கிறார் என்று அர்த்தம். முதலில் விட்டுக் கொடுப்பது பெரும்பாலும் பெற்றோர் தான் ! அவர்களுடைய அன்பு நிபந்தனைகளற்ற அன்பு என்பதைச் சொல்லவும் வேண்டுமா ?

நமது உரையாடல்கள் பெரும்பாலும் ஒரு குத்துச் சண்டை போலவே நடக்கும். சண்டையில் எதிராளி தாக்கப்படுவதில் நமது வெற்றி நிர்ணயிக்கப் படுகிறது. ஆனால் குடும்ப விவாதங்களில் அடுத்த நபர் காக்கப் படுவதில் தான் வெற்றி இருக்கிறது.

விட்டுக் கொடுப்பது என்பது நமது ஈகோவை விட்டுக் கொடுப்பதிலிருந்து துவங்குகிறது. விட்டுக் கொடுக்காத மனநிலைக்குள் “நான் பெரியவன்” எனும் கர்வம் ஒளிந்திருக்கிறது. “என் மகிழ்ச்சியே முக்கியம்” எனும் சுயநலம் அதற்குள் விழித்திருக்கிறது. ‘நான் தோற்று விடக் கூடாது” எனும் பிடிவாதம் அதற்குள் படுத்திருக்கிறது.

அமெரிக்காவின் பல பள்ளிக்கூடங்களில் ஒரு பழக்கத்தைக் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்கிறார்கள். அதாவது, இரண்டு குழந்தைகள் விளையாடுகின்றன என்று வைத்துக் கொள்ளுங்கள். ஒரு குழந்தை வெற்றி பெறும். ஒரு குழந்தை தோல்வியடையும். வெற்றியடைந்த குழந்தை “நான் தான் ஜெயிச்சேன்” என்றோ, தோல்வியடைந்த குழந்தை “நான் தோற்று விட்டேன்” என்றோ சொல்லக் கூடாது. இருவரும் கைகளைக் குலுக்கிக் கொண்டு “விளையாட்டு நல்லா இருந்தது” என்று தான் சொல்ல வேண்டும் ! சின்ன வயதிலேயே வெற்றியின் மமதையோ, தோல்வியின் அவமானமோ மனதில் ஆக்கிரமிக்காமல் இருக்க அவர்கள் சொல்லும் வழி இது !

இத்தகைய பாடங்கள், அடுத்தவருடைய உணர்வுகளை மதிக்க குழந்தைகளைப் பக்குவப்படுத்தும். விட்டுக் கொடுத்தலின் அடிப்படை அடுத்தவர்களுடைய உணர்வுகளை மதிப்பதே !

விட்டுக் கொடுத்தல் என்பது தோல்வி என்பதே பொதுவான கருத்து. உண்மையில் விட்டுக் கொடுத்தல் என்பது தோல்வியல்ல ! விட்டுக் கொடுத்தல் என்பதே  வெற்றி. “வாழ்வின் உயர்ந்த மகிழ்ச்சி அடுத்தவர்களை மகிழ்ச்சிப் படுத்துவதில் தான் இருக்கிறது” என்பார்கள். விட்டுக் கொடுத்தல் அந்த மகிழ்ச்சியை உங்களுக்கு வழங்குகிறது.

“நான் விட்டுக் கொடுத்ததால தான் அவன் இன்னிக்கு இந்த நிலைமைல இருக்கான். இல்லேன்னா இன்னிக்கு அவன் அடையாளம் தெரியாம போயிருப்பான். ” என்றெல்லாம் பலர் புலம்புவதுண்டு. தயவு செய்து அதை நிறுத்துங்கள் !

விட்டுக் கொடுத்தலின் மிக முக்கியப் பண்பே அதை ஆனந்தமாய்ச் செய்ய வேண்டும் என்பது தான். சிலர் பிறருடைய பாராட்டைப் பெற வேண்டும் என்பதற்காகவே விட்டுக் கொடுப்பதுண்டு. உண்மையான விட்டுக் கொடுத்தல் அடுத்தவர்களுடைய பாராட்டையோ, அங்கீகாரத்தையோ எதிர்பார்க்காது.

ஒரு சின்ன விட்டுக் கொடுத்தல், ஒரு நாளையோ, ஒரு வருடத்தையோ, ஒரு வாழ்க்கையையோ அழகாய் எழுதி விட முடியும். பெரும்பாலான மண முறிவுகளையோ, நட்பு முறிவுகளையோ எடுத்துப் பாருங்கள். கோபமாய் வீசும் வார்த்தைகள். பிடிவாதமாய் பிடித்துத் தொங்கும் ஈகோ. விட்டுக் கொடுக்க மறுக்கும் மனநிலை. இவையே காரணமாய் இருக்கும்.

விட்டுக் கொடுத்தல் இரண்டு தரப்பிலிருந்தும் வரும். “நாம ஒரு படி கீழே இறங்கிப் போனால், எதிராளி இரண்டு படி கீழே இறங்கி வருவான்” என்று சொல்வதைக் கேள்விப்பட்டிருப்பீர்கள்.

நாம் ஒரு படி கீழே இறங்க மறுத்து ஒரு படி மேலே ஏறினால், எதிராளி இரண்டு படி மேலே ஏறுகிறார். கடைசியில் ஒரு சின்ன விஷயம், இறங்கி வர முடியாத ஈகோவின் உச்சத்தில் நம்மைக் கொன்டு போய் நிறுத்தி விடுகிறது. எனவே விட்டுக் கொடுத்தலுக்கான முதல் சுவடை எடுத்து வைக்க தயங்கவே தயங்காதீர்கள்.

பெரும்பாலான சண்டைகளின் முதல் புள்ளி மிகவும் சின்னதாகவே இருக்கும். ஒரு சின்ன நெருப்பு ஒரு வைக்கோல் காட்டையே பொசுக்குவது போல, சண்டை பற்றிப் படர்ந்து விடுகிறது. துளியாக இருக்கையில் நெருப்பை அணைப்பது எளிது. விட்டுக் கொடுத்தல் அந்த வித்தையைக் கற்றுக் கொடுக்கிறது.

“நான் செய்வதெல்லாம் சரி” எனும் மனநிலையை விட்டு வெளியே வருவது  விட்டுக் கொடுத்தலுக்கு முக்கியமான அம்சம். நாம் தவறுகளுக்கு அப்பாற்பட்டவர் அல்ல எனும் சிந்தனை நமக்கு இருக்க வேன்டும். அடுத்தவர் சரியானவற்றைச் செய்வார் எனும் சிந்தனையை அது தான் கற்றுத் தரும். தனக்கு பலவீனம் உண்டு என்பதை உணரும் போது தான், பிறருடைய பலவீனங்களை ஒத்துக் கொள்வதும் எளிதாகும்.

பல சண்டைகள் தேவையற்ற காரணங்களுக்காக நடப்பவையே. கருத்து வேறுபாடு நிகழும் போது, இந்த விஷயம் சண்டையிடுவதற்குத் தகுதியுடையதா என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். சண்டைக்கான விஷயத்தைத் தான் நீங்கள் பார்க்க வேண்டுமே தவிர, சண்டையிடும் நபரை வைத்து அந்த விவாதத்தை எடை போடக் கூடாது அடடா “இந்த விஷயத்துக்கா இவ்ளோ எனர்ஜி வேஸ்ட் பண்ணினேன்” என்று தான் பல வேளைகளில் உள்மனசு சொல்லும்.

அது உண்மையிலேயே மிக மிக முக்கியமான விஷயமெனில் இருவருக்கும் பயனளிக்கும் வகையில் அந்த விவாதத்தை நடத்தலாம். இதை வின் – வின் அதாவது வெற்றி – வெற்றி விவாதம் என்பார்கள். இருவருக்கும் வெற்றி எனும் விவாதங்களில் விட்டுக் கொடுத்தல் சர்வ நிச்சயம். !

நமது பேச்சில் கவனம் செலுத்தினாலே பாதிப் பிரச்சினைகள் ஓடிப் போய் விடும். பலரும், அடுத்தவர்களைக் காயப்படுத்தவேண்டும் எனும் ஒரே நோக்கத்தில் சுருக் சுருக் என பேசுவார்கள். அப்படிப்பட்டவர்கள் விட்டுக் கொடுத்தலைக் கற்றுக் கொள்வது பிரபஞ்சத் தேவையாகும். பரபரவென பேசிக் கொண்டே இருக்காமல் ஒரு முப்பது வினாடிகளேனும் அமைதி காப்பது விட்டுக் கொடுத்தலுக்கான முதல் படியாய் அமையும்.

சாலையில் வாகனம் ஓட்டும் போது யாராவது உங்களை முந்திச் சென்றால் மனதில் சுருக்கென கோபம் வருகிறதா ? அடுத்த சிக்னலுக்குள் அவனை முந்திச் செல்லும் ஆவேசம் எழுகிறதா ? கொஞ்சம் ஆர அமர, இதனால் என்ன பயன் விளையப்போகிறது என்பதை யோசித்துப் பாருங்கள். ஒன்றுமே இல்லை. முந்திச் செல்பவர் முந்திச் செல்லட்டும் என விட்டுக் கொடுத்தால், பல்வேறு விபத்துகளை நாம் தவிர்க்கவும் முடியும்.

விட்டுக் கொடுத்தலை பலவீனத்தின் அடையாளமாகவே பலரும் பார்க்கிறார்கள். உண்மையில் அது ஆன்ம பலத்தின் அடையாளம். மன உறுதியற்றவர்களால் விட்டுக் கொடுக்க முடியாது. பலவீனருடைய மனம் அடுத்தவர்களின் விமர்சனங்களுக்காகக் கவலைப்படும், அடுத்தவர்கள் என்ன சொல்வார்களோ ? தன்னை இளக்காரமாய் நினைத்து விடுவார்களோ என்றெல்லாம் சஞ்சலப்படும். மன உறுதி படைத்தவர்களுக்கு இத்தகைய கவலைகள் இருப்பதில்லை. எனவே அவர்களுக்கு விட்டுக் கொடுத்தல் சாத்தியமாகிறது.

விட்டுக் கொடுத்தல் நமது மன அழுத்தத்தை வெகுவாகக் குறைக்கிறது. மன பாரத்தை அகற்றி நம்மை இலகுவாக்குகிறது. மன்னிப்பும், விட்டுக் கொடுத்தலும் இருக்கும் நபர்களிடம் மன அழுத்தம் வந்து குடியேறுவதில்லை. மன அழுத்தமில்லாத உடல் ஆரோக்கியமானது என்பது மருத்துவம் அடித்துச் சொல்லும் உண்மையாகும்,

உறவுகள் வளர்ந்திட விட்டுக் கொடு

பிறர்க்கும் அதையேக் கற்றுக் கொடு.

 

சேவியர்

Sep 26

Christianity : Sunday’s School Skit

Image result for Love of jesus

பின் குரல் :

 

ஏழு கடல், ஏழு மலை தாண்டிய ஒரு நாட்டில் ஒரு மன்னர் இருந்தார். ரொம்ப அன்பான மன்னர். தன்னுடைய மக்களை மனதார நேசித்த மன்னர் அவர். தனது அரண்மனையில் உள்ள வேலைக்காரர்கள் எல்லோரையும் அவர் மிகுந்த அன்புடன் நடத்தினார். அவர்கள் என்ன வேலை செய்கிறார்கள் என்பதை வைத்து அவர் பாகுபாடு காட்டவேயில்லை. அவருடைய பார்வையில் எல்லோரும் சமம்.

நபர் 1 : நான் கட்டுமானப் பணி செய்வேன். அரண்மனையை மாற்றி அமைக்கிறது, எக்ஸ்ட்ரா ரூம்ஸ் கட்டறது எல்லாம் என்னோட வேலை.

நபர் 2 : கட்டி வெச்சுட்டா போதுமா ? அதை சுத்தப்படுத்தறது நான் தான். வீடு பளிச் பளிச்சுன்னு இருக்கக் காரணமே நான் தான்.

நபர் 3 : எல்லாருக்கும் சாப்பிடணும்ல, அதுக்கு பிரட் தயார் பண்றது நான் தான். பசியை அடக்கறது தானே முக்கியம்

நபர் 4 : அந்த பிரட் சுவையா இருக்கணும்ல. அதுக்காக ஸ்பெஷல் வெண்ணை தயாரிக்கிறது நான் தான்.

நபர் 5 : வீடாச்சு, சாப்பாடாச்சு அப்புறம் என்ன ? நல்ல டிரஸ் வேணும்ல. அதை பண்றது நான் தான். ஸ்பெஷல் டெய்லர்.

நபர் 6 : நான் கூடாமாட ஒத்தாசை செய்றவன். ஒரு கையாள் மாதிரி. யாருக்கு என்ன தேவைன்னாலும் ஒரு குரல் கொடுத்தா வந்து நிப்பேன்.

 

 

பின் குரல் 2

வேலைக்காரங்க இப்படி பேசிக்கிட்டாலும் மன்னரைப் பொறுத்தவரைக்கும் எல்லாருமே சமம் தான். அது தோட்ட வேலை செய்றவரா இருந்தாலும் சரி, தன்னோட தங்கத்தை பராமரிக்கிறவர் ஆனாலும் சரி. மந்திரி ஆனாலும் சரி, மாடு மேய்க்கிறவன் ஆனாலும் சரி. பெரியவன், சின்னவன், ஆண், பெண், சின்னவன், பெரியவன் அப்படி எந்த பாகுபாட்டையுமே பார்க்க மாட்டார்.

 

நபர் 1 : அரண்மனை வேலை இல்லாத நேரத்துல நான் வீட்டு வேலைகள் தான் செஞ்சிட்டு இருப்பேன்.

நபர் 2 : நான் வீட்ல நிக்கிற ஆடுகளையெல்லாம் மேய்ப்பேன். ஆடுகளை குளிப்பாட்டி விடுவேன்.

நபர் 3 : நான்… நல்ல டேஸ்ட்டா சமைச்சு சாப்பிடுவேன். என் தோட்டத்திலயே தயாரான பிரஷ் காய்கறிகளை வெச்சு சமையல் செய்வேன்.

நபர் 4 : நான் காட்டுக்கு மரம் வெட்ட போய்டுவேன். மரம் வெட்டி கொண்டு வர விறகை வித்து கொஞ்சம் காசு சம்பாதிப்பேன்.

நபர் 5 : நான் வித்தியாசமானவன். தங்க வேட்டைக்கு போயிடுவேன். அதோ அந்த மலைக்கு உச்சில புதையல் வேட்டை நடத்துவேன்.

நபர் 6 : நான் எங்க ஊர்ல இருக்கிற மக்களுக்கு ஏதாச்சும் ஹெல்ப் பண்ண டிரை பண்ணுவேன்.

 

 

பின் குரல் 3

 

ஒரு நாள் அந்த அரண்மனையிலிருந்த சின்னப் பையன் ஒருத்தன் காணாம போயிட்டான். அதை யாரும் கவனிக்கல, ஆனா மன்னர் கவனித்தார். அரண்மனைக்கு தேவையான பழங்கள் வாங்கி வருவது அந்தப் பையன் தான். எல்லோரையும் சமமாய்ப் பாவிக்கும் மன்னனுக்கு சிறுவனைக் காணாததில் ரொம்ப வருத்தம். எப்படியாவது அவனைக் கண்டுபிடிக்க வேண்டும் என நினைத்தான். ஆனால் அரண்மனையிலிருந்த மற்றவர்களுக்கு அது ஒரு பெரிய விஷயமாய் தெரியவில்லை.

நபர் 1 : அவன் யாரு.. ஒரு குட்டிப் பய. அவனுக்காக இந்த ஆர்ப்பாட்டம் தேவையா ?

நபர் 2 : அவன் யாருன்னே தெரியாது. அரண்மனையில நூற்றுக்கணக்கான வேலைக்காரங்க உண்டு. இதுல ஒருத்தனைக் காணோம்னா என்னவாம் ?

நபர் 3 : ஆமா, அவனைத் தேடணும் கண்டுபிடிக்கணும்ன்னு சொல்றதெல்லாம் பைத்தியக்காரத் தனம்.

நபர் 4 : அவனால என்ன காரியம் ஆகப் போவுது ? அவன் செய்ற வேலைக்கு இன்னொரு ஆளை புடிச்சா போதும். என்ன பெருசா செய்றான் அவன் ?

நபர் 5 : அவனைப் பற்றி எதுக்கு இவ்ளோ கவலைப்படறாரு மன்னர் ? அவன் என்ன ராணுவ தளபதியா ?

நபர் 6 : அந்த பொடியனைப் பத்தி நாம இவ்ளோ நேரம் பேசறதே வேஸ்ட். அவன் ஒரு பொடிப்பய.

 

 

பின் குரல் 4 : எல்லோருக்கும் அவன் ஒரு சாதாரண சின்னப் பையன். ஆனா மன்னனைப் பொறுத்தவரை எல்லோரையும் போல தான் அவனும். தனது அன்புக்குரிய ஒருத்தரைக் காணோமேன்னு கவலைப்பட்ட மன்னர், தானாகவே குதிரையை எடுத்துக் கொண்டு பையனைத் தேடி போனார்.

நபர் 1 : மன்னர் எங்கே ? ஆளையே காணோமே ? வெளியே போயிட்டாரா ?

நபர் 2 : அந்த பையனைத் தேடி குதிரையை எடுத்துட்டு போயிட்டாராம். வேற வேலை இல்லையா அவருக்கு ?

நபர் 3 : அவரு மன்னர் தானா ? ஆட்சில இருக்கிற மன்னர் இப்படித் தான் பண்ணுவாரா ? என்னத்த சொல்ல ?

நபர் 4 : தனியாவா போயிருக்காரு ? யாரையாவது நாலு பேரை கூட்டிட்டு போயிருக்கலாமே !! இனிமே இவரும் காணாம போயிட்டா என்ன பண்றது ?

நபர் 5 : மன்னர் எங்கேயும் போயிருக்க வாய்ப்பு இல்லை. அவரோட பண்ணை வீட்ல போய் புக் வாசிச்சிட்டு இருப்பாருன்னு நினைக்கிறேன். அவரு எதுக்கு அவனை தேடணும் ?

நபர் 6 : நிஜமாவே அந்தப் பையனைத் தேடித் தான் போயிருக்காரா ? ஆச்சரியம் தான். என்னால‌ நம்பவே முடியலையே.

 

 

பின் குரல் 5 : கொஞ்ச நாளிலேயே அரண்மனையில் பழங்களுக்குத் தட்டுப்பாடு வந்தது. பழம் வாங்கி வருகின்ற பையன் இல்லாதது தான் காரணம். அப்போது தான் அவனுடைய முக்கியத்துவம் எல்லோருக்கும் புரிய ஆரம்பித்தது. அட அந்த பையன் எங்கேப்பா ? என எல்லோரும் தேட ஆரம்பித்தனர்.

நபர் 1 : அந்த பையன் இல்லாதது ஒரு குறை தான்.. இல்லையா ?

நபர் 2 : ஆமா.. ஆயிரம் தான் சொன்னாலும் அவனும் ஒரு நல்ல பையன் தான்.

நபர் 3 : ஆமா. .எங்கே போனானோ தெரியல. அவன் வந்தான்னா கொஞ்சம் பிரயோஜனமா இருக்கும்

நபர் 4 : ஆமா ஆமா… பழம் சாப்பிடாமலேயே நாம கிழம் ஆயிடுவோம் போல… நாக்கு ருசி கேக்குது.

நபர் 5 : அவனை கண்டுபிடிச்சாங்கன்னா நல்லா இருக்கும். சீக்கிரம் கிடைச்சான்னா இன்னும் நல்லது.

நபர் 6 : ஆமா.. அவனுக்கு ஆபத்து ஏதும் இல்லாம இருக்கணும். சுகத்தோட அவன் இருக்கணும்.

 

 

பின் குரல் 6 : அப்போது மன்னர் வருகிறார். கூடவே அந்த காணாமல் போன பையன். பழம் பறிக்க காட்டுக்குப் போன பையன் வழி தவறி எங்கேயோ போய்விட்டான். மன்னர் அவனைத் தேடிக் கண்டுபிடித்து குதிரையில் ஏற்றி கையோடு அரண்மனைக்கு கொண்டு வந்தார். எல்லோருக்கும் ரொம்ப சந்தோசம். மன்னர் ஒரு பெரிய பார்ட்டி வைத்தார். எல்லோரும் ஆனந்தமாய் ஆடிப் பாடிக் கொண்டாடினர்.

நபர் 1 : ரொம்ப சந்தோசமான விஷயம். காணாமப் போன பையன் கிடைச்சுட்டான்.

நபர் 2 : பார்ட்டி வைக்கிறது ரொம்ப சரி.. இதை விட என்ன பெரிய சந்தோசம் ?

நபர் 3 : நல்ல பையன் அவன். அவன் இருந்தா தான் வேலை நல்லா நடக்கும்

நபர் 4 : மன்னர் சூப்பர்… பையனைத் தேடிக் கண்டுபிடிச்சுட்டாரு. இப்படி ஒரு மன்னர் இருந்தா மக்களுக்கு கவலையே இல்லை.

நபர் 5 : ஆமா, சின்னவனோ பெரியவனோ, வலியவனோ சிறியவனோ, பணக்காரனோ ஏழையோ, ஆணோ பெண்ணோ மன்னரோட பார்வையில எல்லாருமே சமம்.

நபர் 6 : கரெக்டா சொன்னே… மன்னர் ரொம்ப நல்லவர். நாமும் அவரைப் போல இருக்க முயற்சி பண்ணணும்.

 

Sep 26

Christianity : Sunday’s School Skit

Image result for walk like jesus

காட்சி 1 :

 

 

நபர் 1 : ( சோகமாக, ஏதோ யோசனையில் உலவிக் கொண்டிருக்கிறார் )

நபர் 2 : ஹேய்… என்னப்பா என்ன யோசனை ? நோவா கப்பல் செய்றதுக்கு கூட இப்படி யோசிச்சிருக்க மாட்டாரு போல. என்ன விஷயம் ?

ந 1 : நோவாக்கு கடவுள் எல்லாத்தையும் சொல்லிட்டாருப்பா. சோ, அவருக்கு யோசிக்க வேண்டிய தேவை இல்லை. பட்… எனக்கு ஒரு குழப்பம்..

ந 2 : என்ன குழப்பம்ன்னு சொல்லு… எனக்கு தெரியுமான்னு பாக்கறேன்.

ந 1 : மேட்டர் வேற ஒண்ணும் இல்லை. “இயேசுவைப் போல நட, இயேசுவைப் போல பேசு” ங்கற தலைப்பில எனக்கு ஒரு பேச்சுப் போட்டி. இயேசுவைப் போல பேசறது, நடக்கறது எப்படி ?ன்னு யோசிக்கிறேன்.

ந 2 : ம்ம்.. இது கொஞ்சம் யோசிக்க வேண்டிய விஷயம் தான். இயேசு அராமிக் ல பேசினாரு, அப்போ நாமும் அப்படி பேசணுமோ ?

ந 1 : டேய்.. சும்மா கிண்டல் பண்ணாதே… இயேசுவோட குணாதிசயம் பற்றினது டா..

ந 2 : புரியுது புரியுது… ஐ திங்க்… ஐ டோன்ட் நோ… இயேசுவைப் போல பேசறதுன்னா… மே பி… தத்துவம் பேசறதோ ?

ந 1 : நீ என்னை ஓவரா குழப்பறே… நீ பேசாம இருந்தாலே போதும்ன்னு நினைக்கிறேன்.

( அப்போது மூன்று ந‌ண்ப‌ர்க‌ள் வ‌ருகிறார்க‌ள் )

 

ந‌ 4 : ஹேய்.. என்ன‌ப்பா ? ரோட் சைட்ல‌ சுத்திட்டிருக்கீங்க‌ ? என்ன‌ விஷ‌ய‌ம் ?

ந‌ 2 : வாங்க‌டா.. இவ‌னுக்கு ஒரு ட‌வுட்டு…

ந‌ 5 : ம்ம்.. பாத்தாலே தெரியுது. என்ன‌ ட‌வுட்டு.

ந‌ 1 : இயேசுவைப் போல நடக்கிறது, பேசறதுன்னா எப்படி ? சொல்லு பாப்போம்.

ந‌ 3 : இதுவா.. சிம்பிள். அவ‌ர் எல்லார் கிட்டேயும் அன்பா இருந்தாரு. அன்பா ப‌ழ‌கினாரு. அன்பா பேசினாரு, அன்பா நடந்துகிட்டாரு.

ந‌ 1 : அதான் எப்ப‌டின்னு கேக்க‌றேன்.

ந‌ 3 : எப்ப‌டின்னா.. அப்ப‌டித் தான்…

ந‌ 2 : இவ‌னோட‌ குழ‌ப்ப‌த்தைத் தீக்க‌ணும்ன்னா நாம‌ இயேசுவை போய் பாத்தா தான்டா முடியும்… ஓவ‌ரா குழ‌ம்ப‌றான்.. ந‌ம்மையும் குழ‌ப்ப‌றான்.

ந‌ 5 : போய் பாத்துடுவோமா ?

ந‌ 2 : உட்டா.. இவ‌ன் ந‌ம்ம‌ளை போட்டுத் த‌ள்ளிடுவான் போல‌.

ந‌ 5 : இல்ல‌டா.. நாம‌ டைம் மிஷின்ல‌ இயேசுவோட‌ கால‌த்துக்கே போய் பாத்துட்டு வ‌ந்தா என்ன‌ ?

ந‌ 1 : என்ன‌ சினிமால‌ எல்லாம் வ‌ருமே.. பெரிய‌ பொட்டிக்குள்ள‌ போய் அப்ப‌டியே ப‌ழைய‌ கால‌த்துக்கு போற‌து.. அதுவா ? காமெடி ப‌ண்றான்டா..

ந‌ 5 : காமெடி இல்லை. இதோ பாரு நான் கைல‌ க‌ட்டியிருக்கிற‌ வாட்ச். இது வாட்ச் இல்லை. டைம் மிஷின். என் அப்பா உருவாக்கின‌து.

ந‌ 2 : வாட்.. ? வாட்ச் ல‌ டைம் மெஷினா ?

( எல்லோடும் அருகில் வ‌ந்து உற்றுப் பார்க்கிறார்க‌ள் )

 

ந‌ 3 : பெரிய‌ வ‌ண்டி மாதிரி தானேடா இருக்கும் அது ?

ந‌ 5 : அதெல்லாம் விஷ‌ய‌ம் தெரியாத‌வ‌ங்க‌ சொல்ற‌து. இப்ப‌ பாரு.. இந்த‌ வாட்ச்ல‌ ஒரு டேட் அன்ட் டைம் செட் ப‌ண்ண‌ணும். அப்ப‌ற‌ம் நாம‌ எல்லாரும் கைக‌ளை இப்ப‌டி சேத்துப் புடிக்க‌ணும். தென், இந்த‌ ப‌ட்ட‌னை அமுக்க‌ணும். அவ்ளோ தான்.

ந‌ 4 : சூப்ப‌ர் டா. இதுவ‌ரை நான் கேட்ட‌துல‌யே சூப்ப‌ர் ஜோக் இது தான்.

ந‌ 5 : டேய்.. க‌லாய்க்காதீங்க‌. வாங்க‌ உங்க‌ளுக்கு நானே செஞ்சு காமிக்கிறேன்.

( எல்லோரும் கைக‌ளை ம‌டித்து ஒருவ‌ருக்கொருவ‌ர் பிடித்துக் கொள்கிறார்க‌ள் )

 

 

 

 

 

காட்சி 2

 

( 5 பேரும் சுற்றும் முற்றும் பார்க்கிறார்க‌ள் )

ந‌ 5 : நாம‌ இயேசு பிற‌ந்த‌ கால‌த்துல‌, அவ‌ரோட‌ ஊருக்கு வ‌ந்திருக்கோம்.

ந‌ 1: நிஜ‌மாவா சொல்றே.. வாவ்..

ந‌ 3 : ப‌ய‌மா இருக்கு.. வாட்ச் ல‌ பேட்ட‌ரி இருக்கா ? திரும்பி போக‌ ?

ந‌ 4 : ப‌ய‌ப்ப‌டாதே…  முத‌ல்ல‌ இயேசுவைப் பாப்போம்.

ந‌ 1 : இயேசுவை நேர‌டியா பாக்க‌ போறோமா .. ( ஆச்ச‌ரிய‌மாய் துள்ளுகிறான் )

( அப்போது ஒருவர் உற்சாகமாய் ஓடிக்கொண்டே இருக்கிறார்.

ந 6 : வாவ்… வானம் எவ்ளோ அழகா இருக்கு.. ( குதித்து அந்தப் பக்கம் போகிறார் )…..

வாவ்… மரங்களெல்லாம் எவ்ளோ.. அழகு…

( ந1 முதல் 5 தங்களுக்குள் பேசிக் கொள்கிறார்கள்… இவன் லூசு போல.. முதல் முதல்ல பாக்கறவனே லூசாவா இருக்கணும் கடவுளே )

வாவ்… பூ எவ்ளோ அழகா இருக்கு.

 

ந 1 : ஹலோ… சார்… ஹலோ… ஒரு நிமிசம்

( ந‌ப‌ர் நின்று திரும்பிப் பார்க்கிறார் )

ந‌ 6 : ஷாலோம் அலைக் கும்

ந‌ 1 : என்ன‌டா.. முஸ்லிம் நாட்டுல‌ வ‌ந்துட்டியா ?

ந‌ 5 : நோ..நோ.. ஷ‌லோம் அலைக்கும் ந்னா உங்க‌ளுக்கு ச‌மாதான‌ம் உண்டாக‌ட்டும் ந்னு சொல்ற‌ ஹீப்ரூ வார்த்தை. ஒரு நிமிஷ‌ம்… என்னோட‌ வாட்ச் ல‌ லேங்குவேஜ் சிங்க்ர‌னைசிங் ஆன் ப‌ண்றேன். அப்போ அவ‌ரு பேச‌ற‌து ந‌ம‌க்கு புரியும், நாம‌ பேச‌ற‌து அவ‌ருக்கு ‌ புரியும்.

ந‌ 1 : என்னென்ன‌வோ சொல்றே டா. அதைப் ப‌ண்ணு.

( வாட்சை பார்த்து ஏதோ செய்கிறான் )

 

ந‌ 2 : சார் வ‌ண‌க்க‌ம்.. ந‌ல்லா இருக்கீங்க‌ளா ?

 

ந‌ 6 : ந‌ல்லா இருக்கேன். நீங்க‌ யாரு ? உங்க‌ளை நான் பாத்த‌தே இல்லையே ( சிரிக்கிறார் ) ஆமாமா.. நான் தான் யாரையுமே பாத்த‌தில்லையே.. இப்போ பாக்கிறேனே.. ( மீண்டும் குதிக்கிறார் )

ந‌ 1 : சார் பிளீஸ்… ஒரு ஹெல்ப்.

ந‌ 6 : ஹெல்ப் ஆ ? என் கிட்டேயா ? என‌க்கே இப்போ தான் ஹெல்ப் கிடைச்சிருக்கு.. ஹேப்பி.. ஐம்..ஹேப்பி…

ந‌ 2 : சார்.. உங்க‌ளுக்கு ஜீஸ‌ஸ் தெரியுமா ? அவ‌ரை எங்கே பாக்க‌லாம் ந்னு சொல்றீங்க‌ளா ?

ந‌ 6 : ஜீஸ‌ஸ் ?? அது யாரு ?? தெரியாதே…

ந‌ 3 : அதான்.. சிலுவைல‌ எல்லாம் அறைஞ்சு…

ந‌ 4 : டேய்.. அதெல்லாம் இன்னும் ந‌ட‌க்க‌ல‌… இயேசு இப்போ இங்கே ம‌னுஷ‌னா வாழ்ந்திட்டிருக்காரு.. வாயை மூடு..

ந‌ 3 : ஓ..யா. ம‌ற‌ந்துட்டேன்.. சாரி..

ந‌ 1 : சார்.. ஜீஸ‌ஸ் தெரியாதா ? ரொம்ப‌ பாப்புல‌ரா ஒருத்த‌ர்… மேரியோட‌ பைய‌ன்… ஜோசப்அவ‌ரோட‌ அப்பா ?

ந‌ 6 : என்ன‌ சொல்றீங்க‌ புரிய‌லையே…

ந‌ 2 : நிறைய‌ அற்புத‌மெல்லாம் செய்வாரே… முட‌வ‌னை ந‌ட‌க்க‌ வைப்பாரு… குருட‌னை பாக்க‌ வைப்பாரு.. இப்ப‌டி… ஜீச‌ஸ்… ஜீச‌ஸ்…

ந‌ 6 : அப்ப‌டி ஒரு ஆளை தெரியும் அவ‌ர் பேரு ஜீச‌ஸ் இல்லை… ஈஸோ… அவ‌ரா ?

ந‌ 2 : எஸ் எஸ்… அவ‌ரே தான்.. ஈஸோ… ஈஸோ…

ந‌ 6 : அவ‌ரு தான் என‌க்கு பார்வை குடுத்தாரு.. நான் பாக்க‌றேன்.. ஜாலி ஜாலி ( குதிக்கிறான் )

ந‌ 2 : ஓ.. அப்ப‌டியா. .உங்க‌ பேரு பார்த்திமேயு வா ?

ந‌ 6 : ச‌ட்டென‌ நிற்கிறார். என் பேரு எப்ப‌டி உங்க‌ளுக்குத் தெரியும் ? நீங்க‌ யாரு ? அன்னாவோட‌ ஆட்க‌ளா ? பிளீஸ் விட்டுடுங்க‌… ( ப‌ய‌ப்ப‌டுகிறார் )’

ந‌ 4 : இல்ல‌.. இல்ல‌.. நாங்க‌ ஈஸோ எப்ப‌டிப்ப‌ட்ட‌வ‌ருன்னு பாக்க‌ பிற்கால‌த்துல‌ இருந்து…. ஐ..மீன்.. தொலை தூர‌த்துல‌ இருந்து வ‌ந்திருக்கோம்…

ந‌ 6 : அப்ப‌டியா வாங்க‌.. வாங்க.. அவ‌ரு மாதிரி ஒருத்த‌ரை பாக்க‌வே முடியாது. அவ‌ரோட‌ க‌ண்ணைப் பாத்தா போதும்.. அவ்ளோ சாந்த‌ம். அவ‌ரோட‌ பேச்சைக் கேட்டா அவ்ளோ அமைதி. அவ‌ர் ப‌க்க‌த்துல‌ நின்னா அவ்வ‌ளோ ச‌ந்தோச‌ம்… வாவ்..வாவ்.. ஈஸோ.. ஈஸோ.. த‌ரையில் விழுந்து வ‌ண‌ங்குகிறான்.

ந‌ 3 : அவ‌ரை நாங்க‌ பாக்க‌ முடியுமா ?

ந 6 : அவரை யாரு வேணும்ன்னாலும், எப்போ வேணும்ன்னாலும் பாக்கலாம். அவ்ளோ எளிமையான மனிதர். எந்த பந்தாவும், கர்வமும் இல்லை. எல்லார் கிட்டேயும் ரொம்ப அமைதியா அன்பா தான் நடந்துப்பார்.  இப்போ கப்பர் நகூம் பக்கத்துல இருப்பாருன்னு நினைக்கிறேன்.ந‌ 2 : அவ‌ரைப் ப‌ற்றி கொஞ்ச‌ம் சொல்லுங்க‌ளேன்…

ந‌ 6 : போய் பாருங்க‌.. அவ‌ரைப் ப‌ற்றி சொல்ற‌து, கேக்க‌ற‌தெல்லாம் ஒண்ணுமே இல்லை.. ஒருவாட்டி பாருங்க‌.. அப்போ தான் தெரியும்.

 

( சொல்லிக் கொண்டே ஆன‌ந்த‌மாய்ப் போகிறார்

 

 

 

காட்சி 3 :

 

( ந 1 – ‍ 5 போகும் வழியில் சிலர் வருகிறார்கள் )

 

ந 7 : வாவ்.. என்னா பேச்சு.. கேட்டுட்டே இருக்கலாம் போல இருந்துச்சு.

ந 8 : ஆமா..ஆமா.. இப்படி ஒரு பேச்சை நான் கேட்டதே இல்லை.

ந 9 : இதுவரைக்கும் கடவுளுடைய வார்த்தையைக் கேட்டா பயமா இருக்கும். இப்போதான் கடவுளோட வார்த்தையை கேட்கும்போ ஆனந்தமா இருக்கு. சிலிர்ப்பா இருக்கு. கடவுள் அவ்ளோ அன்பானவரா ?

ந 10 : நமக்கு இந்த பாக்கியம் கிடைச்சது எவ்ளோ பெரிய விஷயம்.

ந 8 : ஆமா..ஆமா… ஆனா, என்னா கூட்டம். பசியே தெரியல…

ந 7 : பசி தெரியாட்டா கூட நல்லா சாப்டோமே

( ந 1 முதல் 5 வருகிறார்கள் )

 

ந 1 : நீங்க பேசினதை கேட்டிட்டு இருந்தோம். நீங்க ஈஸோ பத்தி தான் பேசறீங்களா ?

ந 7 : ஆமா.. ஆமா.. உங்களுக்கு அவரை தெரியுமா ? நீங்க வந்திருந்தீங்களா ?

ந 2 : இல்லை.. வரலை.. அவர பாக்க தான் போனோம்.

ந 9 : ஓ.. அவர் பத்தி உங்களுக்கு தெரியுமா ? ஒரு ஆட்டுக்குட்டி க‌தை சொன்னாரு.. ரொம்ப அற்புதம்..

ந‌ 5 : காணாம‌ போன‌ ஆடா ? நூறு ஆடுக‌ள் கிட்டேயிருந்து.

ந 8 : ஆமா..ஆமா.. உங்க‌ளுக்கு எப்ப‌டி தெரியும்.

ந‌ 2 : நாங்க‌ பைபிள்ல‌ ப‌டிச்சிருக்கோம்..

ந‌ 9 : பைபிள்ல‌யா ? அதென்ன‌ பைபிள் ?

ந‌ 1 : அதை விடுங்க‌.. அவ‌ன் ஏதோ ஒள‌ர்றான்… இயேசு எப்ப‌டி ? அன்பான‌வ‌ரா ?

ந‌ 8 : என்ன‌ இப்ப‌டி கேட்டுட்டே… அவ‌ரை மாதிரி அன்பான‌வ‌ரை பாக்க‌வே முடியாது அவரைப் பாத்தா நாமளும் அவரை மாதிரியே மாறணும்ன்னு தோணும். அவர் பேசறதெல்லாம் செயல்படுத்தணும்ன்னு தோணும். சந்தோசமா இருக்கும். போத‌னையும் செஞ்சிட்டு.. சாப்பாடும் குடுத்தாரு.. அதுவும்.. ஆயிர‌க்க‌ண‌க்கான‌ ம‌க்க‌ளுக்கு…

ந‌ 2 : ஓ.. 5 அப்ப‌ம், 2 மீனா ?

ந‌ 9 : உங்க‌ளுக்கு எல்லா விஷ‌ய‌மும் தெரிஞ்சிருக்கு ? எப்ப‌டி ? நீங்க‌ உள‌வாளிக‌ளா ? ரோம‌ அர‌சு உள‌வாளிக‌ளா ? சின்ன பிள்ளைங்களா இருக்கீங்க.. ஆனா எல்லா விஷயமும் தெரிஞ்சிருக்கு.

ந‌ 3 : இல்லை..இல்ல‌… இன்னொருத்த‌ர் சொன்னாரு.. அதான் நாங்க‌ இயேசுவைப் பாக்க‌ போலாம்ன்னு கிள‌ம்பினோம்.. அவ‌ரு எங்கே இருப்பாரு ?

ந‌ 9 : இயேசு.. ??

ந‌ 2 : ஈஸோ.. ஈஸோ..

ந‌ 7 : போங்க‌.. அவ‌ரு பேசிட்டு நைட் ம‌லைக்கு மேல‌ ஏறி போனாரு எங்கே இருப்பாருன்னு தெரிய‌ல‌.

ந‌ 3 : ந‌ன்றிங்க‌

 

( போகிறார்க‌ள் )

அவர்கள் தொடர்ந்து நடக்கிறார்கள்..

ந 2: ஹேய்.. அங்க பாரு.. பெரிய கூட்டம். கண்டிப்பா இயேசுவா தான் இருக்கும். வா.. ஓடிப் போய் பாப்போம்.

 

 

 

காட்சி 4

 

( இயேசு போதித்துக் கொண்டிருக்கிறார் , சிலர் உட்கார்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் இயேசுவைப் பார்த்த மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கிறார்கள் )

 

ந 1 : ஹேய்.. இயேசு இயேசு..

ந 2 : ஆமா..இயேசப்பா எவ்ளோ சிம்ளா இருக்காரு…

 

Jesus :

நான் சொல்வதைக் கேட்டுப் புரிந்துகொள்ளுங்கள். வாய்க்குள் செல்வது மனிதரைத் தீட்டுப்படுத்தாது; மாறாக வாயிலிருந்து வெளிவருவதே மனிதரைத் தீட்டுப் படுத்தும். மனிதர் பேசும் ஒவ்வொரு வீண் வார்த்தைக்கும் தீர்ப்பு நாளில் கணக்குக் கொடுக்கவேண்டும். உங்கள் வார்த்தைகளைக் கொண்டே நீங்கள் குற்றமற்றவர்களாகக் கருதப்படுவீர்கள்; உங்கள் வார்த்தைகளைக் கொண்டே குற்றவாளிகளாகவும் கருதப்படுவீர்கள்

ந 2 : ஆமா..இயேசப்பா எவ்ளோ சிம்ளா இருக்காரு…

ந 3 : என்னால மகிழ்ச்சியை கட்டுப்படுத்தவே முடியல..

( அவர்கள் சிரித்து மகிழ்ச்சியாய் குதிக்கிறார்கள் )

அப்போது சிலர் வந்து.

ந 11 : ஏய்.. நீங்கல்லாம் யாரு.. பேசாம இருக்க மாட்டீங்க ? பெரியவங்க பேசிட்டிருக்காங்கல்ல..

ந 12 : ஈஸோ பேசறாரு.. அமைதியா இருங்க.

ந 11 : அவரோட பேச்சைக் கேக்கறதுக்கு எல்லாரும் காத்திட்டிருக்காங்க.. நீங்க வந்து இடைஞ்சல் பண்ணாதீங்க…

ந 12 : இனிமே ஒரு சின்ன சத்தம் கூட வரக்கூடாது.. ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்..

( இயேசு பேசுகிறார் )

இயேசு : குழ‌ந்தைக‌ளை ச‌த்த‌ம் போடாதீங்க‌. நீங்க‌ வாங்க‌.. ( குழ‌ந்தையை அழைக்கிறார் )

ஒரு குழ‌ந்தையைப் போல‌ நாம‌ மாற‌ணும். அது தான் விண்ண‌க‌ வாழ்வுக்கு போற‌துக்கான‌ ஒரே வ‌ழி. க‌ள்ள‌ம் க‌ப‌ட‌மில்லாம‌, எப்போதும் த‌ந்தையையே சார்ந்திருக்கும் குழ‌ந்தையைப் போல‌, நாம‌ க‌ட‌வுளையே சார்ந்து இருக்க‌ணும்.

ஆனா இப்படிப் பட்ட ஒரு சின்ன பிள்ளையை தீய வழியில ஒருத்தன் கூட்டிட்டு போறான்னா அவன் கழுத்துல பாறாங்கல்லைக் கட்டி கடல்ல போடுங்க. அது தான் அவனுக்கு நல்லது. அவ்ளோ பெரிய தவறு அது.

ந‌ 2 : இயேச‌ப்பா.. ஒரே ஒரு கேள்வி.. கேக்கலாமா பிளீஸ் ?.

இயேசு : புன்ன‌கைக்கிறார்

ந‌ 2 : உங்களைப் போல நடக்கிறதுன்னா என்ன ?  எப்ப‌டி ?

இயேசு : முதல்ல உங்க மனசு அன்பால நிறையணும். உள்ள‌த்தின் நிறைவிலிருந்தே வாய் பேசும். உள்ள‌த்தில் உள்ளவையே செய‌ல்க‌ளாய் வெளியே வ‌ரும். அப்போ உங்களுடைய வார்த்தைகளெல்லாம் அன்பான வார்த்தைகளா வரும்.

பேசும்போ ரெண்டு விஷயம் மனசுல வெச்சுக்கோங்க. நாம பேசறது சரியான விஷயம் தானா ? நாம பேசற விதம் கனிவா இருக்கா ? இந்த ரெண்டு விஷயத்தையும் ஒவ்வொரு தடவை பேசும் முன்னாடியும் நீங்க யோசிச்சு பேசினா போதும். பேச்சு இனிமையாகும். இதை நீங்கல்லாம் நீதிமொழிகள்ல படிச்சிருப்பீங்க.

ஒவ்வொரு விஷயத்தையும் கடவுள் கிட்டே கேட்டு, அவர் கிட்டே செபம் பண்ணிட்டு செய்ங்க. அப்போ நீங்க நடக்கிற வழி இறைவனுக்குப் பிரியமானதா இருக்கும். நான் என் தந்தையிடம் செபம் செய்யாம இருந்ததே இல்லை. நீங்க என்னோட கிளைகள், நீங்களும் அதையே செய்ங்க.

ந‌ 2 : ந‌ன்றி இயேச‌ப்பா.. வேற‌ என்ன‌ ப‌ண்ண‌ணும் இயேச‌ப்பா

இயேசு : பைபிளை ப‌டி.. அதுல‌ எல்லாமே இருக்கு. க‌ட‌வுளோட‌ வார்த்தைக‌ள் உன்கிட்டே டெய்லி பேசும். பரிசுத்த ஆவியானவர் உங்களுக்கு வழிகாட்ட இருக்கார். இவ்ளோ தூர‌ம் வ‌ந்து தான் பாக்க‌ணும்ன்னு இல்லை.

ந‌ 11 : ஈஸோ.. பைபிளா ? அதென்ன‌ ? இவ‌ங்க‌ளை உங்க‌ளுக்கு தெரியுமா ? யார‌ந்த‌ ப‌ரிசுத்த‌ ஆவி ?

இயேசு : புன்ன‌கைக்கிறார். நான் சொல்வ‌து இன்ன‌தென்று உங்க‌ளுக்கு இப்போ புரியாது. ஆனா இவ‌ங்க‌ளுக்கு புரியும். போயிட்டு வாங்க‌. அன்பாவே இருக்கிற‌தைப் போல‌ அழ‌கான‌ விஷ‌ய‌ம் வேற‌ இல்லை.

 

( ந‌ன்றி இயேச‌ப்பா )

 

அவ‌ர்க‌ள் விடைபெறுகிறார்கள்.

 

ந 1 : இயேசப்பாவைப் பாத்தது ரொம்ப சூப்பர்டா… ஆனா அதை யாருமே நம்ப மாட்டாங்க.

ந 2 : இயேசப்பா சொன்னது ரொம்ப சரிடா. நம்ம கைல பைபிள் இருக்கு. கைல வெண்ணையை வெச்சுட்டு நெய்க்கு அலையற முட்டாளா நாம இருக்கோம்.

ந 3 : இனிமே நான் டோரேமான் பாக்கற நேரத்துல, பைபிள் தான் படிக்க போறேன். அன்பா இருக்கிறதைப் பற்றி நெறைய கத்துக்கப் போறேன்.

ந 4 ; நானும் அப்படித் தான். கடவுளோட வார்த்தையைக் கைல வெச்சுட்டு கடவுளைத் தேடி அலையறது மிகப்பெரிய முட்டாள் தனம் தான்டா…

ந 5 : ஒண்ணு மட்டும் புரிஞ்சுதுடா எனக்கு. இயேசுவைப் போல நடக்கிறதும் பேசறதும் ஒரு இனிமையான அனுபவம். அதுக்கு பரிசுத்த ஆவி நமக்கு ரொம்ப அவசியம். கடவுளை முழுமனசோட  நேசிச்சா, கடவுளை மாதிரி மனுஷங்களை நேசிக்க அவர் நமக்கு வழிகாட்டுவார். க‌ட‌வுளை நேசி, ம‌னித‌னை நேசி ங்க‌ற‌து தானே இயேச‌ப்பா சொன்ன‌ வாழ்க்கைத் த‌த்துவ‌ம்.

ந 3 . ஏமிகார்மைக்கேல் சொன்னது தான் ஞாபகத்துக்கு வருது. ஒரு டம்ளர் நிறைய சர்க்கரைத் தண்ணி இருந்தா சிந்தறதெல்லாம் இனிப்பு நீரா தான் இருக்கும். அதே போல தான், நாம அன்பாகவே இருந்தா செய்றதெல்லாம் அன்பா தான் இருக்கும்.

ந 3 : சூப்பர் டா.. சீக்கிரம் வீட்டுக்கு போலாம் டா..மம்மி தேடுவாங்க.

( மீண்டும் வாட்ச் மூல‌ம் நிக‌ழ்கால‌த்துக்கு வ‌ருகிறார்க‌ள் )

 

காட்சி 5 :

 

 

( தூங்கிக் கொண்டிருக்கும் ந1 ஐ எழுப்புறார் அம்மா )

அம்மா : டேய் .. எழும்புடா.. விடிஞ்சப்புறம் என்ன தூக்கம் உனக்கு.

ந 1 : அம்மா… நான்..( சுற்றும் முற்றும் பார்க்கிறான் )

அம்மா : என்னடா பாக்கறே ?

ந 1 : கையிலிருக்கும் வாட்சைப் பார்க்கிறான்

அம்மா : வாட்சை ஏண்டா பாக்கறே.. அதான் ஓடாத ஓட்ட வாச்சாச்சே. கிளாக்கைப் பாரு மணி ஏழு ஆச்சு.

ந 1 : சாரிம்மா.. தூங்கிட்டேன்.

அம்மா : சரி சரி.. வா.. டீ குடி.

ந 1 : அம்மா. என் பைபிள் எங்கேம்மா ?

அம்மா ; என்னடா.. அதிசயமா இருக்கு ? பைபிள் எல்லாம் கேக்கறே.

ந 1 : இனிமே நான் பைபிளை ரொம்ப நேரம் படிக்க போறேன்மா.. இவ்ளோ நாள் அதை மிஸ் பண்ணிட்டேன்.

அம்மா : புன்னகைக்கிறான். நன்றி இயேசப்பா.. இப்பவாச்சும் இந்த பையனுக்கு நல்ல புத்தியைக் குடுத்தீங்களே..

ந 1 : தோட்டத்துல ஏதோ பண்ணணும்ன்னு சொன்னீங்களேம்மா.. நான் கொஞ்ச நேரத்துல வந்துடறேன். பண்ணிடலாம்.

( அம்மா புரியாமல் பார்க்கிறாள். )

பின்குரல் :

 

என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள் என்றார் இயேசு. இரட்டை மாடுகள் வயல் உழுவதைப் பார்த்திருப்பீர்கள். ஒரு புறம் இயேசு, மறு புறம் நாம் என நடப்பது தான் அவருடைய நுகத்தை தோளில் ஏற்றிக் கொண்டு அவரிடம் கற்றுக் கொள்வது. தொடந்து அவரோடு இணைந்திருப்பதும், முரண்டு பிடிக்காமல் அவருடைய அழைப்புக்குச் செவி கொடுப்பதும் முக்கியமான தேவைகள்.

இயேசுவைப் போலப் பேசுவோம்

இயேசுவைப் போல நடப்போம்

அதற்கு நாம் செய்ய வேண்டிய ஒரே செயல், எப்போதும் அவரில் இணைந்திருப்பது மட்டுமே !

இறைவார்த்தையும், தூய‌ ஆவியான‌வ‌ரும் ந‌ம‌க்கு துணையாய் இருப்பார்க‌ள்.

Sep 25

Top 10 தாதா படங்கள்

கேங்ஸ்டர் திரைப்படங்களுக்கு எப்போதுமே ரசிகர்கள் ஏராளம் உண்டு. அதனால் தான் சர்வதேச அளவில் எல்லா மொழிகளிலும் தாதா திரைப்படங்கள் கோலோச்சிக் கொண்டிருக்கின்றன. நாயகன், கபாலி என தமிழிலும் தாதா படங்கள் முத்திரை பதித்திருக்கின்றன. ஒவ்வொரு நாட்டின் தலை சிறந்த நூறு திரைப்படங்களை வரிசைப்படுத்தினால் அதில் நிச்சயம் சில தாதா திரைப்படங்கள் நிச்சயம் இருக்கும்.

தாதா படங்களின் முன்னோடி என ஹாலிவுட் படங்களைச் சொல்லலாம். அங்கே வரிசைகட்டி வந்த பல தாதா படங்கள் கல்லா கட்டியிருக்கின்றன. சர்வதேச அளவில் மறக்க முடியாத பத்து கேங்க்ஸ்டர் திரைப்படங்கள் இவை.

Image result for godfather

 1. காட்ஃபாதர்.

 

1972ம் ஆண்டு வெளியான திரைப்படம் காட்ஃபாதர். பிரான்சிஸ் ஃபோர்ட் கோப்போலா இயக்கிய இந்தப் படம் திரைப்படக் கல்லூரிகளில் பாடமாக இருக்கிறது. அமெரிக்காவின் டாப் 10 திரைப்படங்களில் எப்போதுமே இடம்பிடிக்கும் ஒரு படம் இது என்பது குறிப்பிடத் தக்கது.

மரியோ பூசோ எழுதிய நாவலின் அடிப்படையில் உருவான இந்தப் படம் தாதா படங்களின் அஸ்திவாரம் எனலாம். இந்தத் திரைப்படத்தின் பாதிப்பில் உலகெங்கும் பல்வேறு படங்கள் உருவாக்கப்பட்டன. இந்திய மொழிகளிலும் பல படங்கள் காட்ஃபாதர் படத்தின் பாதிப்பில் உருவாகியிருக்கின்றன. சுமார் 6 மில்லியன் டாலர் செலவில் உருவான இந்த படம் பாக்ஸ் ஆபீஸில் அள்ளிக் கொட்டியது சுமார் 250 மில்லியன் டாலர்கள். இதன் அடுத்தடுத்த இரண்டு பார்ட்களும் கூட பரவசப் படுத்தும் வகையிலேயே இருக்கின்றன. தாதா பட ரசிகர்கள் தவற விடக் கூடாத படம் இது.

Image result for Good Fellas

 1. குட் ஃபெல்லாஸ்

 

ராபர்ட் டி நீரோ ஹாலிவுட் நடிகர்களில் சிறப்பிடம் பிடித்தவர். அவருடைய நடிப்பில் உருவான படம் தான் குட் ஃபெல்லாஸ். அவருடன் ரே லியோட்டா, ஜோ பெஸ்கி மற்றும் பலர் நடித்திருந்தனர்.  1990ம் ஆண்டு வெளியான இந்தப் படம் தாதா படங்களில் சிறப்பிடம் பிடிக்கிறது. விமர்சகர்களின் ஏகோபித்த வரவேற்பு இந்தப் படத்துக்கு உண்டு. இந்தப் படத்தில் நடித்ததற்காக ஜோ பெஸ்கிக்கு ஆஸ்கர் விருது கிடைத்தது. 25 மில்லியன் டாலர்கள் செலவில் எடுக்கப்பட்டு சுமார் ஐம்பது மில்லியன்கள் இந்தப் படம் சம்பாதித்தது.

Image result for Road to perdition

 1. ரோட்  டு பெர்டிஷன்

 

டாம் ஹேங்க்ஸ் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்க, ஹாலிவுட்டைக் கலக்கிய படம் இது. 2002ல் வெளியான இந்தப் படத்தை சேம் மென்டிஸ் இயக்கியிருந்தார். ஜேம்ஸ் பாண்ட் படங்களான ஸ்கை ஃபால், ஸ்பெக்ட்ரா போன்ற படங்கள் இவர் இயக்கியது தான். அமெரிக்கன் பியூட்டி படத்துக்காக சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கர் விருது வாங்கினார்.

ரோட் டு பெர்டிஷன் படத்தில் தாதா அம்சங்களுடன் தந்தை மகன் உறவையும் இணைத்து அழகாக படமாக்கியிருந்தார் இயக்குனர். சுமார் 80 மில்லியன் டாலர் செலவில் உருவாகி தயாரிப்பாளருக்கு 180 மில்லியன் டாலர்களைச் சம்பாதித்துக் கொடுத்தது இந்தப் படம்.

 

Image result for Casino movie 

 1. கேசினோ

 

மார்ட்டின் ஸ்கோர்ஸீ ஹாலிவுட்டில் தவிர்க்க முடியாத இயக்குனர். ஏவியேட்டர், டிபார்டட், ஷட்டர் ஐலன்ட் போன்ற சமீபத்திய படங்களுக்காக ஏகப்பட்ட ஆஸ்கார்களை அள்ளியவர். அவருடைய இயக்கத்தில் வந்த ஒரு அட்டகாசமான கேங்ஸ்டர் மூவி தான் கேசினோ. நிகோலஸ் பெலெஸ்கி என்பவரின் நாவலின் அடிப்படையில் இந்த படம் உருவாகியிருந்தது. ராபர்ட் டி நீரோ, ஷேரன் ஸ்டோன் மற்றும் ஜியோ பெஸ்கி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். சுமார் 50 மில்லியன் டாலர் செலவில் உருவாகி, சுமார் 120 மில்லியன்களை ஈட்டியது படம்.

Image result for pulp fiction

 1. பல்ப் பிக்ஷன்

 

1994ம் ஆண்டு வெளியான இந்த படம் பாக்ஸ் ஆபீஸில் பட்டையைக் கிளப்பியது. இன்றைய பணத்தின் மதிப்பீடு படி பார்த்தால் 50 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்டு 1400 கோடி சம்பாதித்த படம் என சொல்லலாம். இந்தப் படத்தின் மேக்கிங் மிகப்பெரிய பாராட்டைப் பெற்றது.

ஜான் ட்ரவோல்டா, சாமுவேல் ஜாக்ஸன் இணை மிரட்டியது. ஏழு ஆஸ்கர் விருதுகளுக்குப் பரிந்துரை செய்யப்பட்டு ஒரு விருதை வாங்கியது. ஆஸ்கர் தாண்டி ஏகப்பட்ட விருதுகளை அள்ளிக் கொண்டது இந்தப்படம். காட்பாதர் போன்ற தாதா ஸ்டைலிலிருந்து முற்றிலும் மாறுபட்ட படம் இந்த பல்ப் பிக்ஷன். சினிமா ரசிகர்களுக்கான விருந்து.

Image result for little caesar film

 1. லிட்டில் சீசர்

 

ஹாலிவுட் திரைப்படங்களிலேயே முதன் முதலாக வெளியான ஒரு முழு நீள தாதா படம் இது தான். சுமார் ஒன்றே கால் மணி நேரம் ஓடக்கூடிய இந்தப் படம் 1931ம் ஆண்டு வெளியானது. ஹாலிவுட் கேங்ஸ்டர் படங்களின் டாப் பட்டியலில் எப்போதும் இதற்கொரு தனி இடம் உண்டு. மெர்வின் லி ராய் இந்தப் படத்தை இயக்கியிருந்தார். 1987ம் ஆண்டு மரணமடைந்த இவர் இன்றும் ஹாலிவுட் இயக்குனர்களின் வரிசையில் மிக முக்கியமான இடத்தில் இருக்கிறார்.

Image result for Scar face

 

 1. ஸ்கார்ஃபேஸ்

 

1932ம் ஆண்டு வெளியான படம் ஸ்கார்ஃபேஸ். அதே கதையை சுமார் 51 ஆண்டுகளுக்குப் பின் 1983ம் ஆண்டு அதே தலைப்பில் எடுத்தார்கள். முதல் படத்தில் பால் முனி நடித்திருந்தார். இரண்டாவது வெர்ஷனில் நடித்திருந்தவர் அல்பசினோ. இவருக்கு தாதா வேடங்கள் அல்வா சாப்பிடுவது போல. அதை காட்ஃபாதர் படத்திலும் நிரூபித்திருப்பார். அனாயசமான, இயல்பான மேனரிசத்தின் மூலம் பார்வையாளர்களைக் கட்டிப் போடுபவர் இவர்.

பிரையன் டி பல்மா இந்த படத்தை இயக்கியிருந்தார். மிஷன் இம்பாஸிபிள் படத்தை இயக்கி டாம் குரூஸை உச்சத்தில் அமர்த்தியதும் இவர் தான். ஸ்கார்ஃபேஸ் படத்தின் இரண்டு பதிப்புகளுமே தாதா படங்களில் மறக்கமுடியாத படங்களே.

Image result for White heat

 

 1. வயிட் ஹீட்

 

1949ம் ஆண்டு வெளியான இந்தப் படம் ஹாலிவுட் திரைப்படங்கள் பற்றி படிப்பவர்களுக்கு ஒரு பாடமாய் இருக்கிறது. ஒரு அக்மார்க் கேங்ஸ்டர் மூவி எனும் பெயரையும் நல்ல விமர்சனங்களையும் பெற்ற படம் இது. ரோல் வால்ஷ் இயக்கிய இந்தப் படம் அவருடைய திரைப்பட வரலாற்றில் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. அமெரிக்கன் ஃபிலிம் இஸ்ட்டிடியூட் வரிசைப்படுத்தும் டாப் 10 படங்களில் இந்தப் படமும் இடம் பிடித்திருக்கிறது.

Image result for Bonnie and Clyde

 1. போனி அன்ட் கிளைட்

 

எப்போதும் பாதுகாத்து வைக்கவேண்டும் என அமெரிக்கா பட்டியலிட்டுள்ள படங்களின் லிஸ்ட் ஒன்று உண்டு. அதில் இந்தப் படத்துக்கும் ஒரு சிறப்பிடம் உண்டு. ஆர்தர் பென் இயக்கிய இந்தப் படம் 1967ம் ஆண்டு வெளியானது.

சுமார் 2.5 மில்லியன் செலவில் எடுக்கப்பட்டு 70 மில்லியன் டாலர்களை அள்ளிக் கொட்டியது இந்தப் படம். எந்தக் காலத்திலும் கேங்க்ஸ்டர் மூவிகளுக்கான மரியாதை குறையாது என்பதற்கு இது ஒரு மாஸ்டர் கிளாஸ் உதாரணம். வேரன் பெட்டி இந்தப் படத்தில் முதன்மைப் பாத்திரத்தில் நடித்திருந்தார்.

Image result for City of God

 1. சிட்டி ஆஃப் காட்

 

பிரேசில் நாட்டில் உருவான ஒரு மிரட்டலான தாதா படம் இது. 2003ம் ஆண்டு சர்வதேச அளவில் இது ஆங்கிலம் பேசியபடி வெளியானது. பாலோ லின்ஸ் எழுதிய நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட படம் இது. மெக்ஸிகன் நடிகர்கள் நடித்திருந்த இந்தப் படம் ஹாலிவுட்டில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. மூன்று மில்லியன் போட்டு முப்பது மில்லியனை இது சம்பாதித்தது. பல ஆஸ்கார் விருதுகளுக்குப் பரிந்துரை செய்ப்பட்ட இந்தப் படம் ஆஸ்கர் விருதை வெல்லவில்லையெனினும் பல்வேறு உயரிய விருதுகளைச் சொந்தமாக்கியது.

 

 

 

 

 

 

 

Sep 23

நிற்காத நிமிடங்கள்

Image result for couple bed sad

விரல் உரசினாலே
மின்னலடித்த காலம் உண்டு
என்
உதடுகள் உரசினால் கூட
சலனமற்றிருக்கிறாய்
இப்போது.

உன்னுடைய
மனசுக்கு வயதாகி விட்டது.
உன்னுடைய
காமத்தின் கலத்தில்
ஊற்றப்பட்டிருந்த காதல்
காலாவதியாகி விட்டிருக்கிறது.

உன்னுடைய
பேச்சிலிருந்த
கவிதை காணாமல் போய்
அவசர தொனியே
அலாரமடிக்கிறது எப்போதும்.

உன்னுடைய
கோபத்தின் எருதுகள்
மிருதுவான புன்னகையை
மிதித்துச் செல்கின்றன.

என்னோடு அமர்ந்து
பேசிக்கொண்டிருப்பது
உனக்கு
நேரத்தை வீணடிப்பதாகி விட்டது.

நீர்வீழ்ச்சியிலேயே
தங்கி விட முடியாத
தண்ணீர் துளியின் தவிப்புடன்
ஓடிக் கொண்டே இருக்கிறேன்.

அடுத்த
அருவியின்
வரைபடமில்லாமல்,
வெறும்
எதிர்பார்ப்புகளை ஏந்திக்கொண்டு.

Older posts «